2 அமைச்சர் பதவிக்கு ஆசைப்பட்டு மொத்தமாக ‘பவரை’ இழந்த காங்கிரஸ்.. திமுக முடிவால் சறுக்கல் யாருக்கு?
சென்னை: பாஜகவுக்கு எதிரான விவகாரங்களில் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் உறுதுணையாக விளங்கியது திமுக. 2 அமைச்சர் பதவிகளுக்கு ஆசைப்பட்டு இப்போது தனித்து விடப்பட்டு இருக்கிறது காங்கிரஸ். தேசிய அளவில் காங்கிரஸ் கட்சிக்கு பாதகமாக கருதப்படும் தொகுதி மறுவரையறை மசோதாவை தோற்கடிக்கும் விவகாரத்தில், நாடாளுமன்றத்தில் திமுக ஆதரவை இழந்துவிட்டது காங்கிரஸ் கட்சி.
வரும் நவம்பர் 30 ஆம் தேதியன்று நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், திருத்தப்பட்ட தொகுதி மறுவரையறை மசோதாவை மத்திய பாஜக அரசு மீண்டும் கொண்டு வர உள்ளது. இந்த மசோதாவுக்கு திமுக ஆதரவு அளிக்க முடிவெடுத்துள்ளது.

பாஜக மசோதா நிறைவேற வாய்ப்பு
திமுக (22 எம்.பி.க்கள்), சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் (8 எம்.பி.க்கள்), ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் (4 எம்.பி.க்கள்) ஆகிய கட்சிகளின் ஆதரவு நிலைப்பாடுகளால், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (320 எம்.பி.க்கள்) பலம் 354 ஆக உயர்ந்து, மசோதாவை நிறைவேற்றத் தேவையான 360 என்ற இலக்கை நெருங்கியுள்ளது.
இதன்மூலம், கடந்த முறை தோற்கடிக்கப்பட்ட தொகுதி மறுசீரமைப்பு மசோதா தற்போது நிறைவேற வாய்ப்புள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட தொகுதி மறுவரையறை மசோதா மீதான வாக்கெடுப்பில் மசோதாவுக்கு ஆதரவாக 298 உறுப்பினர்களும், மசோதாவை எதிர்த்து 230 உறுப்பினர்களும் வாக்களித்தனர். மசோதா வெற்றி பெற 3-ல் 2 பங்கு வாக்குகள், அதாவது மொத்தம் 326 வாக்குகள் தேவை என்ற நிலையில், பெரும்பான்மை வாக்குகள் கிடைக்காததால் மசோதா தோல்வி அடைந்தது.
வாய்ப்பை இழக்கும் காங்கிரஸ்
இந்நிலையில், தற்போது திருத்தப்பட்டு கொண்டுவரப்படும் தொகுதி மறுசீரமைப்பு மசோதா, திமுக எம்.பிக்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட உள்ளது. இந்த மசோதாவை காங்கிரஸ் கட்சி கடுமையாக எதிர்த்து வருகிறது. திமுக கூட்டணியில் இருந்து தற்போது காங்கிரஸ் கட்சி விலகி இருப்பதால், மசோதாவை தோற்கடிக்கும் வாய்ப்பை இழந்துள்ளது காங்கிரஸ்.
தமிழகத்தில் திமுகவுடன் நீண்டகாலமாகக் கூட்டணியில் இருந்து வந்த காங்கிரஸ் கட்சி, கடந்த சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, தவெக உடன் கூட்டணி அமைத்தது. தவெக தலைமையிலான ஆட்சியில் 2 அமைச்சர் பதவிகளையும் பெற்றது. நீண்ட காலமாக பல தேர்தல்களை இணைந்து சந்தித்த திமுக - காங்கிரஸ் இடையே தற்போது கடும் மோதல் சூழல் நிலவி வருகிறது.
திமுகவின் முடிவு
மத்திய பாஜக அரசு கொண்டுவந்த தொகுதி மறுவரையறை மசோதாவை திமுக முதலில் கடுமையாக எதிர்த்தது. இந்த தொகுதி மறுவரையால் தென் மாநிலங்களின் அரசியல் பிரதிநிதித்துவம் பாதிக்கப்படக்கூடும் என்பதே திமுகவின் முக்கியமான வாதமாக இருந்தது.
ஆனால், திருத்தப்பட்ட மசோதாவில் தமிழ்நாட்டின் மக்களவைத் தொகுதிப் பங்கு 7.18 சதவீதத்திலிருந்து குறையாமல் பாதுகாக்கப்படும் என்றும், மாநிலங்களுக்கிடையிலான தற்போதைய விகிதம் தொடர்ந்து பாதுகாக்கப்படும் என்றும் உறுதியளிக்கப்பட்டுள்ளது. அனைத்து மாநிலங்களிலும் எம்.பி தொகுதி எண்ணிக்கை 50% அதிகரிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற திமுக எம்.பிக்கள் கூட்டத்தில் தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு ஆதரவு அளிக்க முடிவு செய்யப்பட்டது. இந்த முடிவுதான் காங்கிரஸுக்கும் திமுகவுக்கும் இடையே கடுமையான அனலைக் கிளப்பி உள்ளது. திமுகவின் முடிவை காங்கிரஸ் தரப்பினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
திமுக சொல்லும் காரணம்
மறுவரையறை விவகாரத்தில் முடிவெடுக்காவிட்டால் மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை செய்யப்படும் அபாயம் இருப்பதாகவும், அப்படியொரு சூழலில் தமிழ்நாட்டின் தொகுதிகள் 39-லிருந்து 31 ஆகக் குறையக்கூடும் என்றும் திமுக எம்.பி தயாநிதி மாறன் விளக்கினார்.
திமுக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசுவும், திமுக ஆதரவு அளிக்காவிட்டால் மிகப்பெரிய நெருக்கடி ஏற்பட்டிருக்கும் என்றும், 39 இடங்கள் 59 ஆக அதிகரிப்பதா அல்லது 31 ஆகக் குறைவதா என்பதுதான் கேள்வி என்றும் தெரிவித்தார்.
சறுக்கிய காங்கிரஸ்
2 அமைச்சர் இடங்களுக்காக, திமுக கூட்டணியை விட்டு வெளியேறிய காங்கிரஸ் கட்சி, தற்போது முக்கியமான அரசியல் விவகாரத்திலேயே திமுகவின் ஆதரவைப் பெற முடியாத சூழலை எதிர்கொண்டுள்ளது. பாஜக அரசின் தொகுதி மறுசீரமைப்பு திட்டம், தேசிய அளவில் காங்கிரஸ் கட்சிக்கு பெரிய சிக்கலை ஏற்படுத்தும் என்பது பரவலான கருத்தாக உள்ளது.
பாஜக அரசை எதிர்ப்பதில், காங்கிரஸ் - திமுக உள்ளடங்கிய கூட்டணி வலிமை வாய்ந்ததாக இருந்தது. பாஜக அரசின் மசோதாக்களுக்கு எதிராக, திமுகவும் காங்கிரஸும் நாடாளுமன்றத்தையே கதிகலங்கச் செய்ததெல்லாம் கடந்த காலங்களில் நடந்தது. இப்போது, கூட்டணி விலகலால், காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற பலம் சரிந்துள்ளது.


Click it and Unblock the Notifications
