“ஒரு தலித் பெண்ணாகிய எனக்கு தவெகவில் இந்த நிலை”.. வழக்கறிஞர் ஞானசெளந்தரி முதல்வர் விஜய்க்கு கடிதம்
சென்னை: அரசு வழக்கறிஞர் நியமனத்தில் முறைகேடு நடந்ததாக அமைச்சர் ஆனந்த் மீது வழக்கு தொடர்ந்ததைத் அடுத்து, தவெகவிலிருந்து ஞானசௌந்தரி நீக்கப்பட்டார். இந்நிலையில், முதலமைச்சரும், தவெக தலைவருமான விஜய்க்கு அவர் கடிதம் எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில், "ஒரு தலித் பெண்ணாகிய எனக்கு தமிழக வெற்றிக் கழகத்தில் இத்தகைய நிலை ஏற்பட்டிருப்பது மிகுந்த மன உளைச்சலையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது" என்று வழக்கறிஞர் ஞானசௌந்தரி தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்ட தவெக வழக்கறிஞர் அணி இணைச் செயலாளராக பதவி வகித்து வந்தவர் எம். ஞானசௌந்தரி. இவர் அரசு வழக்கறிஞர் நியமனங்களில் முறைகேடு நடந்ததாகக் கூறி, சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளரும், தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சருமான என். ஆனந்த் மீது வழக்குத் தொடர்ந்திருந்தார்.
அதில், "மாவட்ட நீதிமன்றங்களில் மேற்கொண்ட அரசு வழக்கறிஞர் நியமனத்தில் முறைகேடு நடந்துள்ளது. அரசு வழக்கறிஞர் நியமனத்துக்கு ரூபாய் 5 லட்சம் முதல் 30 லட்சம் வரை பணம் வாங்கிக்கொண்டு நியமனம் செய்யப்படுகிறது." எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தவெகவின் கொள்கை மற்றும் கோட்பாடுகளுக்கு முரணாகச் செயல்பட்டதால், அக்கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் ஞானசௌந்தரி அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக தவெக விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளர் மோகன்ராஜ் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "எம். ஞானசௌந்தரி எதிரிகளுடன் சேர்ந்துகொண்டு குற்றச்சாட்டுகள் கூறியும், பொய்யான கட்சியின் கொள்கைகள், ஒழுக்கம் மற்றும் கட்டுப்பாடுகளுக்கு முரணாக செயல்பட்ட அவரை தமிழக வெற்றிக் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து உடனடியாக நீக்கப்படுகிறார்." என அறிவித்தார்.
இந்நிலையில், வழக்கறிஞர் ஞானசௌந்தரி, தவெக தலைவரும், தமிழக முதல்வருமான விஜய்க்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில், தமிழக வெற்றிக் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து என்னை நீக்கிய முடிவை நான் ஏற்றுக்கொள்கிறேன். இருப்பினும், என் மனதில் தலைவர் அண்ணன் விஜய் மீது வைத்துள்ள மரியாதையையும், பாசத்தையும், நம்பிக்கையையும் யாராலும் நீக்க முடியாது. இந்த முடிவு எடுக்கப்பட்ட சூழ்நிலையை எண்ணி நான் மிகவும் வருத்தமடைகிறேன்.
குறிப்பாக, ஒரு பெண்ணாகவும், தலித் சமூகத்தைச் சேர்ந்தவளாகவும் நான் மேற்கொண்ட போராட்டங்கள் தலைவர் அவர்களின் பார்வைக்கு கொண்டு செல்லப்பட்டதா என்பது எனக்குத் தெரியவில்லை. அப்படி தெரிவிக்கப்பட்டிருந்தால் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்குமா என்று என் மனதில் கேள்வி எழுகிறது.
அண்ணன்கள் புஸ்ஸி ஆனந்த் மற்றும் மோகன்ராஜ் இருவரும் நல்ல செயல்பாட்டாளர்கள் என்பதை நான் மதிக்கிறேன். ஆனாலும் ஒரு தலித் பெண்ணாகிய எனக்கு இந்த நிலை ஏற்பட்டிருப்பது மனஉளைச்சலையும், வேதனையையும் தருகிறது. ஆனாலும் என் கொள்கைகளிலும், மக்கள் சேவையிலும் எந்த மாற்றமும் இல்லை. தலைவர் அண்ணன் தளபதி விஜய் எடுத்துரைக்கும் நல்லாட்சி, சமூகநீதி மற்றும் மக்கள் நலப்பாதையில் என் பயணம் என்றும் தொடரும்' என்று தெரிவித்துள்ளார்.
விளிம்புநிலைச் சமூகத்தைச் சேர்ந்த ஒரு தலித் பெண் வழக்கறிஞராக, சமூக நீதியைப் பேசும் தவெக கட்சியில் எனக்கு இழைக்கப்பட்டுள்ள இந்த ஒழுங்கு நடவடிக்கை என் மனதை மிகக் கடுமையாகப் பாதித்துள்ளது என்றும் வழக்கறிஞர் ஞானசௌந்தரி முதல்வர் விஜய்க்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications