வாக்குப்பதிவு குறைந்தால் யாருக்கு சாதகம்? மதுராந்தகம் – தாராபுரத்தில் வெற்றி யாருக்கு? இதோ விவரம்
சென்னை: மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று அமைதியாக நடந்து முடிந்தது. இந்த 2 தொகுதிகளும் கடந்த ஏப்ரல் 23ம் தேதி நடந்த சட்டசபை தேர்தலை ஒப்பிடும்போது குறைவாக வாக்குகள் பதிவாகி உள்ளது. இப்படி வாக்குப்பதிவு குறைந்தால் அது யாருக்கு சாதகம்? ஆளும் கட்சிக்கா இல்லை எதிர்க்கட்சிக்கா? என்பதை இங்கு பார்க்கலாம்.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்புடன் நடந்து முடிவடைந்துள்ளது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு இன்று மாலை 6 மணிக்கு முடிவடைந்தது. அக்டோபர் 9 ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

மதுராந்தகம், தாராபுரம் 2 சட்டசபை தொகுதிகளிலும் கடந்த ஏப்ரல் மாதம் 23ம் தேதி நடந்த சட்டசபை தேர்தலை ஒப்பிடும்போது குறைந்த அளவில் தான் வாக்குகள் பதிவாகி உள்ளன. இதனால் வாக்குப்பதிவு குறைவு என்பது யாருக்கு சாதகம்? என்பது பற்றிய கேள்வி இப்போதே எழுந்துள்ள நிலையில் அதன் நிலவரம் பற்றி இங்கு பார்க்கலாம்.
பொதுவாக முந்தைய சட்டசபை தேர்தலை ஒப்பிடும்போது அடுத்த சட்டசபை தேர்தலில் வாக்குப்பதிவு குறைந்தால் அது ஆளும் கட்சிக்கு சாதகமாக தான் இருக்கும். வாக்குப்பதிவு அதிகரித்தால் அது ஆளும் கட்சிக்கு எதிரான மனநிலையாக பார்க்கப்படும். இந்த கணிப்பு பல தேர்தல்களில் அப்படியே பலித்துள்ளது.'சார்' எனும் வாக்காளர் பட்டியலுக்கு பிறகு பீகாரில் மட்டும் இது மாறியது.
மதுராந்தகம் தொகுதியை எடுத்து கொண்டால் இறுதி நிலவரப்படி மதுராந்தகம் சட்டசபை தொகுதியில் இன்று 85.90 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது. கடந்த ஏப்ரல் 23 சட்டசபை தேர்தலில் இந்த தொகுதியில் 92.28 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது. இதனை ஒப்பிட்டு பார்த்தால் இந்த முறை 6.38 சதவீதம் வரை ஓட்டுப்பதிவு குறைந்துள்ளது.
அதேபோல்தாராபுரம் சட்டசபை தொகுதிகளில் இன்று 80.31 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது. கடந்த ஏப்ரல் 23ம்தேதி நடந்த சட்டசபை தேர்தலில் இந்த தொகுதியில் மொத்தம் 88.53 சதவீதம் அளவுக்கு வாக்கு பதிவாகி இருந்தது. இதனை ஒப்பிடும்போது இந்த முறை 8.22 சதவீதம் வரை ஓட்டுப்பதிவு சரிந்துள்ளது.
இதனால் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 2 சட்டசபை தொகுதிகளிலும் ஆளும் கட்சியின் வேட்பாளர்களுக்கு சாதகமாக ரிசல்ட் வரலாம் என சொல்லப்படுகிறது. இருப்பினும் நாம் ஒரு விஷயத்தை மனதில் வைத்து கொள்ள வேண்டும். அது என்னவென்றால் கடந்த சட்டசபை தேர்தலில் மதுராந்தகம் தொகுதியில் அதிமுக சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்ற மரகதம் குமரவேல் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் சேர்ந்தார். தற்போது அவரே மீண்டும் தவெக வேட்பாளராக போட்டியிட்டுள்ளார்.
அதேபோல், கடந்த சட்டசபை தேர்தலில் தாராபுரம் தொகுதியில் அதிமுகவில் வெற்றி பெற்று எம்எல்ஏவான சத்யபாமா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தார். தற்போது அவரே தவெக சார்பில் போட்டியிட்டுள்ளார். வெற்றி பெற்றவுடனே இருவரும் அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ததால் இருவருக்கும் களத்தில் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால், மக்களின் மனநிலை என்னவாக உள்ளது? என்பது புரியாத புதிராக உள்ளது. வாக்குப்பதிவு குறைந்து இருந்தால் வாக்களித்தவர்கள் தவெக வேட்பாளர்களுக்கு எதிராக ஓட்டு செலுத்தி இருந்தால் ரிசல்ட் மாற வாய்ப்புள்ளது. இதனால் இந்த 2 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முடிவுகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளன.
மதுராந்தம் தொகுதியை எடுத்து கொண்டால் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேலை தவிர திமுக சார்பில் பரந்தாமனும், அதிமுக சார்பில் கணிதா சம்பத்தும், நாம் தமிழர் கட்சி சார்பில் ஜானகிராமனும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சுகந்தி என்பவரும் வேட்பளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். மொத்தம் 27 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதனால் மதுராந்தகத்தில் ஐந்து முனை போட்டி நிலவுகிறது.
தாராபுரம் அதிமுக சார்பில் பானுமதி, திமுக சார்பில் சுகன்யா, இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் லட்சுமணன், நாம் தமிழர் சார்பில் கார்த்திகா உள்ளிட்டவர்கள் வேட்பாளர்களாக உள்ளனர். 2 தொகுதிகளிலும் 5 முனை போட்டி என்றாலும், ஆளும் தவெக, திமுக, அதிமுக இடையேதான் கடும் போட்டி நிலவுகிறது. அதிமுகவில் இருந்து ராஜினாமா செய்துவிட்டு சென்ற எம்எல்ஏக்கள் என்பதால் இந்த தொகுதியில் மீண்டும் வெற்றி பெற்று தவெகவுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்பதில் அந்த கட்சியினர் தீவிரமாக களப்பணி செய்துள்ளனர். திமுகவினரும் இடைத்தேர்தலில் பம்பரமாக சுற்றி வேலை செய்துள்ளனர்.
இதனால் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இந்த 2 தொகுதி இடைத்தேர்தலில் யார் வெல்வார்கள்? என்பதை அறிய ரிசல்ட் நாளான அக்டோபர் 9 ம் தேதி வரை நாம் காத்திருக்க வேண்டும்.




Click it and Unblock the Notifications
