வேலூர்: தேர்தல் ஆணையர் பதவி விலக வேண்டும் என்ற விவகாரத்தில், கரப்பான் பூச்சி கட்சி மட்டுமே போராட்டம் செய்ய வேண்டும் என்று அல்ல... எல்லா பூச்சியும் சேர்ந்து தான் செய்யணும் என திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் அளித்துள்ளார்.
வேலூர் காட்பாடி இல்லத்தில் திமுக பொதுச்செயலாளரும் முன்னாள் அமைச்சருமான துரைமுருகன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அவரிடம் "பாஜகவை எதிர்த்ததால் மு.க.ஸ்டாலின், பினராயி விஜயன், மம்தா ஆகியோர் தோற்கடிக்கப்பட்டனர் என்று கரப்பான் பூச்சி ஜனதா கட்சித் தலைவர் அபிஜித் குற்றச்சாட்டு வைத்திருக்கிறாரே என்ற கேள்விக்கு" அவர் அளித்த பதில், "இந்த விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. இதில் தலைமை தேர்தல் ஆணையரை மாற்றம் வேண்டும். மம்தா பானர்ஜி, பிரனாயி விஜயன், மு.க.ஸ்டாலின் ஆகிய தலைவர்கள் எந்த ஊரிலும் தோற்பதற்கு வாய்ப்பே கிடையாது.
எங்களைப் போன்றவர்கள் எல்லாம் குறி வைத்து தோற்கடிக்கப்பட்டிருக்கிறார்கள்." என்றார். "48 மணி நேரத்தில் தலைமை தேர்தல் ஆணையர் பதவி விலகவில்லை என்றால் மிகப்பெரிய போராட்டம் வெடிக்கும் என காக்ரோச் ஜனதா பார்ட்டி அபிஜித் எச்சரித்து இருக்கிறாரே" என்ற கேட்டதற்கு, "தேசிய பிரச்சனையாகி விட்டதால் மத்திய அரசாங்கம் இதனை முடக்க முடியாது. தேர்தல் கமிஷனரை வீட்டுக்கு அனுப்புறதுதான் முறை" என்றார். தமிழகத்தில் தொடர் மின்வெட்டு குறிப்பாக பல ஆளுங்கட்சி அமைச்சர்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் அரங்கேறி உள்ளது குறித்து எழுப்பிய கேள்விக்கு, "எங்கள் ஆட்சியில் மின்சாரம் சரியாக உள்ளது என்றுதான் சொல்வார்கள் தவெக அரசாங்கம். சாதாரண குடும்பங்களில் மின்சாரம் எவ்வளவு துண்டிக்கப்படுகிறது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள். தவெக எம்எல்ஏக்களுக்கும், மினிஸ்டர்களுக்கும் எதை பேசுகிறது என்று தெரியவில்லை. அவங்க வாயில வந்ததெல்லாம் பேசுகிறார்கள் என்றார். காக்ரோச் ஜனதா பார்ட்டி தேர்தல் ஆணையர் பதவி விலக வேண்டும் என்று சொல்லியதை அடுத்து, ராகுல் காந்தி அதையே முன்னெடுத்து இருக்கிறார் என்ற கேள்விக்கு "கட்சிக்கு அப்பாற்பட்ட ஒன்று இது. இதை எல்லோரும் ஒன்று சேர்ந்து தான் செய்ய வேண்டும். கரப்பான் பூச்சி பார்ட்டி மட்டுமே செய்ய வேண்டும் என்று அல்ல... எல்லா பூச்சியும் சேர்ந்து தான் செய்யணும்" என்றார். எஸ்.ஐ.ஆர். பணியினால் தான் இது போன்ற குளறுபடிகள் நடந்திருப்பதாக சொல்கிறார்களே என்று கேட்டதற்கு "எஸ் ஐ ஆர் விவகாரத்தில் ஆதியிலேயே இது சரியில்லை என்று திமுக சொல்லிக் கொண்டே தான் இருக்கிறது. இது குறித்து மு க ஸ்டாலின் ஆயிரம் முறை பேசி இருக்கிறார். எஸ் ஐ ஆர் விவகாரத்தில் குறைபாடு உண்டு. இடைத்தேர்தலில் இரண்டு தொகுதிகளிலும் திமுகவின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது". இவ்வாறு துரைமுருகன் பேசியுள்ளார். இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையரான ஞானேஷ் குமார் மூலமாக வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆர்) உள்ளிட்ட முக்கிய விவகாரங்களில், தங்களுக்கு தெரிவிக்காமலேயே தன்னிச்சையாக முடிவுகள் எடுக்கப்பட்டதாக மற்ற இரு தேர்தல் ஆணையர்களும் புகார் எழுப்பிய நிலையில் இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என ராகுல் காந்தி, ஸ்டாலின், திருமாவளவன் உள்ளிட்டோர் வலியுறுத்தியுள்ளனர். அது போல் கரப்பான்பூச்சி கட்சி நிறுவனர் அபிஜித் தீப்கேவும் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக 48 மணி நேரம் கெடு விதித்திருக்கிறார். இன்றுடன் இந்த கெடு முடிகிறது. எனவே இன்று ஞானேஷ்குமார் பதவி விலகாவிட்டால் வரும் அக்டோபர் 2ஆம் தேதி நாடு தழுவிய போராட்டங்களை முன்னெடுக்க சிஜேபி கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.