எல்லாம் பொய்.. எனக்கே தெரியாமல் உறவினரை உருவாக்குறாங்க! கோவில் நில விவகாரம்.. அமைச்சர் ரமேஷ் பேட்டி

  • சென்னை: என்னுடைய உறவினர்தான் 100 கோடி சொத்தை வாங்கினார் என்பதற்கு ஆதாரம் இருந்தால் காட்ட சொல்லுங்கள். எந்த ஆதாரமும் இல்லாமல் புதிதாக எனக்கே தெரியாமல் உறவினரை உருவாக்கி கொண்டு இருக்கிறார்கள் என்று அமைச்சர் ரமேஷ் கூறியுள்ளார். முதல்வர் கூறியது போல எங்களின் அரசு துய அரசாக இருக்கும். வெளிப்படையான அரசாக இருக்கும். ஊழல் இல்லாத அரசாக நிச்சயம் இருக்கும் என்றும் அவர் கூறினார்.

    Advertisement

    சென்னை தலைமை செயலகத்தில் இந்து சமய அற நிலையத்துறை அமைச்சர் ரமேஷ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    Advertisement

    வரலாறு தெரியாமல்

    பழனி கோவில் அடிவாரத்தில் உள்ள 100 கோடி ரூபாய் நிலம் தொடர்பாக தவறான தகவலை பரப்புகிறார்கள்.. பொய் புரட்டு வன்மத்துடன் செய்திகளை பரப்புகிறார்கள். எனது உறவினர் பெயரில் பதிவாகியுள்ளதாக கூறினார். அந்த நிலத்தை யாரும் பதிவு செய்யக்கூடாது என பலமுறை கோவில் இணை ஆணையர் மூலம் கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளன. இது பற்றிய வரலாறு தெரியாமல் புதிதாக பொறுப்பு அதிகாரியாக வந்த மணிகண்டன் என்பவர் பதிவு செய்து கொடுத்துள்ளார்.

    இது தெரிந்தவுடன் இந்து சமய அறநிலையத்துறையில் இருந்து, இந்த பதிவு சட்டவிரோதமானது என்று சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி நிலத்தின் பதிவை நிறுத்துவதற்கான முயற்சிகளை எடுத்துள்ளோம். நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு உள்ளது. விசாரணைக்கு வரும் போது இந்து சமய அறநிலையத்துறையையும் ஒரு தரப்பாக ஏற்றுகொண்டு இருக்கிறது. இந்த வழக்கு மறுபடியும் நாளைக்கு விசாரணைக்கு வருகிறது.

    Advertisement

    நாம் மீண்டும் அதை திரும்ப பெறப்போகிறோம் என்பதில் யாருக்கும் எந்த சந்தேகமும் வேண்டாம். சார் பதிவாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். சட்ட ரீதியிலான முறையில் நடைமுறைகள் இருக்கும் போது அரசு என்ன செய்கிறது என்றே தெரியாமல் பொத்தாம் பொதுவாக அமைச்சரின் உறவினர் வாங்கிவிட்டார். அமைச்சருக்கு தெரிந்துதான் இது நடக்கிறது அப்படி என்று வன்மத்துடன், இந்த அரசு மீது ஏதாவது ஒரு ஊழல் கறையை சுமத்தி விட முடியாதா? என்று எதிர்க்கட்சிகள் கங்கணம் கட்டிக்கொண்டு வேலை பார்ப்பது நன்றாக தெரிகிறது.

    எந்த ஆதாரமும் இல்லாமல்

    முதல்வர் கூறியது போல எங்களின் அரசு தூய அரசாக இருக்கும். வெளிப்படையான அரசாக இருக்கும். ஊழல் இல்லாத அரசாக நிச்சயம் இருக்கும். தவறு செய்தவர்கள் எவ்வளவு உயரதிகாரியாக இருந்தாலும் உடனடியாக நடவடிக்கை எடுப்போம். காவல்துறையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பதிவு பெற்று நிலத்தை பெற முயற்சித்த பார்ட்டிகள் மீதும் எப்.ஐ.ஆர் போடப்பட்டுள்ளது. போலீஸ் விசாரணை நடைபெற்று வருகிறது. நேர்மையாக விசாரணை நடக்கிறது.

    Advertisement

    பொய் புரட்டு பரப்புவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பதற்கான முயற்சிகளை நான் எடுத்து இருக்கிறேன். என்னுடைய உறவினர்தான் 100 கோடி சொத்தை வாங்கினார் என்பதற்கு ஆதாரம் இருந்தால் காட்ட சொல்லுங்கள். எந்த ஆதாரமும் இல்லாமல் புதிதாக எனக்கே தெரியாமல் உறவினரை உருவாக்கி கொண்டு இருக்கிறார்கள். எங்களுக்கு யாரைப்பற்றியும் கவலை இல்லை. மடியில் கனமில்லை. வழியில் பயமில்லை. கோவில் நிலங்களை பொறுத்தவரை ஒரு இன்ச் கூட யாருக்கும் கொடுக்க நாங்கள் தயாராக இல்லை" என்று கூறினார்.

    English Summary

    Minister Ramesh denied allegations linking his relatives to a ₹100 crore property purchase and the Palani temple land issue. He challenged critics to produce evidence, saying baseless claims were being made without any proof.