பிரியாணிக்கு ஆசைப்பட்ட சீமான்..குஸ்கா கூட கிடைக்காது! ஆசைக்கு ஆப்பு வைத்த திமுக - அதிமுக! என்னாச்சு?
சென்னை: அதிமுக எம்எல்ஏவாக இருந்த இசக்கி சுப்பையா தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு தமிழக வெற்றி கழகத்தில் இணைந்த நிலையில் அந்த தொகுதியில் இடைத்தேர்தல் நடக்க உள்ளது. இதில் போட்டியிடப் போவதாக அதிரடியாக அறிவித்திருக்கிறார் சீமான். பொது வேட்பாளராக தன்னை திமுகவும் அதிமுகவும் நிறுத்துவார்கள் என ஆசையோடு இருந்தவருக்கு அதிர்ச்சி தரும் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அம்பாசமுத்திரத்தோடு தமிழகத்தில் நடக்க உள்ள அனைத்து இடைத் தேர்தல்களிலும் திமுகவும் அதிமுகவும் போட்டியிடுகின்றன. இதனால் வழக்கம்போல் இந்த முறையும் அண்ணன் பயிற்சி எடுக்க தான் போகிறார் என்கின்றனர்.
2026 தமிழக சட்டசபை தேர்தலுக்குப் பிறகு தமிழக அரசியலில் பல மாற்றங்கள் நிகழ்ந்தன. திமுக கூட்டணி உடைந்தது. பெரிய அதிர்ச்சியாக அதிமுகவே உடைத்தது என பல புயல்கள் வீசியது. அதில் மிகுந்த சேதாரத்தை சந்தித்தது அதிமுக.

47 எம்எல்ஏக்கள் அதிமுகவுக்கு கிடைத்த நிலையில் சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் சுமார் 25 எம்எல்ஏக்கள் விஜய் அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர். அதையெல்லாம் விட திமுகவுடன் கூட்டணி சேர பார்த்தார் எடப்பாடி என பகிர் புகாரினை முன்வைத்து அதிமுக எம்எல்ஏக்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்து விட்டு தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தனர்.
இசக்கி சுப்பையா, மரகதம் குமரவேல், சத்தியபாமா, எம்ஆர் விஜயபாஸ்கர், சி விஜயபாஸ்கர், ஜெயக்குமார் ஆகியோர் அதிரடியாக முடிவு எடுத்த நிலையில் தற்போது அவர்கள் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்திருக்கிறார். மதுராந்தகத்தில் மரகதம் குமரவேலும், தாராபுரத்தில் சத்தியபாமாவும் மீண்டும் தமிழக வெற்றிக்கழகத்தின் சார்பில் போட்டியிட்டு மீண்டும் எம்எல்ஏ ஆகியுள்ளனர். பெருந்துறை, அம்பாசமுத்திரம், கரூர், விராலிமலை ஆகிய தொகுதிகளுக்கு டிசம்பர் மாதத்தில் தேர்தல் தேதி அறிவிக்க படலாம் என்கிறனர்.
பொங்கலுக்குள் தேர்தல் நடைபெறும் என்றும் சொல்லப்படுகிறது. தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் அதிமுக மாஜிகளே மீண்டும் களம் இறங்க இருக்கின்றனர். இதற்கு இடையே அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் போட்டியிடுவதாக அதிரடியாக அறிவித்திருக்கிறார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான்.
2024 மக்களவைத் தேர்தலில் மாநில கட்சியாக அங்கீகாரம் பெற்றிருந்த நாம் தமிழர் இந்த தேர்தலில் நான்கு சதவீத வாக்குகளை இழந்து அங்கீகாரத்தை பறிகொடுத்துள்ளது. பசியோடு இருப்பவனுக்கு பிரியாணி கிடைத்தால் சும்மா விடுவேனா என சூளுரைத்து களமிறங்குகிறார் சீமான். சீமான் நாடார் சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பதும் அவரது மனைவி கயல்விழி முக்குலத்தோர் சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இரு சமூக வாக்குகளும் அதிகமாக இருப்பதால்தான் அம்பாசமுத்திரத்தை தேர்ந்தெடுத்து இருக்கிறார் என்கின்றனர்.
இதுவரை நடந்த தேர்தல்களில் களமிறங்கியும் சீமான் ஒரு தொகுதியில் கூட வென்றதில்லை. அவரது கட்சியினரும் அப்படித்தான். அதிகபட்சம் 8 சதவீத வாக்குகளை தான் பெற முடிந்தது. நடந்து முடிந்த மதுராந்தகம் தாராபுரம் இடைத்தேர்தலிலும் கட்சியின் வாக்கு வங்கி 2 சதவீதத்துக்குள்ளாக சுருங்கி உள்ளது. இந்த நிலையில் அம்பாசமுத்திரம் தொகுதியில் சீமான் போட்டியிடும் நிலையில் திமுகவும் அதிமுகவும் தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கிக் கொண்டு சீமானை பொது வேட்பாளராக அறிவிக்க போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.
ஆனால் உண்மையில் அப்படி இல்லை என இரு கட்சிகளுமே திட்டவட்டமாக சொல்லிவிட்டார்களாம். சமீபத்தில் அதிமுக மாவட்ட செயலாளர் கூட்டம் நடைபெற்ற நிலையில் அதில் வரும் தேர்தல்களில் போட்டியிடுவது என முடிவெடுத்திருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. மேலும் சீமான் வந்தால் உதயநிதி முக்கியத்துவம் சட்டசபையில் குறைந்து விடும் என்பதால் திமுகவும் வேட்பாளர்களை களம் இறக்க இருக்கிறது.
தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் தற்போது போட்டியிடும் ஜெயக்குமார், எம் ஆர் விஜயபாஸ்கர், சி விஜயபாஸ்கர், இசக்கி சுப்பையா ஆகியோர் கடந்த தேர்தலில் விஜய் அலையையும் தாண்டி பொது தேர்தலில் வெற்றி பெற்றவர்கள். தற்போது ஆளுங்கட்சி என்ற பலத்தோடு அவர்கள் களமிறங்குவதால் வெற்றி முனைப்பில் இருக்கின்றனர். அதே நேரத்தில் ஆட்சிக்கு எதிரான மனநிலை, சட்டம் ஒழுங்கு, ஆறு மாத ஆட்சியின் அவலங்களை எடுத்துக் காட்டினால் நிச்சயம் வெற்றி பெற்று விடலாம் என திமுகவும் அதிமுகவும் நம்புகின்றன.
இதனால் பொது வேட்பாளர் என்ற பேச்சுக்கே இடமில்லை என இரு கட்சிகளும் திட்டவட்டமாக முடிவெடுத்துவிட்டதாகவும், வேட்பாளர்கள் தேர்வையே தொடங்கிவிட்டதாகவும் சொல்கின்றனர். இதனால் வழக்கம்போல் இந்த தேர்தலிலும் அண்ணன் சீமான் நான்காவது இடத்திற்கு தான் தள்ளப்பட போகிறார் அவர் இந்த முறையும் பயிற்சி எடுப்பது தான் உறுதி என்கின்றனர் அம்பை வாசிகள்.


Click it and Unblock the Notifications
