ராகுல் காந்திக்கு நிம்மதி.. 8 ஆண்டுகள் நடந்த வழக்கு ஒரு வழியாக முடிவுக்கு வந்தது! நீதிமன்றம் உத்தரவு

  • லக்னோ: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குறித்த ராகுல் காந்தி பேச்சு தொடர்பாக அவதூறு வழக்கு தொடரப்பட்டு இருந்தது. சுமார் 8 ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கு இப்போது முடிவுக்கு வந்துள்ளது. ராகுல் காந்தியின் கருத்துகள் அவதூறானது என கருத முடியாது என கூறிய நீதிமன்றம், அவரை விடுவித்து உத்தரவிட்டுள்ளது.

    Advertisement

    எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தி மீது அவதூறு வழக்கு உத்தர பிரதேசத்தில் நடந்து வந்தது. கடந்த 2018ம் ஆண்டு தொடரப்பட்ட இந்த அவதூறு வழக்கில் முதலில் கடந்த அக்டோபர் 13ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட இருந்தது.. பின்னர், தீர்ப்பு தேதி இன்றைய தினத்திற்கு மாற்றப்பட்டது. இதையொட்டி வழக்கு நடந்த சுல்தான்பூரில் உள்ள நீதிமன்ற வளாகத்தைச் சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    Advertisement

    விடுதலை

    தீர்ப்பு நாள் என்பதால் ராகுல் காந்தி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி இருந்தார். உத்தர பிரதேச மாநிலம் சுல்தான்பூரில் உள்ள சிறப்பு எம்பி, எம்எல்ஏ நீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. இந்த வழக்கில் ராகுல் காந்தியின் கருத்துகள் அவதூறானவை என கருத முடியாது என கூறிய நீதிமன்றம் அவரை விடுதலை செய்து உத்தரவிட்டது.

    அவர் விடுதலை செய்யப்பட்டதை தொடர்ந்து, காங்கிரஸ் தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.. உண்மையே இறுதியில் வெல்லும் என்று காங்கிரஸ் கட்சியும் தீர்ப்பை வரவேற்றுள்ளது.

    பின்னணி

    2018ம் ஆண்டு கர்நாடக சட்டசபை தேர்தலுக்கு முன்பு, பெங்களூரில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அப்போதைய பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா குறித்து ராகுல் காந்தி சில கருத்துகளை கூறியிருந்தார். ராகுல் காந்தி அந்த பேச்சு தொடர்பாக உபி உள்ளூர் பாஜக நிர்வாகியான விஜய் மிஸ்ரா 2018 ஆகஸ்ட் 4ம் தேதி ராகுல் காந்திக்கு எதிராக அவதூறு புகார் அளித்தார். அதைத் தொடர்ந்தே வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    Advertisement

    வாதங்கள்

    வழக்கின் இறுதிக்கட்ட விசாரணையின்போது, ராகுல் காந்தி அந்த கருத்துகளை தெரிவித்ததை அவரது தரப்பு வழக்கறிஞர் ஒப்புக்கொண்டார். எனினும், யாரையும் அவமதிக்கும் நோக்கத்தில் அந்த கருத்துகளை கூறவில்லை என்றும் நல்லெண்ணத்தின் அடிப்படையில் தெரிவிக்கப்பட்ட கருத்துகள் என்றும் வாதிட்டார். ராகுல் காந்தியின் கருத்துகள் திரித்து கூறப்பட்டு, அவை தவறாக சித்தரிக்கப்பட்டதாகவும் அவர் தரப்பு தெரிவித்தது.

    மறுபுறம் இந்த கருத்துகளை தெரிவித்ததை ராகுல் காந்தியே ஒப்புக்கொண்டிருப்பதால் அவரை குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்று புகார்தாரர் தரப்பு வழக்கறிஞர் வலியுறுத்தினார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட சிறப்பு மாஜிஸ்திரேட் சுபம் வர்மா, ராகுல் காந்தியின் கருத்துகள் அவதூறானவை என சொல்ல முடியாது என கூறி விடுதலை செய்து உத்தரவிட்டார்.

    Advertisement

    கடந்து வந்த பாதை

    இந்த வழக்கில் ராகுல் காந்திக்கு 2024 பிப்ரவரி மாதம் ஜாமீன் வழங்கப்பட்டது. அதே ஆண்டு ஜூலை 26ம் தேதி அவரது வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. புகார்தாரர் உள்ளிட்ட சாட்சிகளிடமும் விசாரணை நடத்தப்பட்டது. 2026 மார்ச் மாதம் ராகுல் காந்தியின் குரல் மாதிரியை ஒப்பிட கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரணை நீதிமன்றம் மே மாதம் நிராகரித்தது. தொடர்ந்து மாவட்ட நீதிமன்றமும் அலகாபாத் உயர் நீதிமன்றமும் அதற்கு எதிரான மேல்முறையீடுகளை நிராகரித்தன. அக்டோபர் 6ம் தேதி இறுதிக்கட்ட வாதங்கள் தொடங்கி, அக்டோபர் 12-ம் தேதி நிறைவடைந்தன. இதையடுத்து அக்டோபர் 26ம் தேதி தீர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

    English Summary

    A special MP-MLA court in Sultanpur, has acquitted Rahul Gandhi in a defamation case(அவதூறு வழக்கில் ராகுல் காந்தியை விடுவித்த நீதிமன்றம்): Rahul Gandhi Acquitted in Amit Shah Defamation case.