பழம்பெரும் கேமராமேன் வி.கே.மூர்த்திக்கு தாதா சாஹேப் பால்கே விருது

திரையுலகில் சேவையாற்றிய கலைஞர்களுக்கு ஆண்டுதோறும் மத்திய அரசு பால்கே விருது அளித்துக் கெளரவித்து வருகிறது. இந்த விருதுக்குரியவரைத் தேர்ந்தெடுக்க கமிட்டி அமைத்து அந்த கமிட்டியின் பரிந்துரையின் பேரில் விருதுக்குரியவர் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
பால்கே விருது வரலாற்றிலேயே முதல் முறையாக இந்த விருதுக்கு கேமராமேன் ஒருவர் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பால்கேவே கூட ஒரு கேமராமேன்தான் என்பதும் முக்கியமாக குறிப்பிட வேண்டியதாகும்.
இந்தியாவின் முதல் சினிமாஸ்கோப் படமான ககஸ் கே பூல் படத்திற்கு கேமராமேனாக பணியாற்றிய பெருமைக்குரியவர் மூர்த்தி. மேலும் குருதத்தின் அனைத்துப் படங்களுக்கும் இவரே கேமராமேனாக பணியாற்றியவர்.
வண்ணப்பட காலம் தொடங்கியதும் அதில் புரட்சி படைத்தவர், பல மாஜிக்குகளை நிழ்த்தியவர் மூர்த்தி.
ஆரம்பத்தில் சினிமாவில் ஒரு வயலின் கலைஞராகத்தான் தனது வாழ்க்கையை தொடங்கினார் மூர்த்தி.
இவர் பணியாற்றிய ககஸ் கே பூல், சாஹிப் பீபி அவுர் குலாம் ஆகிய படங்கள் பிலிம்பேர் விருது பெற்றன.
மேலும் பியாஸா, ஜால், பாஸி, ஜிட்டி, ரஸியா சுல்தான் உள்ளிட்ட பல படங்களிலும் இவர் பணியாற்றியுள்ளார்.
ஷியாம் பெனகலின் டிவி தொடரான பாரத் ஏக் கோஜ், தொடருக்கும் இவரே கேமராமேனாகப் பணியாற்றினார்.
அடிப்படையில் கர்நாடகத்தைச் சேர்ந்தவர் மூர்த்தி. 1923ம் ஆண்டு மைசூரில் பிறந்த அவர் பெங்களூர் எஸ்.ஜே. பாலிடெக்னிக்கில் டிப்ளமோ படிப்பை சினிமாட்டோகிராபியில் முடித்தார். மாணவர் பருவத்தில் சுதந்திரப் போராட்டத்திலும் ஈடுபட்டார். சிறைக்கும் சென்றுள்ளார். தியாகிகளுக்கான ஓய்வூதியத்தையும் பெற்று வருகிறார்.
கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகளை மும்பையிலேயே கழித்து விட்ட மூர்த்தி தற்போது பெங்களூரில் வசித்து வருகிறார்.
தாதா சாஹேப் பால்கே விருது பெறும் 56வது கலைஞர் மூர்த்தி என்பது குறிப்பிடத்தக்கது.
விரைவில் டெல்லியில் நடைபெறும் விழாவில் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல், மூர்த்திக்கு பால்கே விருதினை வழங்குவார்.
ரூ. 10 லட்சம் ரொக்கப் பரிசு, ஒரு ஸ்வர்ண கமல் சிலை மற்றும் பொன்னாடை ஆகியவை அடங்கியது பால்கே விருது.












Click it and Unblock the Notifications