"புது நண்பர் ஒருத்தர் இருக்கார்ல.. அவரை பார்க்க வருவாங்க" ராகுலின் சென்னை வருகையை நக்கலடித்த உதயநிதி
சென்னை: ராகுல் காந்தி உள்ளிட்ட இந்தியா கூட்டணி தலைவர்கள் சென்னை வருகை குறித்து சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதியிடம் கேட்ட போது "புது நண்பர் (விஜய்) ஒருத்தர் இருக்கார்ல,அவரை பார்க்க வருவாங்கன்னு நினைக்கிறேன், இன்னைக்கு சண்டே வேற.." என நகைச்சுவையாக தெரிவித்திருந்தார்.
சென்னை மெரினா கடற்கரை பகுதியில் உள்ள நீச்சல் குளம் அருகே சென்னை மாநகராட்சி சார்பாகவும், சேப்பாக்கம் திருவல்லிகேணி தொகுதி மேம்பாட்டு நிதியான 1.50 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள சிறுவர்கள் விளையாட்டுத்திடல் மற்றும் திறந்தவெளி உடற்பயிற்சி கூடத்தை எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.
உடன் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவரிடம், "காங்கிரஸ் தலைவர்கள் சென்னைக்கு வருகிறார்களாமே" என்ற கேள்விக்கு, உதயநிதி, "புது நண்பர் (விஜய்) ஒருத்தர் இருக்கார்ல.. அவரை பார்க்க வருவாங்கன்னு நினைக்கிறேன்.. இன்னைக்கு சண்டே வேற.. " என்றார்.
அப்போது செய்தியாளர்கள், திமுக தலைவரை சந்திக்க உள்ளார்கள் என சொன்னதற்கு, "அப்படியா, வரட்டும் வந்து பார்க்கட்டும்" என தெரிவித்தார். தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு திமுக ஆதரவு என்ற நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்ய வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு, "அதை பற்றி தலைவர் (ஸ்டாலின்) முடிவு எடுப்பார். தொகுதி மறுவரையறை பற்றி ஏற்கனவே ஆ.ராசா, தங்கம் தென்னரசு, அத்தை கனிமொழி உள்ளிட்டோர் தெளிவாக சொல்லிவிட்டார்கள்.
மாநில உரிமைகளை விட்டு கொடுக்கும் வகையில் எந்த முடிவயைும் ஸ்டாலின் எடுக்க மாட்டார். சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுப்பார்" என தெரிவித்தார். மேலும் அவர் பேசுகையில், "இந்தியாவில் தொகுதி மறுவரையறை தொடர்பாக முதன் முதலில் பேசிய இயக்கம் திமுக. எனவே எந்த வகையிலும் தமிழ்நாட்டின் உரிமைகளை விட்டு கொடுக்க மாட்டோம்" என கூறினார்.
திருப்பரங்குன்றம் மற்றும் தொகுதி மறுவரையறை குறித்து முதலமைச்சர் எதுவும் பேசவில்லையே என்ற கேள்விக்கு "முதலமைச்சர் என்றைக்கு தான் பேசி உள்ளார்" என எதிர் கேள்வி எழுப்பினார். கடந்த சடட்சபை தேர்தலில் தோல்வி அடைந்து திமுக ஆட்சியை இழந்தது.
இந்த நிலையில் ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என தவெக முழங்கியதை அடுத்து தேர்தலுக்கு பின்னர், திமுகவிடம் சொல்லாமல் கொள்ளாமல் காங்கிரஸ் வெளியேறி தவெகவுடன் சேர்ந்துக் கொண்டது. இதனால் அக்கட்சிக்கு 2 அமைச்சர் பதவிகள் கிடைத்தன. தவெகவில் காங்கிரஸ் இணைந்தது முதலே திமுகவை காங்கிரஸ் நிர்வாகிகள் விமர்சித்து வருகிறார்கள்.
"திமுக கூட்டணியில் இருந்ததால் ஆட்சிக்கு எதிரான மனநிலை காங்கிரஸ் கட்சியையும் பாதித்துவிட்டது. அதனால் 28 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் 5 இடங்களில் மட்டுமே வென்றுள்ளது. தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு முன்பே தவெகவுடன் கூட்டணிக்கு சென்றிருந்தால், காங்கிரஸ் இன்னும் நிறைய தொகுதிகளில் வென்றிருக்கும். அமைச்சரவையில் கூடுதல் இடம் பெற்றிருக்கும்" என காங்கிரஸ் மாநிலங்களவை எம்பி பிரவீன் சக்கரவர்த்தி உள்ளிட்டோர் தெரிவித்திருந்தனர்.
இது போன்ற காங்கிரஸ் நிர்வாகிகளின் கருத்தால், இனி அவர்களை கூட்டணியில் சேர்க்கவே கூடாது என திமுக தலைமைக்கு அக்கட்சி நிர்வாகிகள் கொந்தளிப்புடன் ஆலோசனை தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் தொகுதி மறுவரையறை மசோதாவை தோற்கடிக்க இந்தியா கூட்டணி தலைவர்கள் வருகை தருவது திமுகவினரிடையே கேலி கிண்டலுக்குள்ளாகியுள்ளது.




Click it and Unblock the Notifications
