சுட்டு தள்ளுங்கள்.. பாஜக பார்த்துக்கும்! அண்ணாமலை சொல்லியதாக பரவும் வீடியோ! உண்மை என்ன?
சென்னை: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசியதாக இணையத்தில் வீடியோ ஒன்று பரவி வருகிறது. அது உண்மை தானா.. அவர் எங்கே எதற்காக இதுபோல பேசினார் என்பது குறித்துப் பார்க்கலாம்.
தமிழ்நாடு பாஜக மாநில தலைவராக அண்ணாமலை இருக்கிறார். பாஜகவை வளர்க்க இப்போது அண்ணாமலை தமிழ்நாடு முழுக்க நடைப்பயணம் செய்து வருகிறார். இதற்கிடையே அவர் குறித்த வீடியோ ஒன்று இப்போது இணையத்தில் பரவி வருகிறது.

அண்ணாமலை பொதுவாகப் பல விஷயங்கள் குறித்தும் அதிரடி கருத்துகளைத் தெரிவிப்பதை வாடிக்கையாக வைத்துள்ளார். கடந்த காலங்களில் செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறிய பல கருத்துகள் இணையத்திலும் டிரெண்டாகி வருகிறது.
அண்ணாமலை: இதற்கிடையே அண்ணாமலை கூறியதாக வீடியோ ஒன்று இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. அந்த வீடியோவில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, "உங்களிடம் துப்பாக்கி இருந்தால்.. அதற்கான தோட்டாக்கள் இருந்தால்.. முதலில் சுட்டுவிடுங்கள்.. அதன் பிறகு எங்களிடம் வாங்க.. பாஜக உங்களைப் பார்த்துக் கொள்ளும்" என்று அவர் கூறுகிறார். வெறும் 10 நொடிகளே ஓடும் இந்த வீடியோ இப்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. இதை பேஸ்புக், ட்விட்டர் எனப் பல தளங்களில் பலரும் பகிர்ந்துள்ளனர்.
தமிழ்நாடு மாநில பாஜக தலைவர் வன்முறையைத் தூண்டும் வகையில் பேசுவதாகப் பலரும் சாடி வருகிறார்கள். அண்ணாமலை இப்போது மாநிலம் முழுக்க நடைப்பயணம் சென்று கொண்டிருக்கும் நிலையில், அப்போது இப்படி வன்முறையைத் தூண்டும் வகையில் அண்ணாமலை பேசியதாகவும் பலரும் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். உண்மை என்ன.. அண்ணாமலை என்ன அர்த்தத்தில் இப்படிப் பேசினார் என்பது குறித்துப் பார்க்கலாம்.
உண்மை என்ன: இந்த வீடியோவை நாம் ஆய்வு செய்யும் போது இது புது வீடியோ இல்லை என்பது நமக்குத் தெரிகிறது. அண்ணாமலை கடந்த பிப். மாதம் பேசியதை ஏதோ அவர் இப்போது பேசியது போலப் பொய்யாகச் சிலர் இணையத்தில் பகிர்ந்துள்ளனர். மேலும், இந்த ஓர்ஜினல் வீடியோவில் ராணுவ வீரர் படுகொலை என்ற போர்டும் அவரது மைக்கின் கீழே பார்க்க முடிகிறது. இந்த போர்ட் தெரியாத வகையில் கட் செய்தே அண்ணாமலை வீடியோவை இப்போது இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.
இருப்பினும், அந்த முழு வீடியோவில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, "எல்லையில் இருக்கும் வீரர்களுக்கு நான் ஒன்றைச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.. (மாநில) அரசு உங்களுடன் இல்லாவிட்டாலும் நாங்கள் உங்களுடன் இருக்கிறோம்.. எல்லையில் மோதல் நடக்கும் போது உங்கள் கையில் துப்பாக்கி இருக்கிறது, துப்பாக்கியில் தோட்டா இருக்கிறது,
உத்தரவு போட மோடி இருக்கிறார், சுட்டுவிட்டு வாங்க.. தமிழகத்தில் மற்றதை பாஜக பார்த்துக் கொள்ளும். இந்திய ராணுவத்தில் உள்ள ஒவ்வொரு தமிழ் வீரரும் எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளனர்..
மிஸ்லீடிங்: நமது ராணுவ வீரர்களுக்கு இங்குத் தலைவர்களின் ஆதரவு முழுமையாக இருக்கிறது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள்" என்று அவர் கூறுகிறார். கடந்த பிப். மாதம் இந்திய ராணுவ வீரர் திமுக கவுன்சிலர்கள் உள்ளிட்டோரால் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதற்குக் கண்டனம் தெரிவித்து பாஜக ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியது. அப்போது நடந்த நிகழ்ச்சியில் தான் அண்ணாமலை இப்படிப் பேசியிருந்தார்.
அண்ணாமலையும் இந்த வீடியோவை அவரே தனது ட்விட்டரிலும் பகிர்ந்திருந்தார். அதாவது அண்ணாமலை இப்படிக் கூறியது உண்மை தான் என்றாலும் அதை அவர் இப்போது பேசவில்லை. மேலும், அதைக் கட் செய்து போட்டதால் அவர் கூற வரும் அர்த்தமே மாறிவிட்டது.

Fact Check
வெளியான செய்தி
பிரச்சினை என்றால் சுட்டுவிட்டு வாங்க.. பாஜக உங்களை பார்த்துக் கொள்ளும் - அண்ணாமலை
முடிவு
அவர் ராணுவ வீரர் தொடர்பான நிகழ்வில் வேறு ஒரு அர்த்தத்தில் அதை பேசுகிறார். கட் செய்து இது பரபப்படுகிறது.












Click it and Unblock the Notifications