இந்திய IT செக்டாரை கதறவிடும் AI.. "9 கோடி வேலைகள் காலி! ஆனா.." இன்ப அதிர்ச்சி தந்த இன்போசிஸ் தலைவர்
பெங்களூர்: AI வளர்ச்சியால் ஐடி துறையில் மிகப் பெரிய மாற்றம் நடந்து வருகிறது. குறிப்பாக இந்திய ஐடி சந்தை இதனால் மொத்தமாக மாறவுள்ளதாகப் பல்வேறு வல்லுநர்கள் கணித்து வருகிறார்கள். இதற்கிடையே ஏஐ வருகையால் கிட்டத்தட்ட 9 கோடி வேலைவாய்ப்புகள் ஆபத்தில் உள்ளதாக இன்போசிஸ் தலைவர் நந்தன் நிலேகனி தெரிவித்துள்ளார். அதேநேரம் ஏஐ புதிய வேலைவாய்ப்புகளையும் உருவாக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
AI துறையில் இப்போது மிக பெரிய மாற்றம் நடந்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளில் மட்டும் ஏஐ வளர்ச்சியால் பல்வேறு மாற்றங்கள் நடந்துள்ளன. பல தொழில்கள் ஏஐயை நோக்கி வேகமாக நகர்ந்து வருகிறது. அதேநேரம் ஏஐ காரணமாகவே பெரியளவில் வேலையிழப்புகள் ஏற்படும் என்றும் அஞ்சப்படுகிறது. சில துறைகளில் வேலையிழப்புகள் ஆரம்பித்துவிட்டதாகவும் சொல்லப்படுகிறது.

ஏஐ தொழில்நுட்பம்
இதற்கிடையே வேலைவாய்ப்பு தொடர்பாக இன்போசிஸ் தலைவர் நந்தன் நிலேகனியின் பேச்சு கவனிக்க வைப்பதாக மாறியுள்ளது. பெங்களூரில் நடைபெற்ற இன்போசிஸ் AI முதலீட்டாளர் நாள் நிகழ்வில் பேசிய அவர், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். எந்தத் தொழில்நுட்பப் புரட்சியும் செய்யாத வகையில் AI வர்த்தகத்தை மாற்றியமைக்கிறது என்று நிலேகனி குறிப்பிட்டார். AI அலை, திறமை மற்றும் தொழில்நுட்ப வேலைகளில் முழுமையான புரட்சியை ஏற்படுத்தும் என்றும் அவர் கூறினார்.
9 கோடி வேலைகளுக்கு ஆபத்து
ஏஐ துறையில் இப்போது நடக்கும் தொழில்நுட்பப் புரட்சி, இந்தியாவில் இப்போது பணியமர்த்தப்பட்டுள்ள பல தொழில்நுட்ப வல்லுநர்களைக் கிட்டத்தட்ட இல்லாமல் ஆக்கிவிட்டும் என்று நிலேகனி தெரிவித்தார். அதேநேரம் AI அடிப்படையிலான புதிய வேலைவாய்ப்புகளை அது உருவாக்கும் என்றும் நிலேகனி தெரிவித்தார். அவரது கணிப்பின்படி சுமார் 9 கோடி அதிகமான வேலைகளுக்கு ஆபத்தில் உள்ளதாகக் கூறுகிறார்.
ஃபிரண்ட்-எண்ட் டெவலப்பர்கள், குவாலிட்டி அனலிஸ்ட் டெஸ்டர்கள், ஐடி சப்போர்ட் நிபுணர்கள், பிளாக்செயின் டெவலப்பர்கள் போன்ற குறிப்பிட்ட பணிகளைச் செய்யும் பொறியாளர்கள் இனி தேவைப்பட மாட்டார்கள் என்றும் அவர் திட்டவட்டமாகக் கூறினார்..
17 கோடி வேலைவாய்ப்புகள் உருவாகும்
அதேநேரம் ஏஐ காரணமாக ஏஐ வேலையிழப்பு மட்டும் ஏற்படும் எனச் சொல்ல முடியாது. பல புதிய வேலைகள் உருவாகும். வேலையிழப்புகளை ஈடு செய்யும் வகையில் டேட்டா ஆய்வு, AI தடயவியல் ஆய்வாளர்கள், AI லீட்கள், AI பொறியாளர்கள் எனக் குறைந்தபட்சம் 17 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கும் என்றும் அவர் கூறினார். இனியும் பிஸ்னஸை முன்பு போல நடத்த முடியாது என்ற நிலேகனி, திறமையாளர்கள் வெவ்வேறு சவால்களை எதிர்கொள்வார்கள் என்றார். மேலும், இனி கோடிங் எழுதுவது மட்டுமே இலக்காக இருக்காது என்றும் அவர் குறிப்பிட்டார்.
வேலைவாய்ப்புகள் மாறும்
அதாவது ஏஐ தொழில்நுட்பம் ஐடி துறையில் வேலைவாய்ப்பை மொத்தமாகப் பறித்துவிடாது. மாறாக வேலையின் இயல்பை மாற்றி அமைக்கும் என்பதே அவரது கருத்தாக இருக்கிறது. தற்போதைய சூழலில் ஐடி நிறுவனங்கள் தங்கள் பட்ஜெட்டில் சுமார் 60 முதல் 70% தொகையை ஏஐ தொழில்நுட்பத்தை உள்ளே கொண்டு வரவே பயன்படுத்துவதாகவும் கூறப்படுகிறது.
ஏஐ வருகையால் இந்தியாவின் ஐடி துறை சிக்கலில் இருப்பதாக இதற்கு முன்பே கூட பலரும் எச்சரித்துள்ளனர். ஜோஹோ நிறுவனத்தின் தலைவர் ஸ்ரீதர் வேம்பு உள்ளிட்ட பலரும் இந்திய ஐடி துறையில் மிகப் பெரிய மாற்றம் வரப் போவதாகவே சொல்லி வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications