கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை மற்றும் கெலமங்கலம் சுற்றுவட்டாரப் பகுதிகள் அனைத்துமே ஒரு ரத்தக் களறி சம்பவத்தால் உறைந்துபோயுள்ளன. குடும்பத் தகராறு உச்சகட்டத்தை எட்டியதில், சினிமா படங்களையே மிஞ்சும் வகையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.. ஓடும் காரிலேயே மனைவியை கணவன் சரமாரியாக குத்தி கொடூரமாகக் கொலை செய்துள்ளார்.. என்ன நடந்தது?
கெலமங்கலம் அருகே உள்ளது ஜோதிபுரம் கிராமம்.. இங்கு வசித்து வருபவர் வெங்கடேஷ். இவரது மகள் பிரேமா (வயது 28). இவருக்கும், சின்னபேளகொண்டப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த எல்லப்பா (வயது 32) என்பவருக்கும் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு கோலாகலமாக திருமணம் நடந்துள்ளது.
இவர்களுக்கு தனுஷ் (11), வெற்றி (8) ஆகிய மகன்களும், லக்ஷயா (10) என்ற மகளும் உள்ளனர். ஆரம்பத்தில் குடும்பம் நன்றாக ஓடிக்கொண்டிருந்தாலும், நாட்கள் செல்ல செல்ல, கணவன் - மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு வெடித்தது.. இதனால் கடந்த 4 ஆண்டுகளாக தம்பதி இருவரும் பிரிந்தே வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில், கடந்த 14ம் தேதி எல்லப்பா மீது ஓசூர் அனைத்து மகளிர் ஸ்டேஷ்னில் பிரேமா புகார் அளித்துள்ளார். இதனையடுத்து 2 தரப்பினரையும் அழைத்து விசாரித்த போலீசார் சமரசம் பேசினார்கள்.. இந்த பேச்சுவார்த்தையின்போது, ஆத்திரத்தின் எல்லைக்கே போன பிரேமா, போலீஸ் ஸ்டேஷனிலேயே அனைவரின் முன்னிலையிலும் கணவனை செருப்பால் அடித்ததாக கூறப்படுகிறது. பிறகு போலீசாரின் தீவிர வற்புறுத்தலால், 2 பேரும் இனி சேர்ந்து வாழ்வதாக காவல் நிலையத்தில் எழுதி கொடுத்துவிட்டு வீட்டிற்கு சென்றிருக்கிறார்கள். கடந்த 3 நாட்களாக ஜோதிபுரத்தில் உள்ள தன்னுடைய அம்மா வீட்டில் கணவனுடன் பிரேமா வசித்து வந்துள்ளார்... மூத்த மகன் தனுசுக்கு வரும் 30ம் தேதி பிறந்தநாள் வரவிருப்பதால், புது துணி வாங்கி கொடுப்பதற்காக நேற்றிரவு இருவரும் காரில் கிருஷ்ணகிரிக்கு சென்றுள்ளார்.. பிறகு தனியார் பள்ளிக்கு சென்று மகன்களை பார்த்துவிட்டு தம்பதி இருவரும் ஊர் திரும்பியுள்ளனர். அப்போது கெலமங்கலம் அடுத்த கூலிசந்திரம் நான்குவழிச் சாலை அருகே கார் வந்து கொண்டிருந்தபோது, திடீரென 2 பேருக்குமிடையே மறுபடியும் வாக்குவாதம் வெடித்துள்ளது. இந்த தகராறு முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த பிரேமா காரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கத்தியை எடுத்து எல்லப்பாவை சரமாரியாக குத்தியுள்ளார். இதில் நிலைகுலைந்து போன எல்லப்பா, பிரேமாவிடமிருந்து, அந்த கத்தியை மடக்கி பிடுங்கியுள்ளார். பிறகு அதே கத்தியால், பிரேமாவை வயிறு, தொடை, முதுகு மற்றும் கை பகுதிகளில் கண்மூடித்தனமாக குத்தியுள்ளார். இதில் ஓடும் காரிலேயே ரத்த வெள்ளத்தில் அலறி துடித்த பிரேமா பரிதாபமாக உயிரிழந்தார். பிறகு மனைவியின் ரத்த வெள்ளத்தில் கிடந்த உடலை காரிலிருந்து கீழே தள்ளிவிட்டு, நேராக மத்திகிரி போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்ற எல்லப்பா போலீசில் தானாக முன்வந்து சரணடைந்தார். தான் செய்த குற்றத்தையும் போலீசாரிடம் விலாவரியாக விவரித்துள்ளார். உடனே போலீசார் படுகாயங்களுடன் இருந்த எல்லப்பாவை ஓசூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பிரேமாவின் சடலத்தையும் கைப்பற்றி போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு, விசாரணையையும் போலீசார் நடத்தினார்கள்.. மனைவியின் நடத்தையின் மீது எல்லப்பா அடிக்கடி சந்தேகப்பட்டு தொல்லை கொடுத்து வந்ததே இந்த கொடூர கொலைக்கு முக்கியக் காரணம் என்பது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. ஓடும் காரில் கணவனை மனைவி கத்தியால் குத்தியதும், அதே கத்தியை பிடுங்கி கணவன் மனைவியை குத்தி கொன்றதும், தேன்கனிக்கோட்டையை திணறடித்து கொண்டிருக்கிறது...!!கிருஷ்ணகிரி தம்பதி
தேன்கனிக்கோட்டை தம்பதிக்குள் தகராறு
ஓடும் காரிலேயே சுருண்ட பிரேமா
திணறிய தேன்கனிக்கோட்டை