இதில் யார் மீது தவறு.. வீடியோ பாருங்க .. தேசிய நெடுஞ்சாலையில் நடந்த சம்பவத்தின் பின்னணியை கூறுங்கள்
திருப்பூர்: தேசிய நெடுஞ்சாலைகளிலோ அல்லது மாநில நெடுஞ்சாலைகளிலோ இருசக்கர வாகனத்தில் பயணிக்கும் போது, உங்களின் இரு பக்கங்களிலும் வாகனங்கள் உங்களைப் பின்தொடர்ந்து வந்து கொண்டிருக்கலாம். உங்களுக்கு முன்னாலும் இரண்டு வாகனங்கள் சென்று கொண்டிருக்கலாம். அப்போது சாலையில் எதிர்பாராதவிதமாக ஒரு பள்ளம் வந்தால் என்ன செய்வீர்கள்? அப்படியான ஒரு சூழலில், பள்ளத்தில் நிலைதடுமாறிப் பின்னால் வந்த வாகனத்தில் சிக்கி ஒரு இருசக்கர வாகன ஓட்டி உயிரிழந்துவிட்டார்.
இதில் பின்னால் வந்த வாகனத்தின் தவறா, முன்னால் சென்ற வாகனத்தின் தவறா, வாகன ஓட்டியின் தவறா அல்லது தரமற்ற முறையில் சாலை அமைத்த அதிகாரிகளின் தவறா?

சமீபத்தில் நெட்டிசன் ஒருவர் சாலையில் நடந்த விபத்து தொடர்பான வீடியோ ஒன்றைப் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவுடன் அவர் வெளியிட்ட பதிவில், "தேசிய நெடுஞ்சாலையில் ஒரு கனரக லாரியை முந்திச் செல்லும்போது, ஸ்கூட்டரை ஓட்டிச் சென்றவர் நிலைதடுமாறுகிறார். முதல் பார்வையில், ஓட்டுநரைக் குறை சொல்வது எளிது. ஆனால், சாலையின் சீரற்ற அமைப்பையும், முறையான சாலையோரம் (Shoulder Lane) இல்லாததையும், சுதாரித்துக்கொள்ளக் கிட்டத்தட்ட இடமே இல்லாததையும் உற்றுப் பாருங்கள். இது வெறும் ஓட்டுநரின் தவறா, அல்லது சாலையின் அமைப்பே அவருக்கு இடமளிக்கவில்லையா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இதைப் பார்த்த நெட்டிசன்கள் பலர் தங்களின் கருத்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.
ஒரு நெட்டிசன் கூறுகையில், "இது அனுபவமில்லாத ஓட்டுநரின் தவறான முயற்சி. ஐரோப்பிய சாலைகளைப் போல இந்தியச் சாலைகள் பள்ளங்கள் இல்லாமல் இருப்பதில்லை என்பது நமக்குத் தெரியும். ஆனால், ஒரு ஓட்டுநர் பெரிய வாகனங்களிடமிருந்து போதுமான இடைவெளியைக் கடைப்பிடித்து, அவை கடந்து செல்ல வழிவிட்டு எப்போதும் இடதுபுறமாகவே செல்ல வேண்டும். இந்த நபர் தனக்கே ஆபத்தை வரவழைத்துக்கொண்டார்" என்று கூறியுள்ளார்.
இன்னொரு நெட்டிசன் கூறுகையில், "இந்தியாவில் மோசமான சாலைகள், மேடு பள்ளங்கள் மற்றும் விரிசல்கள் மிகவும் சாதாரணமாகக் காணப்படுகின்றன; இருப்பினும், சுங்கக் கட்டணத்தை தேசிய நெடுஞ்சாலைத் துறை துணிச்சலாக வசூலிக்கிறது. இத்தகைய மோசமான சாலைப் பணிகளால் ஏற்படும் உயிரிழப்புகளை, தேசிய நெடுஞ்சாலைத் துறை அல்லது சம்பந்தப்பட்ட மாநில அதிகார அமைப்பின் மீதான 'படுகொலை'க் குற்றமாகச் (பாரதிய நியாய சன்ஹிதா / ஐபிசி பிரிவு 302-ன் கீழ்) கருத வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்குப் பெருமளவில் இழப்பீடு வழங்கப்பட்டால் மட்டுமே இத்தகைய தரமற்ற பணிகள் நிறுத்தப்படும்" என்று ஆவேசப்பட்டுள்ளார்.
மூன்றாவது நெட்டிசன் கூறுகையில், "ஸ்கூட்டர்கள் உள்ளூர் வசதிக்காகவே தவிர, நெடுஞ்சாலைகளில் அதிவேகமாகச் செல்வதற்காக அல்ல. அதிலும் குறிப்பாக மழைக்காலத்திற்குப் பிறகு நம் சாலைகளின் நிலை எப்படி இருக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இந்தியாவில் தகுதியில்லாத நபர்களுக்கெல்லாம் ஓட்டுநர் உரிமம் வழங்குவதற்காக நான் எப்போதும் R.T.O-வையே குறை கூறுவேன்; ஏனெனில், அவர்கள் ஓட்டுநர்களுக்குப் போக்குவரத்து விதிகள் மற்றும் பொது ஒழுங்குமுறை குறித்துச் சரியான விழிப்புணர்வை ஏற்படுத்துவதில்லை" என்று காட்டமாகக் கூறியுள்ளார்.
⚠️ Sensitive content | Dashcam footageA scooter rider loses balance while passing a heavy truck on a highway. At first glance, it’s easy to blame the rider.But look closely at the road uneven pavement, no proper shoulder, and almost no space to recover.Was it just a riding mistake, or did the road leave no room for one?
— Sachin Unfiltered (@TheSachinView) October 5, 2026
பிரபல சினிமா விமர்சகர் பிரசாந்த் ரங்கசாமி இது பற்றிக் கூறுகையில், "கடன் வாங்கியோ, பொருட்களை விற்றோ அல்லது வேறு எப்படியோ பணம் ஏற்பாடு செய்து, இருசக்கர வாகனத்திற்குப் பதிலாகப் பயன்படுத்தப்பட்ட (Second-hand) மாருதி 800 காரையாவது வாங்குங்கள்; அப்போதுதான் இது போன்ற விபத்துகளில் உயிர் பிழைக்க உங்களுக்குக் குறைந்தது 50% வாய்ப்பாவது இருக்கும். இக்காலத்தில் நெடுஞ்சாலைகளில் இருசக்கர வாகனத்தில் பயணிக்கும்போது, ஒவ்வொரு நாளும் உயிருடன் வீடு திரும்புவதே ஒரு பெரிய அதிர்ஷ்டம்தான்" என்று கூறியுள்ளார்.
இப்படி ஒவ்வொருவரின் பார்வையும் வெவ்வேறாக இருக்கிறது.
இந்தச் செய்தியை எழுதியுள்ள என் பார்வை என்னவென்றால்: இருசக்கர வாகன ஓட்டிகள் எப்போதும் சாலையில் இடதுபுறமே செல்ல வேண்டும். வழக்கமாக முதல் இரண்டு லேன்களில் பெரிய வாகனங்கள்தான் செல்லும். அங்கு திடீரென பள்ளம் வந்தால், இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு அது பெரும் ஆபத்தாகவே முடியும். பெரிய வாகனங்கள் அப்பள்ளத்தைச் சாதாரணமாகக் கடந்துவிடும்; ஆனால் இருசக்கர வாகன ஓட்டிகள் நிலைதடுமாறிப் பள்ளத்தில் விழுந்துவிடுவார்கள். அதுமட்டுமல்லாமல், போக்குவரத்து விதிகளின்படி தேசிய நெடுஞ்சாலைகளில் முதல் இரண்டு லேன்கள் இருசக்கர வாகன ஓட்டிகள் செல்வதற்கானது கிடையாது. கடைசி லேனில் (இடதுபுறம்) தான் கவனமாகச் செல்ல வேண்டும்... இதுவே என் கருத்து.
உங்கள் கருத்தைக் கமெண்ட்டில் பகிருங்கள்!




Click it and Unblock the Notifications
