Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கம்போடியாவுக்கும் பல்லவ மன்னர்களுக்கும் பேரரசன் ராஜேந்திர சோழனுக்குமான உறவுகளும் தொடர்புகளும்!

Subscribe to Oneindia Tamil

அங்கோர்: கம்போடியாவின் சியம்ரீப் நகரின் மையப்பகுதியில் சோழப் பேரரசன் ராஜேந்திர சோழனுக்கு சிலை அமைக்கப்பட இருக்கிறது; இந்த சிலை அடுத்த ஆண்டு திறக்கப்பட உள்ளது என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எழுதிய கடிதத்தில் அங்கோர் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் சீனுவாசராவ் தெரிவித்துள்ளார். அதே கடிதத்தில் கம்போடியாவுக்கும் பல்லவ மன்னர்கள், சோழப் பேரரசன் ராஜேந்திர சோழனுக்குமான தொடர்புகளும் விரிவாக விவரிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலினுக்கு சீனுவாசராவ் எழுதிய கடிதம்: தமிழரின் பேர் சொல்லும் சோழப் பேரரசன் இராசேந்திரன் பிறந்த தினமான ஆடித்திருவாதிரை நன்னாளை அரசு விழாவாக அறிவித்து, தமிழரின் புகழை மீண்டும் நிலைநாட்டிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை, அங்கோர் தமிழ்ச் சங்கம் சார்பில் பாராட்டி பெருமை கொள்கிறேன். நானும் எனது நண்பர் ஞானசேகரனும் 1986 முதல் 2016 வரை , சுற்றுச்சூழல் பாதுகாப்பு, அணுஆயுத ஒழிப்பு, மழைக் காடுகளைப் பாதுகாத்தல், உலக வெப்பமயமாதல் தடுப்பு போன்ற எண்ணற்ற உயரிய நோக்கங்களுக்காக சுமார் 30 வருடங்களாக உலகத்தை தரைமார்க்கமாக எட்டு முறை பயணம் செய்து பல விழிப்புணர்வுப் பிரச்சாரங்களை மேற்கொண்டு பல பரப்புரைகளைச் செய்தோம்.

1996-ல் எங்களது மூன்றாவது உலகப்பயணத்தையும், 2008-ல் ஏழாவது உலகப் பயணத்தையும் தலைவர் கலைஞர் கட்டியணைத்து வாழ்த்தி வழியனுப்பி வைத்தது என்பது கூடுதல் சிறப்பான செய்தி. எங்களது பயணம் முடிந்ததும், 2015க்குப் பிறகு கம்போடியாவில் காலூன்றினோம்.

மேலும் சங்கம் வைத்து தமிழை வளர்த்த நம் முன்னோர் வழியில் அங்கோர் தமிழ்ச் சங்கம் ஒன்றை நிறுவி அதனூடாக கம்போடியாவிற்கும், நமது தமிழகத்திற்கும் இருக்கும் வரலாற்றுத் தொடர்பை உறுதிபடுத்தும் நோக்கில் உலகத் தமிழர் மாநாடுகள் மற்றும் நாட்டிய நிகழ்வுகள் முதலியவற்றை கம்போடிய அரசின் துணையோடு வெற்றிகரமாக தமிழகத்திலிருந்து, பன்னாட்டுத் தமிழர் நடுவமும் எங்களுக்கு உறுதுணையாகச் செயலாற்றி வருகிறது. மேலும், திருவள்ளுவர் சிலையை நிறுவும் நோக்கத்தில் தமிழ் சான்றோர்களையும், தமிழ் நல விரும்பிகளையும் மற்றும் அனைவரையும் சேர்த்து 2020ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், ஆறு நாள் நிகழ்வாக நடத்த திட்டமிட்டிருந்தனர். இதற்காக கம்போடிய அரசின் அனுமதியோடு அங்கோர் நகருக்கு அருகில் உள்ள சியம்ரீப் நகரின் அரசு மைய வளாகத்தில் இடமும் பெறப்பட்டு இருந்தது. நுண்ணுயிரித் தாக்கத்தால் தள்ளி வைக்கப்பட்டு இருந்த இந்நிகழ்வு வருகிற 2022 ஆம் ஆண்டு மே மாதம் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் திருக்குறளை கெமர் மொழியில்,மொழிப்பெயர்த்தும் வைத்துள்ளோம். காஞ்சிபுரத்திலிருந்து, பல்லவ இளவரசன் பிரபு கவுண்டன் 2-ம் நூற்றாண்டில் இப்பகுதிக்கு வந்து சோமா என்கிற இளவரசியைக் கரம் பிடித்து இப்பகுதியை குமரி அரசு எனப் பெயரிட்டு ஆட்சி செய்தான். நாளடைவில், குமரி அரசு , குமர் அரசு, கெமர் அரசாக திரிந்து இன்றும் கம்போடிய மக்கள் கெமர் மக்கள் என்றே அழைக்கப்படுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல, தமிழகத்தில், 7-ம் நூற்றாண்டைச் சேர்ந்த காஞ்சிப் பேரரசன் இரண்டாம் பரமேசுவர வர்மாவிற்கு பிறகு வாரிசு இல்லாத காரணத்தால் ,தங்களின் இரத்தச் சொந்தமான கம்புதேசத்தைச் சேர்ந்த கெமர் இளவரசர் 13 வயது நிரம்பிய இரண்டாம் நந்திவர்மனை காஞ்சிபுரம் அழைத்து வந்து அரியாசணத்தில் அமர வைத்து ஆளத் தொடங்கினர். மேலும் இவர் வாரிசுகள் ஏறத்தாழ 156 வருடங்கள் தொடர்ச்சியாக ஆண்டனர் என தமிழர் வரலாறு கூறுகிறது.

இவ்வாறாக தமிழர்களுக்கும், கெமர் மக்களுக்குமான தொடர்பு அளப்பரியது. நம்முடைய தாய்வழிச்சமுதாய முறையை இன்றும் கடைப்பிடித்து பெண்ணிற்கு முக்கியத்துவம் கொடுத்து பெண்ணே குடும்ப முடிவுகள் எடுப்பதிலிருந்து, தீச்சட்டி எடுக்கும் உரிமை வரையில் உள்ளது. மேலும் பெயர்கள் கூட மல்லிகா, மல்லன், சம்பங்கி, சந்திரா, இரத்தினா, வணக்கம் என்று எங்கு பார்த்தாலும் தமிழ் பெயர்களைக் காண முடிகிறது. விரால் மீனை திருவிரால் என்றும் அரிசி வகைக்கு காய்மல்லி என்றும் கப்பலுக்கு நாவாய் என்ற தமிழ்ச் சொற்களே வழக்கத்தில் இருக்கிறது. தற்போதைய கம்போடிய மன்னரது பெயர் சிகாமணி என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழர் திருவிழாவாம் சித்திரை தின கொண்டாட்டத்தில் இருந்து தை விழா முன்னோர்களை வழிபடும் மாகாளி அம்மாவாசை என அனைத்தும் கம்போடிய மக்களிடையே பழக்கத்தில் உள்ளது. வாழைமரம் கட்டுவது தொடங்கி பொங்கலிடுதல், எருதுவிடும் விழா, கார்த்திகை தீப விழா என அனைத்தும் உள்ளது. இவையே நமது இரு கலாச்சார ஒற்றுமைக்கு சான்றாக உள்ளது.

Cambodia to unveil Rajendra Chola statue in 2022

காஞ்சிபுரம் மற்றும் கம்புதேசத்து மன்னர்கள் நட்பை பேணி வந்தனர் என்பதை கடாரத்து மன்னன் சங்கரம விஜயதுங்கவர்மனுக்கும், இராசேந்திர சோழனுக்கும் இடையே கி.பி 1025 ல் நடந்த போர் நிரூபிக்கிறது. கடாரத்தின் மன்னன் சங்கரம விஜயதுங்கவர்மன், கம்புதேசத்தின் மீது போர் தொடுத்தபோது, கம்புதேசத்து பேரரசன் முதலாம் சூரியவர்மன், தனது நண்பன் இராசேந்திர சோழனை உதவிக்கு அழைத்தான். நண்பனையும், கம்புதேசத்தையும் காக்க, சோழப் பேரரசன் இராசேந்திர சோழன் வரலாற்று சிறப்புமிக்க கடாரப் படையெடுப்பை மேற்கொண்டான். ஏறத்தாழ ஒரு இலட்சம் கடற்படையை தன்னகத்தே வைத்து போரிட்டு விஜயதுங்கவர்மனை அடிமைப்படுத்துகிறான். தாம்பரலிங்கா மற்றும் இலங்கசுக்கா ஆகிய நாடுகளையும் கைப்பற்றுகிறான். இம்மாபெரும் வெற்றியைத் தேடித் தந்த நண்பணுக்கு முதலாம் சூரியவர்மன் தங்கத்தேரை இராசேந்திர சோழனுக்கு பரிசளித்ததாகவும் கூறப்படுகிறது.

இப்படிப்பட்ட மாபெரும் சோழ மன்னன் இராசேந்திரனுக்கு கம்போடியாவில் சிலை வைக்கும் முயற்சியை 2018ஆம் ஆண்டிலிருந்தே அங்கோர்தமிழ்ச் சங்கம் முன்னெடுத்து வருகிறது. கம்போடியா- வின் கலை மற்றும் பண்பாட்டுத் துறையினரோடு சேர்ந்து இப்படிப்பட்ட ஆக்கப்பூர்வமான செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் இந்நாடு முழுவதும் சிதிலமடைந்து கிடக்கும் சிவலிங்கங்களை மீட்கும் முயற்சியையும் திட்டமிட்டு வருகிறோம்.

மேலும் நமது உறவைப் பலப்படுத்த 2019 ஆம் ஆண்டில் ஜூன் மாதம் கம்போடியாவின் கலை மற்றும் பண்பாடுத் துறையின் இயக்குநர் திரு.மோர்ன் சொப்பீப் மற்றும் திரு.கெமரா அவர்களையும் தமிழ்நாட்டிற்கு அழைத்து வந்து காஞ்சி கைலாசநாதர் கோயில், மாமல்லபுரம் மற்றும் தஞ்சை பெரியகோயில்,கங்கை கொண்ட சோழபுரம் ,தில்லை நடராசர் கோயில் ஆகியவற்றை சுற்றிக்காட்டி நமது வரலாற்றுத் தொடர்பை உறுதிபடுத்த அழைத்து வந்தோம். அவர்களும் மகிழ்ச்சியாக அனைத்தையும் கண்டறிந்து ,பல்கலைக்கழகம், கல்லூரி, செய்தித் தொடர்பாளர்கள் நிகழ்வு என அனைத்திலும் பங்குக் கொண்டு கலந்துரையாடினர்.

இதன் முக்கிய நிகழ்வாக சியம்ரீப் நகரின் மையப்பகுதியில் இராசேந்திர சோழனுக்குச் சிலை வைக்கவும், இரண்டு ஏக்கர் பரப்பளவில் நமது தமிழர் - கெமர் வரலாற்றைப் பறைச்சாற்றுகின்ற அருங்காட்சியகம் அமைப்பதற்கும் இடம் தருவதாக ஒப்புக் கொண்டுள்ளனர். இராசேந்திரன் சிலை திறப்பு விழாவை தமிழக அரசையும் மற்றும் உலகம் முழுவதிலுமுள்ள தமிழ்ச் சங்கங்களையும் ஒன்றிணைத்து மிகப் பிரம்மாண்டமான விழாவாக 2022ஆம் ஆண்டில் நடத்துவதற்கு அங்கோர் தமிழ்ச் சங்கமும், பன்னாட்டு தமிழர் நடுவமும் திட்டமிட்டு வருகிறது.

இவ்வாறாக அங்கோர் தமிழ்ச் சங்கம் எடுத்த பெருமுயற்சியின் விளைவாக கம்போடியாவில் இராசேந்திரனுக்கு சிலை நிறுவ இருக்கும் அதே வேளையில். நமது தமிழக முதல்வர் மாண்புமிகு ஸ்டாலின் அவர்களின், இந்த அறிவிப்பு மிகவும் போற்றதலுக்குரியது. அவருக்கு அங்கோர் தமிழ்ச் சங்கம் மனதார பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறது. இவ்வாறு அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+