இந்து, முஸ்லிம் ஒற்றுமையாகவே உள்ளனர்! அரசியலால்தான் குழப்பம்! தீபம் ஏற்றிய முன்னாள் நீதிபதி பேட்டி
மதுரை: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்றப்பட்ட நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய ஓய்வு பெற்ற நீதிபதி பார்த்திபன், "தமிழ்நாட்டை பொறுத்தவரை இந்து முஸ்லீம் ஒற்றுமையாக தான் வருகின்றனர். இங்கு எந்த மத கலவரமும் கிடையாது. தீபம் ஏற்றியது மகிழ்ச்சியாக இருக்கிறது" என்று கூறினார்.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, ஓய்வுபெற்ற நீதிபதிகள் உள்பட வழிகாட்டுதல் குழுவினர் முன்னிலையில், சிஆர்பிஎப் வீரர்களின் பாதுகாப்புடன் இன்று மாலை 5 மணிக்கு மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்றப்பட்டது.

முன்னதாக, திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் இருந்து மேளதாளங்கள் முழங்க தலா 5 லிட்டர் கொள்ளளவு கொண்ட களிமண்ணில் தயாரான 3 தீபசட்டிகள், 15 லிட்டர் நெய், நெய்யில் பதப்படுத்தப்பட்ட கடா துணியிலான திரி, ஒரு கிலோ கற்பூரம் உள்ளிட்ட தீப உபகரணங்கள் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டது. சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓதி தீப அர்ச்சனைகள செய்தனர். இதனையடுத்து ஓய்வு பெற்ற நீதிபதிகள் வைத்தியநாதன், பி பார்த்திபன் முன்னிலையில் திருவண்ணாமலையில் இருந்து வந்த தீப நிபுணர் குழுக்கள் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்றினர்.
கோயில் ஸ்தானிக பட்டர்களும், உச்ச நீதிமன்றம் நியமித்த ஓய்வுபெற்ற நீதிபதிகள் எஸ். வைத்தியநாதன், பி. பார்த்திபன் ஆகியோரும் சூடத்தை ஏற்றி பூஜை செய்து பிறகு தீபம் ஏற்றப்பட்டது. தீபம் ஏற்றப்பட்டதும் மலை அடிவாரத்தில் குவிந்து இருந்த பக்தர்கள் அரோகரா கோஷம் எழுப்பினர்.
தீபம் ஏற்றிய பின்னர் ஓய்வு பெற்ற நீதிபதி பார்த்திபன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- தமிழ்நாட்டை பொறுத்தவரை, இந்து முஸ்லீம் ஒற்றுமையாக தான் வருகின்றனர். திருப்பரங்குன்றத்திலேயே அதை பார்த்தோம். இங்கு எந்த மத கலவரமும் கிடையாது. ஆனால் அரசியல் புகுந்ததால் அப்படி ஒரு தோற்றம் ஏற்பட்டது.
தீபம் ஏற்றுவது எப்போதுமே மகிழ்ச்சியான விஷயம்தான். திருப்பரங்குன்றத்தில் எனது கையாலே, தீபம் ஏற்றியது மகிழ்ச்சியாக இருக்கிறது. பலமுறை திருப்பரங்குன்றம் கோவிலுக்கு வந்துள்ளேன், திருவண்ணாமலை தீப தரிசனத்திற்கும் சென்றுள்ளேன். ஆனால் முதன்முதலாக இந்த இடத்திற்கு இப்போதுதான் மலை ஏறி வந்துள்ளேன்.
பாதுகாப்பு ஏற்பாடுகள் நன்றாக இருந்தது. எத்தனை நாட்களுக்கு நாங்கள் மேற்பார்வை பார்க்க வேண்டும் என்பது உச்சநீதிமன்றத்தின் அடுத்த அமர்வின்போது தெரியவரும். கோயில் நிர்வாகம் மற்றும் அறிக்கை குறித்து இருவரும் கலந்து பேசி அறிக்கை தாக்கல் செய்வோம்" என்றார்.


Click it and Unblock the Notifications
