இரவு சேலத்தில் ஷுட்டிங்.. விடிந்தால் சென்னையில் ஷூட்டிங்.. 20 நாட்கள் தூக்கம் இழந்த விஜயகாந்த்
சென்னை: விஜயகாந்த் மறைவை அடுத்து அவரால் வாழ்க்கை பெற்ற பலரும் அவர் செய்த உதவிகளைச் சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். அந்தக் கதைகளைக் கேட்கக் கேட்க இப்படி ஒரு மனிதர் இருந்தாரா? என்ற எண்ணம் வருகிறது.
அவர் ஒரு வள்ளலார் என்கிறார் முத்துராமன். அவர் என்னை வாழவைத்த தெய்வம் என்கிறார் கலைப்புலி தாணு. என்னை நடிகர் ஆக்கியதே அவர்தான் என்கிறார் லிவிங்ஸ்டன்.

அந்த முழுக்கதைகள் இதோ:
எஸ்.பி.முத்துராமன்,
"நான் அவரை வைத்து 2 படங்களை இயக்கி இருக்கிறேன். 'தர்ம தேவதை' படத்தை ஏவி.எம் தயாரித்தது. 'நல்லவன்' படத்தை கலைப்புலி தாணு தயாரித்தார். இந்தப் படம் 100 நாள்கள் வரை ஓடியது. நல்லவன் படத்தைக் காஷ்மீரில் சென்று ஷூட் செய்தோம்.
ஒரு சண்டைக்காட்சிக்காக சூப்பர் சுப்ராயன் உயரமான இடத்தில் லொகேஷ்னை தேர்வு செய்திருந்தார். அங்கே பனிப் பொழிவு அதிகம் இருந்தது. அங்கே நடந்து போகமுடியாது. வரிக்குதிரைகள் மீது அமர்ந்துதான் போக வேண்டும். கொஞ்சம் இடறி விழுந்தால் 600 அடி பள்ளத்தில் போய் விழுந்துவிடுவீர்கள். அப்படி ஆபத்தான பகுதி.

ஒரு ஷாட்டை எடுப்பதற்குள் மதியம் 2 மணி ஆகிவிட்டது. முதல் நாள் அதிக கஷ்டப்பட்டு எடுத்ததால் மறுநாள் ஷூட்டிங்கை கீழேயே எடுத்துவிடலாம் என முடிவு செய்தோம். ஆனால், அதை விஜயகாந்த் அனுமதிக்கவில்லை. மீண்டும் அங்கேயே போய் எடுப்போம் என்பதில் உறுதியாக இருந்தார்.
அந்தளவுக்கு சினிமா மீது முழு ஈடுபாடு உள்ளனர். கலைஞர் எழுத்து வாழ்க்கைக்கு வந்து 50 ஆண்டு நிறைவடைந்ததை அடுத்து அவர் ஒரு விழா நடத்தினார். அந்த விழாவில் தங்கத்தில் பேனா செய்து பரிசு அளித்தார். அவர் ஒரு வேலை செய்தார் முழுமையாகச் செய்வார். அவரைப் போல் ஒருவரை உதவி செய்வதில் பார்க்க முடியாது. இந்தக் காலத்தில் வாழ்ந்த வள்ளலார் அவர்" என்கிறார்.
எஸ்.ஏ.சந்திரசேகர்,
"கடந்த 2 ஆண்டுகளாக அவர் உயிரோடு இருக்கும்போதே கட்டியணைத்து ஆரத்தழுவிக் கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அதற்காகப் பல முயற்சிகளையும் செய்தேன். ஆனால், அந்த வாய்ப்புக் கிடைக்கவில்லை. இப்போது உயிரற்ற அவரது உடலைப் பார்க்கக் கூடாது என்று கடவுள் நினைத்தாரோ இல்லையோ எனக்குத் தெரியாது. இந்த நாளில் நான் துபாயில் இருக்கிறேன்.

திரையுலகில் சரி, அரசியல் உலகிலும் சரி ஒரு சகாப்தம் இன்றுடன் முடிந்துவிட்டது. அதற்காகக் கண்ணீர் சிந்துவதைவிட எனக்கு வேறு மொழி எதுவும் தெரியவில்லை" என்கிறார்
கலைப்புலி தாணு
"என் மீது அளவற்ற பாசம் உள்ளவர் விஜயகாந்த். அவரைப் போல் உதவிக்கரம் நீட்டுபவர்கள் வேறு யாரையும் பார்க்க முடியாது. ஒருமுறை அவரது பிறந்தநாள் வந்தபோது நான் ஒரு பத்திரிகை விளம்பரம் கொடுத்தேன். 'நல்லவன்' படத்திற்காக அவரது பத்திரிகை விளம்பரத்தில் பயன்பெற்றவர்கள் படங்களைப் போட்டு விளம்பரம் செய்தேன்.
'வாழ்வினில் நல்லவனே, வசூலில் வல்லவனே, தொடரட்டும் உன் தொண்டு.. வெற்றி என்றும் உனக்குண்டு.. வாழ்க நீ பல்லாண்டு' என வாசகம் எழுதி வெளியிட்டேன். எல்லாம் முழுப் பக்க விளம்பரம். 75 ஆம் நாளுக்குத் தனியாக ஒரு விளம்பரம் கொடுத்தேன்.
என்னை இயக்குநராக ஆக்கி, மியூசிக் டைரக்டர் ஆக்கியவர் விஜயகாந்த். அந்தப் படம் 'புதுப் பாடகன்'. அப்புறம் 'கூலிக்காரன்' என் தயாரிப்புதான். அதில் ஒரு ஹெலிக்காப்டர் காட்சியை அப்படியே பத்திரிகை விளம்பரமாக ஒரு பக்கம் அளித்தேன். அப்படி அவரது படங்களை நான் கொண்டாடி இருக்கிறேன். அவரும் என்னைக் கொண்டாடி இருக்கிறார்" என்கிறார்

நடிகர் லிவிங்ஸ்டன்
"நான் நடிகராக வருவதற்கு மூலக் காரணமே விஜயகாந்த் சார்தான். ஒரு உதவியாளராக சினிமாவில் என்னை அறிமுகப்படுத்தியவர் பாக்யராஜ். ஆனால், என்னை ஒரு நடிகராகப் பார்த்தவர் விஜயகாந்த்தான். பாக்யராஜை விட்டு வெளியே வந்த பிறகு அவருக்காக ஒரு கதை ரெடி செய்தேன். அதற்கு 'நமது சின்னம்' என்று டைட்டில் கூட வைத்திருந்தேன்.
அதை எடுத்துக்கொண்டு அவரது அலுவலகம் போனேன். அங்கே அந்தக் காலத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் குவிந்துள்ள அளவுக்குக் கூட்டம் நிரம்பி வழிந்தது. அவர் அலுவலகத்தில் 400பேர் நிற்பார்கள்.
அவ்வளவு பேரும் சாப்பிடுவதற்காகத்தான். அத்தனை பேருக்கும் சாப்பாடு போடுவார்கள். யார் வேண்டுமானாலும் போய் சாப்பிடலாம். கிட்டத்தட்ட எம்.ஜி.ஆர் குணம் அவரிடம் இருந்தது.

சென்னையில் ஒரு படம் ஷுட்டிங் போய் கொண்டிருந்தது. அதே நேரத்தில் சேலத்திலும் ஒரு படம் ஷூட்டிங் போய்க் கொண்டிருந்தது. அவர் இரவு சேலத்தில் இருப்பார். விடிந்ததும் சென்னையில் இருப்பார்.
இப்படி தினம் 20 நாள்கள் அவர் சேலத்திற்குப் போய் வந்துகொண்டிருந்தார். அத்தனை நாள்களும் அவர் தூங்கவே இல்லை. அதை அவரே சொல்லி இருக்கிறார். ஒரு ஏழைத் தயாரிப்பாளரைக் காப்பாற்ற அவர் செய்த தியாகம் அது" என்கிறார்
நான் அவரிடம் முதன்முதலாகக் கதை சொல்லத்தான் போனேன். கதை சொல்லும் போது நான் நின்று கொண்டுதான் சொல்வேன். ஏனென்றால் நானே சில காட்சிகளை நடித்துக் காட்டுவேன்.

அதைக் கேட்ட அவர், 'நாளைக்கு இதே கதையை வந்து சொல்ல முடியுமா?' என்றார்கள். மறுநாள் போனபோது அவருடன் நேற்று பார்த்த யாருமே இல்லை. வேறு ஆட்கள் இருந்தார்கள். நான் கதையைச் சொல்லி முடித்தவுடன் அவர், 'நான் சொல்லல. இவர் சரியா இருப்பார் இல்ல?' என்றார்.
நான் கதைப் பிடித்துவிட்டது. நம்பிக்கையாகப் படம் எடுத்துவிடலாம் என்று நின்றிருந்தேன். உடனே விஜயகாந்த் சொன்னார், 'உங்க கதை நல்லா இருக்கு. அதை அப்படியே எடுத்து வையுங்கள்.
நாங்கள் 'பூந்தோட்டக் காவல்காரன்' என்று படம் எடுத்துக் கொண்டுள்ளோம். அதில் ஒரு வில்லன் பாத்திரம் உள்ளது. அதில் நீங்கள் தான் நடிக்க வேண்டும். நேற்று நீங்கள் கதை சொல்லும்போதே நடித்துக் காட்டினீர்கள்.

அந்த நடிப்பு எங்கள் கதைக்குச் சரியாக இருந்ததைப் போல் உணர்ந்தேன். அதனால் தான் இரண்டாவது முறையாகக் கதை சொல்ல அழைத்தேன்' என்றார். நான் நடிக்கும் ஆசை இல்லை. இயக்கத்தான் விருப்பம் என்றேன்.
அது மிகச் சிறந்த வில்லன் பாத்திரம். விட்டுவிடவேண்டாம் என்று சொன்னார். அன்று கையில் பத்து பைசா இல்லாமல் திரிந்த எனக்கு அவர்தான் முதன்முதலாக 15 ஆயிரம் அட்வான்ஸ் கொடுத்தார் " என்கிறார்












Click it and Unblock the Notifications