மாயனூர் கதவணையில் அது என்ன பச்சை கலரில் வருதே? கரூர் காவிரி நீரை கண்டு கலங்கிய மக்கள்
சென்னை: கரூர் மாவட்டத்தில் காவிரி நீரை நம்பியிருக்கும் மக்களுக்கு, பெருத்த கவலை உருவாகியுள்ளது.. மாயனூர் கதவணை பகுதியில் தேக்கி வைக்கப்பட்டுள்ள காவிரி நீரின் மீது பச்சை நிறத்தில், ஆயில் போல ஒரு படலம் மிதந்து வருவதாக பொதுமக்களும் விவசாயிகளும் கூறுகின்றனர். குடிப்பதற்கே உகந்ததாக இல்லாத அளவுக்கு தண்ணீரின் நிறம் மாறியிருப்பதாக கூறப்படுவதால், அடுத்தடுத்து என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.
கரூர் மாவட்டம் மாயனூர் அருகே காவிரியாற்றின் குறுக்கே கதவணை அமைந்துள்ளது. மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீர் இந்தப் பகுதி வழியாகத்தான் செல்கிறது.

கரூர் மாயனூர்
டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும் இந்த காவிரி நீர் பயன்படுகிறது. அதுமட்டுமல்லாமல், மாயனூர் பகுதியில் இருந்து சென்னைக்கான கூட்டுக்குடிநீர் திட்டத்துக்கும் தண்ணீர் செல்கிறது. மதுரை, ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கும் காவிரி நீர் செல்கிறது. இதனால், லட்சக்கணக்கான மக்கள் இந்த நீரை குடிநீராகவும், விவசாயத்துக்கும் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில்தான் மாயனூர் கதவணை பகுதியில் டிஎம்சி அளவுக்கு தண்ணீர் தேக்கி வைக்கப்படும் இடத்தில், காவிரி நீரின் மீது பச்சை நிறத்தில் ஏதோ ஒரு பொருள் ஆயில் போல படர்ந்து மிதப்பதாக கூறப்படுகிறது.. தண்ணீரின் மேற்பரப்பில் பச்சை பசேல் என அந்த படலம் காணப்படுவதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்..
ஆயில் போல பச்சை நிற படலம்
மழைக்காலத்தையும், இரவு நேரங்களில் மேட்டூர் அணையில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறக்கப்படும் நேரத்தையும் பயன்படுத்தி, கரூர் பகுதியில் உள்ள சில தனியார் ஆலைகள் மற்றும் சாயப்பட்டறைகள் தாங்கள் வெளியேற்றும் சுத்திகரிக்கப்படாத கழிவுநீரை காவிரியாற்றில் திறந்து விடுகிறார்கள் என்று பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகிறார்கள்.
குறிப்பாக, இரவு நேரங்களில் ஆலைகள் மற்றும் சாயப்பட்டறைகளில் இருந்து கழிவுநீர் காவிரியில் திறந்து விடப்படுவதாகவும், அதனால் காவிரி நீரில் இந்த பச்சை நிற படலம் உருவாகி ஆயில் போல மிதப்பதாகவும் அவர்கள் சொல்கிறார்கள்.. இதனால் காவிரி பாயும் மாவட்டங்களில் விவசாயிகளும் பொதுமக்களும் இந்த தண்ணீரை பயன்படுத்த முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாம்.
சர்க்கரை ஆலை நிர்வாகம்
இந்த தண்ணீரை குடித்தால் பல்வேறு நோய்கள் ஏற்படும் அபாயம் இருப்பதாக பொதுமக்கள் அஞ்சுகின்றனர். ஏற்கனவே கரூர் மாவட்டம் புகழூர் செம்படாம்பாளையத்தில் செயல்படும் தனியார் சர்க்கரை ஆலையில் இருந்து வெளியேறும் கழிவுநீர் பாசன வாய்க்காலில் கலப்பதாக கூறி, நேற்று நன்னியூர் புதூரில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, கழிவுநீர் கலப்பதால் உடல்நலமும் நிலத்தடி நீரும் பாதிக்கப்படுவதாக பொதுமக்கள் தெரிவித்தனர். தகவலறிந்து மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளும், வாங்கல் போலீசாரும் சம்பவ இடத்துக்கு சென்றனர். பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள், சர்க்கரை ஆலை நிர்வாகத்துடன் பேசி கழிவுநீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். அதற்கு பிறகே பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
மாயனூர் கதவணை
இந்நிலையில், தற்போது மாயனூர் கதவணை பகுதியில் காவிரி நீரே பச்சை நிறத்தில் மாறி, ஆயில் போல படர்ந்து மிதப்பதாக வெளியாகியுள்ள தகவல் பொதுமக்கள் மத்தியில் மேலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது..
எனவே, மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் உடனடியாக மாயனூர் கதவணை பகுதியில் ஆய்வு மேற்கொண்டு, காவிரி நீரில் கலந்துள்ள பொருள் என்ன என்பது குறித்து பரிசோதனை செய்ய வேண்டும் என்றும், சுத்திகரிக்கப்படாத கழிவுநீரை காவிரியாற்றில் கலக்கும் ஆலைகள் மற்றும் சாயப்பட்டறைகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்களும் விவசாயிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்...!!



Click it and Unblock the Notifications
