மாசி மாத பூஜைக்காக சபரிமலை நடை பிப் 13 ல் திறப்பு

சபரிமலை ஐயப்பன் கோவிலில் பிரசித்தி பெற்ற மகரவிளக்கு கால பூஜைக்கு பின்னர் கடந்த மாதம் 21ம் தேதி நடை சாத்தப்பட்டது. இந்நிலையில் மாசி மாத பூஜைக்களுக்காக கோயில் நடை திங்கட்கிழமை மீண்டும் திறக்கப்படுகிறது. திங்கட்கிழமை மாலை 5.30 மணிக்கு தந்திரி கண்டரரு மகேஸ்வரரு முன்னிலையில் மேல்சாந்தி பாலமுரளி நம்பூதிரி கோயில் நடை திறந்து ஐயப்பனுக்கு தீபாராதனை நடத்துவார். நாளை வேறு சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறாது.
வரும் 14ம் தேதி முதல் 18ம் தேதி வரை தினமும் கணபதி ஹோமம், உஷபூஜை, உச்சகால பூஜை உள்பட வழக்கமான பூஜைகளுடன் படிபூஜை, உதயாஸ்தமன பூஜை ஆகிய சிறப்பு பூஜைகளும் நடைபெறும். இந்த நாட்களில் தினமும் அதிகாலை 5.30 மணி முதல் காலை 11 மணி வரை நெய் அபிஷேகமும் நடைபெறும். 5 நாள் பூஜைக்கு பின்னர் 18ம் தேதி இரவு 10 மணி அளவில் கோயில் நடை சாத்தப்படும். அன்றுடன் மாசி மாத பூஜைகள் நிறைவடையும். மீண்டும் பங்குனி மாத பூஜைகளுக்காக மார்ச் 13ம் தேதி மாலை சபரிமலை கோயில் நடை திறக்கப்படும்.












Click it and Unblock the Notifications