சென்னையில் காலை நேரங்களில்.. ஒருவழிபாதையாக மாறும்.. மிக முக்கிய சாலைகள்.. நோட் பண்ணுங்க
சென்னை: சென்னையில் காலை நேரங்களில் பள்ளி வாகனங்களுக்கான போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் விதமாக பல இடங்களில் ஒருவழி பாதை திட்டம் கொண்டு வரப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை மாநகராட்சி மற்றும் சென்னை போக்குவரத்து காவல்துறை இணைந்து பள்ளிகள் அருகே அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், ஒரு வழிப்பாதை போக்குவரத்து முறையை அமல்படுத்த திட்டமிட்டுள்ளன. விரைவில் இந்த புதிய போக்குவரத்து ஏற்பாடுகள் நடைமுறைக்கு வர உள்ளன.

பள்ளிகள் அருகே ஒரு வழிப்பாதை போக்குவரத்து
பள்ளிகள் இந்த மாத தொடக்கத்தில் மீண்டும் திறக்கப்பட்ட பிறகு, போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ள பகுதிகளில் ஒரு வழிப்பாதை போக்குவரத்து ஏற்பாடுகளை செய்வதற்காக போக்குவரத்து காவல்துறை பள்ளிகளுடன் ஆய்வு செய்து வருகிறது. இதுகுறித்து பள்ளிகள் தங்கள் பகுதிகளில் உள்ள பெற்றோர்களுடன் ஆலோசனைகளை நடத்தி வருகின்றன. சென்னை மாநகராட்சி சார்பில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அருகே பாதசாரிகள் செல்லும் பாதைகளில் பாதுகாப்பு தடுப்புகள் அமைக்கப்பட்டதால், அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக பெற்றோர் பள்ளி நிர்வாகத்திடம் தெரிவித்தனர்.
பள்ளிகள் அருகே நடைபாதைகளில் தடுப்புகள் அமைக்கும் பணி காரணமாக, பள்ளிகளின் அருகில் வாகனங்களை நிறுத்துவதற்கு போதுமான இடமில்லை என்றும், தங்கள் குழந்தைகள் மழலையர் மற்றும் ஆரம்பப் பிரிவுகளுக்குள் பாதுகாப்பாக சென்று சேரும் வரை சில நிமிடங்கள் காத்திருக்க வேண்டியிருப்பதாகவும் பெற்றோர்கள் புகார் தெரிவித்தனர்.
கடந்த கல்வி ஆண்டில், போக்குவரத்து காவல்துறை, மழலையர் மற்றும் ஆரம்பப் பிரிவுகளுக்காக பள்ளிகள் அருகே சென்னை மாநகராட்சி அமைத்திருந்த அகலமான நடைபாதைகளில் வாகனங்களை நிறுத்த அனுமதித்தது. பல பள்ளிகள் வளாகத்தில் பெற்றோர்களுக்கான வாகன நிறுத்தும் இடத்தை ஒதுக்க மறுத்ததால், கடந்த ஆண்டு பள்ளிகள் அருகே இருந்த மாநகராட்சியின் அகலமான நடைபாதைகள் வாகனங்களை நிறுத்த பயன்படுத்தப்பட்டன. ஆனால், மாணவர்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் இந்த ஆண்டு மாநகராட்சி நடைபாதைகளில் தடுப்புகளை அமைத்துள்ளது.
மன்ற கூட்டத்தில் ஆலோசனை
இந்நிலையில், பள்ளிகள் அருகே போக்குவரத்து நெரிசல் பிரச்சனை குறித்து இந்த வாரம் நடைபெற உள்ள மாநகராட்சி மன்ற கூட்டத்தில் விவாதிக்க கவுன்சிலர்கள் திட்டமிட்டுள்ளனர். கல்வி நிறுவனங்களுக்கு வரும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், காசா மேஜர் சாலை மற்றும் எத்திராஜ் சாலை போன்ற பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் இருப்பதாக குடியிருப்பாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
அதிக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் இருப்பதால் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது. சென்னை மாநகராட்சியின் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்திலிருந்து நிகழ்நேர தரவுகளைப் பெற்று, போக்குவரத்து காவல்துறை அதிகாரிகளுடன் மாநகராட்சி அதிகாரிகள் கலந்துரையாடி போக்குவரத்து பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்று திட்டமிடப்பட்டு உள்ளது.
சாந்தோம் நெடுஞ்சாலை மற்றும் அதனை சுற்றியுள்ள சாலைகளில் உள்ள பள்ளிகளால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைத் தடுக்க குட்ஷெரி சாலை மற்றும் பி.வி. கோயில் தெருவில் ஒரு வழிப்பாதை போக்குவரத்தை அமல்படுத்த வேண்டும் என்று குடியிருப்பாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காலை நேர போக்குவரத்து நெரிசலில் வாகனங்கள் 100 அடி தூரத்தை கடக்க 15 நிமிடங்கள் ஆகிறது. மாநகராட்சி ஆக்கிரமிப்புகளை அகற்றி, 25 அடியிலிருந்து 12 அடியாகக் குறைந்துள்ள பஜார் சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும். குட்ஷெரி சாலையில் இருந்து சிட்டி சென்டர் வரை உள்ள பஜார் சாலை மற்றும் பி.வி. கோயில் தெரு முழுவதையும் ஒரு வழிப்பாதையாக மாற்ற வேண்டும் என்றும் போலீசார் திட்டமிட்டு வருகின்றனர்.
இவ்வாறு, பள்ளிகள் அருகே போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கு சென்னை மாநகராட்சி மற்றும் போக்குவரத்து காவல்துறை இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications