Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழன்டா.. நம்ம முப்பாட்டன் இப்படித் தான் இருந்தாங்க! முதன்முதலில் வெளியான கீழடி தமிழர்களின் முகம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கீழடியில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சிகள் மூலம் தமிழர் நாகரிகம் உலகுக்கே முன்னோடியாக இருப்பது எடுத்துக்காட்டப்பட்டது. இந்நிலையில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகமும் பிரிட்டனின் லிவர்பூல் ஜான் மூர்ஸ் பல்கலைக்கழகம் இணைந்து 2500 ஆண்டுகளுக்கு முன்பு கீழடியில் வாழ்ந்த தமிழர்களின் முகத்தை மறு வடிவமைப்பு செய்திருக்கின்றனர்.

சிவகங்கை மாவட்டம் கீழடியில் தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறை அகழாய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த ஆண்டு பத்தாம் கட்ட அகழாய்வுப் பணியினைச் செய்தது. அதன் மூலம் கீழடியில் நகர நாகரிகம் நிலவியதைத் தொல்லியல் சான்றுகள் மூலம் நிலைநிறுத்தியது.

கி. மு 6 ஆம் நூற்றாண்டளவில் எழுத்தறிவுப் பெற்ற சமூகமாக தமிழ்ச் சமூகம் விளங்கியது என்பதை கரிமப் பகுப்பாய்வு காலக்கணக்கீடு மூலம் முதன்முதலாக தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறை நிறுவியது. இதனை நூலாக வெளியிட்டு உலகறியச் செய்தது.

artificial intelligence Keeladi tamil

நகர நாகரிகம் என்பதற்குப் பல்வேறுக் கூறுகள் உண்டு. வாழ்விடப்பகுதியின் பரப்பளவு, பல்வேறு மக்கள் ஒன்றுகூடி வாழ்தல், எழுத்தறிவு, செங்கல் கட்டுமானம், தொழிற்கூடங்கள், நீர்மேலாண்மை, நுண்கலைகள், வணிகம், பெருவழிகள், போன்றவை இக்கூறுகளில் அடங்கும். கீழடியில் இத்தகைய கூறுகளுக்கான தொல்பொருட்கள் கிடைத்துள்ளதன் வாயிலாக நகர நாகரிகம் நிலவியது என்று சான்றுகளுடன் நிறுவப்பட்டுள்ளது.

கீழடியில் நீர்மேலாண்மை சிறந்து விளங்கியதற்கு பல்வேறுச் சான்றுகள் கிடைத்துள்ளன. அவற்றில் திறந்தவெளி வடிகால், செங்கல்லால் கட்டப்பட்ட மூடிய வடிகால், சுருள் வடிவிலான குழாய்கள், உருளை வடிவிலானக் குழாய்கள், பல்வேறு எண்ணிக்கைகளில் உறைகிணறுகள் போன்றவை வெளிப்படுத்தப்பட்டன. மேலும் கீழடி நாகரீகம் குறித்து அறிவியல் பூர்வ ஆதாரங்கள் முன்வைக்கப்பட்டன. இதன் மூலம் கீழடி நாகரீகம் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.

மேலும், கீழடியில் கிறிஸ்து பிறப்பதற்கு முன்பு ஆறாம் நூற்றாண்டிலேயே ஒரு நகர நாகரீகம் வேரூன்றி இருந்தது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்பு கீழடியில் வாழ்ந்த இரண்டு மனிதர்களின் முகம் புதிய தொழில்நுட்பத்தின் மூலம் மீட்டுருவாக்கம் செய்யப்பட்டு இருக்கிறது. மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் மற்றும் பிரிட்டனின் லிவர்பூல் ஜான் மூர்ஸ் பல்கலைக்கழகம் இணைந்து கீழடியில் வாழ்ந்த மனிதர்களின் முகத்தை உருவாக்கும் பணியை மேற்கொண்டன.

கொந்தகை எனப்படும் கீழடி அருகிலுள்ள பகுதியில் மீட்கப்பட்ட எலும்புக்கூடுகளின் மண்டை ஓட்டிலிருந்து இம்முகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக பேசிய முக உருவாக்க நிபுணரான பேராசிரியர் கேரோலைன் வில்கின்சன், " கீழடி அருகே கொந்தகையில் கிடைத்த எலும்புக்கூடு, நரம்புகள், தசை மாதிரிகள் ஆகியவற்றின் அமைப்புகளை அடிப்படையாகக் கொண்டு கணினி உதவியுடன் இந்த முகங்களை உருவாக்கியுள்ளோம். முகத்தின் மேற்பகுதி அங்கு கிடைத்த தொன்மங்களில் அடிப்படையிலும், கீழே தாடை போன்ற பகுதிகள் தொழில்நுட்ப உதவியுடன் அமைக்கப்பட்டுள்ளன. முக வடிவமைப்பில் தற்போதைய தென் இந்தியர்களின் படங்கள் மற்றும் மருத்துவ தரவுகள் ஆகியவற்றைக் கொண்டு தோல், கண்கள், முடி போன்றவற்றின் நிறமும் அமைப்பும் உருவாக்கப்பட்டுள்ளன." என்றார்.

முகமூடி உருவாக்கம் தொடர்பாக மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் மரபணு துறைத் தலைவர் பேராசிரியர் குமரேசன் கூறுகையில், "இது 80% அறிவியல், 20% கலை மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த முகங்கள் மட்டும் அல்லாமல், கொந்தகை பகுதியில் கண்டெடுக்கப்பட்ட எலும்பு பகுதிகளிலிருந்து DNA ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது பழங்கால தமிழர்களின் வழித்தோன்றல்களை கண்டறிய உதவும்," என்றார்.

இந்த கண்டுபிடிப்புகள் கீழடி மற்றும் கொந்தகை பகுதிகளில் சங்ககால மக்கள் எப்படி வாழ்ந்தனர், அவர்கள் எந்த சமூக மரபுகளுடன் தொடர்புடையவர்கள் என்பது போன்ற கேள்விகளுக்குப் பதிலளிக்கும் வகையில் இருக்கின்றன. குறிப்பாக, கீழடியில் வாழ்ந்த நபர்கள் தென் இந்திய மரபைச் சேர்ந்தவர்கள் என்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மேற்கத்திய ஈரானிய வேட்டையாடிகள் மற்றும் ஆஸ்ட்ரோ-ஆசிய இன மரபுகளின் பின்னணியும் அவர்கள் மரபணுக்களில் இருப்பது தெரியவந்துள்ளது.

கொந்தகையில் இருந்து கிடைத்த எலும்புக்கூடுகளின் அடிப்படையில், அந்த காலத்தில் வாழ்ந்த ஆண்களின் சராசரி உயரம் 5 அடி 7 இன்ஞ்சாகவும், பெண்களின் உயரம் 5 அடி 2 இன்ஞ்சாகவும் இருந்ததாக கூறப்படுகிறது.
இப்போது அந்தக் காலத்தில் வாழ்ந்த நபர்களின் முகங்களை அறிவியல் முறையில் மீட்டெடுக்கும் பணி இந்தியாவில், குறிப்பாக தென்னிந்தியாவில் முதன்முறையாக கீழடியில் நடந்திருக்கிறது என்பது பெருமைக்குரிய நிகழ்வு என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+