பாவம் பெண் கலெக்டர்.. தமிழகம் மீது தவெக படையெடுப்பு.. யாருக்கும் பாதுகாப்பு இல்லை.. கனிமொழி காட்டம்
சென்னை: தவெக ஆட்சிக்கு வந்து 6 மாதங்களாகிவிட்டது. அரசியல் மாற்றத்திற்காக வாக்களித்த மக்கள் வேதனையடையும் வகையில் பல அதிர்ச்சி சம்பவங்கள் நடப்பதாக எதிர்க்கட்சிகள் புகார் கூறி வருகிறார்கள். தவெகவினர் அடுத்தடுத்த சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்கள். துணை சபாநாயகர் மீது அடிதடி புகார், பெண் மாவட்ட ஆட்சியருக்கே ஆபாசமாக மெசேஜ் அனுப்பிய எம்எல்ஏ என சர்ச்சைகள் நீண்டு வருகிறது. தவெகவினர் தமிழகத்திற்கு எதிராக படையெடுத்துள்ளனர். அதிகாரிகள் மக்கள் யாருக்கும் பாதுகாப்பு இல்லை என கனிமொழி வேதனை தெரிவித்துள்ளார்.
சென்னையில் திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்பி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "இந்த ஆட்சியில் யாராக இருந்தாலும் பாதுகாப்பு இல்லை. எதிர்க்கட்சிகள் சட்டம் ஒழுங்கு பிரச்சனையை எடுத்து சொல்லும்போது, பத்திரிகையாளர்கள் அதை எடுத்து பேசும்போது, அமைச்சர் ராஜ்மோகன் எதோ வளர்ச்சியை பேசுவது போல பேசுகிறார். சென்றாண்டு அப்படி இருந்தது, இந்தாண்டு இப்படியுள்ளது ஒப்பிட்டு பேசுகிறார்.

தவெகவினர் மிரட்டல்
அதை சாதாரணமான விஷயமாக பேசுகிறார். சட்டம் ஒழுங்கு சகஜமாக பேசுவது வருத்தமளிக்கிறது. அதை சரி செய்ய வேண்டும் என்கிற எண்ணம் அவர்களிடம் இல்லை. ஏதோ சப்பை காரணங்களை தங்களை நியாயப்படுத்தும் வேலையை செய்கிறார்கள். 6 மாதம் அவகாசம் கொடுங்கள் எல்லாவற்றையும் கற்றுகொள்கிறோம் என்றார்கள். 6 மாதம் முடிந்துவிட்டது. தமிழக மக்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் விஷயத்தை தான் கற்றுள்ளார்கள்.
ஆளுங்கட்சியை சேர்ந்தவர்களே பல குற்ற சம்பவங்களில் ஈடுபடுகிறார்கள். தீபாவளி அன்றைக்கு நடந்த சம்பவங்களை பார்த்தோம். துணை சபாநாயகர் வீட்டிற்கே அழைத்து செல்லப்பட்டு ஒருவர் மிரட்டப்பட்டுள்ளார். தாக்குதலுக்கு உள்ளாகி பாதிக்கப்பட்டவர் அதை வீடியோவாக வெளியிட்டுள்ளார். அதேபோல பல பெண்கள் தவெக நிர்வாகிகளால் துன்புறுத்துலுக்கு ஆளாக்கப்படுகிறார்கள். அவர்கள் மீதான புகார்களை வாபஸ் பெற சொல்லி மிரட்டப்படுகிறார்கள்.
திரைக்கதை வசனம்
பல இடங்களில் அவர்களை எதிர்த்து புகார் சொல்வோர் மீது வழக்கு பதிவு செய்யப்படுகிறது. அவர்கள் மிரட்டப்படுகிறார்கள். இது தெள்ள தெளிவாக உள்ளது. இது எப்படி போகும் என தெரியவில்லை. மாவட்ட ஆட்சியருக்கே தவெக எம்எல்ஏ தொல்லை கொடுத்துள்ளார். எம்எல்ஏ எதுவுமே நடக்கவில்லை என்கிறார். இத்தனை நாட்கள் இல்லாதளவுக்கு காவல்துறை மூலம் ஆட்சியருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டிய நிலை வந்தது. அதற்கும் ஏதாவது திரைக்கதை, வசம் எழுதுவார்கள்.
தவெக ஆட்சிக்கு வந்தால் பெண்கள், குழந்தைகள் எல்லாரும் பாதுகாப்பாக இருப்பார்கள். ராணுவ கட்டுப்பாட்டில் நாட்டை வைத்திருப்பேன் என்று அவர்கள் கூறினர். முன்பெல்லாம் எதிரி நாட்டு படையினர் தாக்குதல் நடத்தினால், என்ன அட்டூழியம் செய்வார்களோ அது தமிழகத்தில் நடக்கிறது. தவெகவினர் தமிழகத்திற்கு எதிராக படையெடுத்து மக்களை சூறையாடுகிறார்கள். பெண்கள், பெரியவர்கள் யாருக்கும் பாதுகாப்பு இல்லை. யாராக இருந்தாலும் பாதுகாப்பு இல்லை. இனியாவது பொறுப்புடன் செயல்படுங்கள்" என்றார்.



Click it and Unblock the Notifications
