தாக்கரேவிற்கு அடுத்த அடி.. 6 எம்பிக்களை தூக்கிய ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா! சபாநாயகர் ஒப்புதல்
மும்பை: மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரேவிடம் இருந்து சிவசேனா கட்சியை பறித்த ஏக்நாத் ஷிண்டே தற்போது மீண்டும் தனது வேலையை காட்டி உள்ளார். உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா (யுபிடி) அணியில் செயல்பட்டு வந்த 6 எம்பிக்களை ஏக்நாத் ஷிண்டே தன்கட்சியான சிவசேனாவிற்கு இழுத்த நிலையில் அதற்கு லோக்சபா சபாநாயகர் ஓம்பிர்லா இன்று ஒப்புதல் வழங்கி உள்ளார். இதனால் கட்சி தாவல் தடை சட்டத்தில் கூட உத்தவ் தாக்கரேவால் நடவடிக்கை கோர முடியாத நிலையில் உத்தவ் தாக்கரே இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

மகாராஷ்டிரா முன்னாள் முதல்வராக இருந்தவர் உத்தவ் தாக்கரே. சிவசேனா கட்சியின் தலைவராக செயல்பட்டு வந்தார். காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ஆதரவில் உத்தவ் தாக்கரே மகாராஷ்டிரா முதல்வராக இருந்த 2022ம் ஆண்டில் சிவசேனா 2 ஆக உடைந்தது. உத்தவ் தாக்கரே முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.
ஏக்நாத் ஷிண்டே தலைமையில் எம்எல்ஏக்கள், எம்பிக்கள் பாஜகவிற்கு ஆதரவாக சென்று மகாராஷ்டிரா முதல்வரானார். அதுமட்டுமின்றி அதிகமாக எம்பி, எம்எல்ஏக்கள் எங்களின் பக்கம் தான் உள்ளனர் என்று கூறி சிவசேனாவை ஏக்நாத் ஷிண்டே கைப்பற்றினார். இதனால் உத்தவ் தாக்கரே சிவசேனா (யுபிடி) அணி என்ற பெயரில் செயல்பட்டு வருகிறார்.
தற்போது உத்தவ் தாக்கரேவின் சிவசேனா (யுபிடி) அணிக்கு மொத்தம் 20 எம்எல்ஏக்கள் உள்ளனர். லோக்சபாவில் 9 எம்பிக்களும், ராஜ்யசபாவில் 2 எம்பிக்களும் உள்ளனர். இந்நிலையில் தான் தற்போது 6 லோக்சபா எம்பிக்கள் உத்தவ் தாக்கரே மீது அதிருப்தியடைந்தனர். அதன்படி சஞ்சய் உத்தம்ராவ் தேஷ்முக், சஞ்சய் ஹரிபாவ் ஜாதவ், பவ்சாஹேப் ராஜாராம் வக்சாரே, ஓம்பிரகாஷ் பூபால்சிங் நிம்பல்கர், சஞ்சய் தினா பட்டீல், நாகேஷ் பாபுராவ் பட்டீல் உள்ளிட்ட 6 பேர் உத்தவ் தாக்கரே அணியில் இருந்து விலகி ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனாவில் சேர உள்ளதாக தகவல்கள் வெளியாகின.
அதன்படியே அந்த 6 எம்பிக்களும் ஏக்நாத் ஷிண்டேவை தனியாக சந்தித்து ஆலோசனை நடத்தினர். உத்தவ் தாக்கரே அழைத்த மீட்டிங்கில் பங்கேற்காமல் புறக்கணித்தனர். இந்நிலையில் தான் தாங்கள் 6 பேரும் உத்தவ் தாக்கரேவின் சிவசேனா (யுபிடி) அணியில் இருந்து விலகி ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா கட்சியுடன் சேர்ந்து செயல்பட உள்ளதாக லோக்சபா சபாநாயகர் ஓம்பிர்லாவிடம் கடிதம் வழங்கினர். அதற்கு இன்று ஓம்பிர்லா ஒப்புதல் வழங்கி உள்ளார். அதன்படி உத்தவ் தாக்கரேவை விட்டு பிரிந்துள்ள சிவசேனா (யுபிடி) அணியை சேர்ந்த 6 எம்பிக்களும் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனாவுடன் சேர்ந்து செயல்பட உள்ளனர்.
இது உத்தவ் தாக்கரேவுக்கு விழுந்த அடுத்த அடியாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் தற்போது கட்சி மாறி உள்ள 6 எம்பிக்களை கட்சி தாவல் தடை சட்டத்தின் மூலமாக உத்தவ் தாக்கரேவால் தகுதி நீக்கம் கூட செய்ய முடியாது. கட்சி தாவல் தடை சட்டத்தின்படி ஒரு கட்சியின் 3ல் 2 பங்கு உறுப்பினர்கள் கட்சி மாறினால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது. அதன்படி பார்த்தால் லோக்சபாவில் உத்தவ் தாக்கரே அணிக்கு மொத்தம் 9 எம்பிக்கள் உள்ளனர். இதில் 6 பேர் தற்போது ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா பக்கம் தாவி உள்ளனர். இது 3ல் 2 பங்காகும். இதனால் அவர்கள் மீது கட்சி தாவல் தடை சட்டம் பாய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனாவிற்கு 7 லோக்சபா எம்பிக்கள் உள்ளனர். தற்போது உத்தவ் தாக்கரேவின் சிவசேனா (யுபிடி) அணியின் 6 லோக்சபா எம்பிக்கள் இணைந்துள்ளனர். இதனால் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா எம்பிக்களின் எண்ணிக்கையின் 13 ஆக அதிகரித்துள்ளது.


Click it and Unblock the Notifications
