தமிழகத்தில் 11 மருத்துவக் கல்லூரிகள் சூப்பர் ஸ்பெஷாலிட்டியாக மாற்றம் - அமைச்சர் காந்தி செல்வன்
ஈரோடு: கோவை, திருச்சி, கன்னியாகுமரி உட்பட 11 மருத்துவக் கல்லூரிகளை, சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக மாற்ற அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் காந்திசெல்வன் தெரிவித்துள்ளார்.
ஈரோட்டில், இந்திய மருத்துவர் சங்க மாநில மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டிற்கு மாநில தலைவர் குணசேகரன் தலைமை வகித்தார். மாநாட்டை துவக்கி வைத்து அமைச்சர் காந்திசெல்வன் பேசுகையில்,
தமிழகத்தில் 32 மருத்துவக் கல்லூரிகள், புதுச்சேரியில் எட்டு மருத்துவக் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன.
மருத்துவத் துறைக்கு 10 வது ஐந்தாண்டுத் திட்டத்தில் 53 ஆயிரம் கோடி ரூபாயும், 11 வது ஐந்தாண்டுத் திட்டத்தில் ஒரு லட்சத்து 36 ஆயிரத்து 147 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது.
மருத்துவ சுற்றுலா மூலம் ஆண்டுக்கு 10 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் கிடைக்கிறது.
சேலம் மருத்துவக் கல்லூரி, 120 கோடி ரூபாய் மதிப்பில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டு வருகிறது. அந்தப் பணி முடிந்தவுடன் திறக்கப்படும்.
அதே போன்று, மதுரை மருத்துவக் கல்லூரி, 150 கோடி ரூபாய் மதிப்பில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக மாற்ற நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விரைவில் இதற்கான பணி துவங்கப்படும்.
கோவை, கன்னியாகுமரி, திருச்சி உட்பட 11 மருத்துவக் கல்லூரிகளை சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக மாற்ற, மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
மருத்துவக் கல்லூரி ஆசிரியர்களின் விகிதம் 1:1 லிருந்து 1:2 ஆக உயர்த்தப்பட்டுள்ளதால், கூடுதலாக 5,000 ஆசிரியர்கள் வரை நியமிக்கப்பட உள்ளனர். மருத்துவ ஆராய்ச்சிக்காக 1,000 கோடி ரூபாய் அரசு ஒதுக்கீடு செய்துள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications