சென்னைக்கு 'சக்கரம்'! வயிற்றில் பாலை வார்த்த தமிழ்நாடு வெதர்மேனின் வார்த்தை!
சென்னை: வடகிழக்கு பருவமழை தொடங்கும்போது என்னவோ சிறப்பாகத்தான் இருந்தது. ஆனால், இந்த ஆண்டு எதிர்பார்த்த அளவுக்கு மழை இல்லை. இப்படி இருக்கையில், சென்னையை நோக்கி புயல் வர வாய்ப்பு இருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியிருக்கிறார்.
மழை பற்றாக்குறையால் சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக இருக்கும் ஏரிகளில் நீரின் அளவு குறைந்துக்கொண்டே வருகிறது. இப்படி இருக்கையில் சென்னைக்கு புயல் என்று வெதர்மேன் கூறியிருப்பது மழை குறித்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இது குறித்து அவர் தனது x பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது, "நவம்பர் மாதம் முடியப்போகும் நிலையிலும் எல் நினோ ஆண்டு என்பதால் சொல்லிக்கொள்ளும்படியான பெரிய வானிலை நிகழ்வுகள் ஏதும் இல்லாமல் போனது சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்கககளின் இந்த ஆண்டு பருவமழை சோக கதையை சொல்கிறது. வானிலை குறித்து எழுத சுவாரசியமான செய்திகள் ஏதும் இல்லாமல் நாட்கள் நகர்கின்றன. மழையும் பெய்ய மறுக்கிறது.
டிச.1-2 ஆகிய தேதிகளில் சென்னையில் ஓரளவு மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஆனால், இது சென்னையின் குடிநீர் ஏரிகளின் நீர்மட்டத்தை உயர்த்தும் அளவுக்கு பெரிய மழையாக இருக்காது. தற்போதைய வறண்ட சூழலில், வானிலை மாதிரிகளில் குறிப்பாக GFS மாதிரி மட்டும் டிசம்பர் முதல் வாரத்தில் சென்னையை நோக்கி ஒரு பெரிய புயல் சின்னம் (சக்கரம்) வருவதாக காட்டுகிறது.
ஆனால், அது GFS மாதிரி ஆச்சே! அதன் கணிப்பை நம்புவது என்பது, நாளை சென்னையில் பனிப்பொழிவு ஏற்படும் என்று சொல்வதற்கு சமம்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.
GFS-ஐ நம்புவது ஏன் தவறானது?
GFS என்றால் Global Forecast System என்று அர்த்தம். இதிலிருந்து பெறப்படும் மாதிரி, குறிப்பாக 10-15 நாட்களுக்கு பிந்தைய வானிலையை கணிக்கும்போது கடலில் இல்லாத புயல் சின்னங்களை கூட மிகைப்படுத்தி காட்டும். ஆரம்பத்தில் ஒரு பெரிய புயல் உருவாகி.. கரையை கடப்பதாக காட்டும். ஆனால், நாட்கள் நெருங்க நெருங்க.. அந்த புயல் காணாமல் போய்விடும் எனவேதான் வெதர்மேன் இதை நம்ப முடியாது என்று கூறியிருக்கிறார்.


Click it and Unblock the Notifications
