சென்னை மாரத்தானில் முதல்வர் விஜய் ஓட்டம்.. போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வில் பங்கேற்பு
சென்னை: சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு நாளையொட்டி இன்று சென்னையில் போதைப்பொருளுக்கு எதிராக மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாரத்தான் ஓட்டப்பந்தயத்தை முதல்வர் விஜய் தொடங்கி வைத்து ஓடினார். முதல்வர் விஜய் உடன் அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, மரிய வில்சன் உள்படஆயிரக்கணக்கான இளைஞர்கள், இளம்பெண்கள் பங்கேற்று ஓடினர்.
போதைப்பொருள் பழக்கத்தால் ஏராளமான பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் பொதுமக்களில் ஒரு தரப்பினரிடம் போதைப்பொருள் பழக்கம் உள்ளது. தமிழ்நாட்டிலும் போதைப்பொருள் பயன்படுத்தும் மக்கள் உள்ளனர்.

பல்வேறு குற்றங்களுக்கு இந்த போதைப்பொருள் தான் முக்கிய காரணமாக உள்ளது. இதனால் போதைப்பொருள் எதிர்ப்பு தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 'சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினம்' என்பது ஒவ்வொரு ஆண்டும் ஜுன் 26ம் தேதி கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் இன்று சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினமாகும். இந்த நாளையொட்டி தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் Anti Drug Run 2026 என்ற பெயரில் சென்னையில் மாரத்தான் ஓட்டம் இன்று தொடங்கியது. சென்னை காமராஜர் சாலையில் தொடங்கிய விழாவில் முதல்வர் விஜய், நீர்வளத்துறை அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் பொதுப்பணித்துறை மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, உணவு துறை அமைச்சர் வெங்கட்ராமன், நிதி அமைச்சர் மரிய வில்சன் பங்கேற்றனர்.
விஜய் கருப்பு நிற டீசர்ட், கருப்பு நிற டிராக், கருப்பு கண்ணாடி அணிந்திருந்தார். போதைப்பொருளுக்கு எதிராக உறுதிமொழி எடுக்கப்பட்டது. முதல்வர் விஜய் மாரத்தான் ஓட்டப்பந்தயத்தை கொடியசைத்தும், Sports-யை எடு Drug-யை விடு என்ற வாசகத்தை எழுதியும் மாரத்தான் ஓட்டத்தை தொடங்கி வைத்தார். அதன்பிறகு விஜய், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உள்பட பிற அமைச்சர்களும் வீரர், வீராங்கனைகளுடன் மாரத்தான் ஓட்டத்தில் பங்கேற்று ஓடினர்.
இந்த மாரத்தான் போட்டியில் பல ஆயிரம் பேர் பங்கேற்று உற்சாகமாக ஓடினர். மேலும் நிகழ்ச்சியில் போதைப்பொருள் எதிர்ப்பு தொடர்பாக பிரத்யேக பாடல் வெளியிடப்பட்டது.












Click it and Unblock the Notifications