முன்னாள் அமைச்சர் பெயரில் பல கோடி வசூல்? அரசகுமாருக்கு நெருக்கமானவர் கைது உறுதி; முன்ஜாமீன் தள்ளுபடி
சென்னை: சட்டப்பூர்வ அனுமதிகளைப் பெற்றுத் தருவதாக தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் ரூ.100 கோடி ஏமாற்றியதாக தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி.அரசகுமாரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கடந்த மாதம் இறுதியில் கைது செய்தனர். அவரை தொடர்ந்து தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கத்தின் பொருளாளர் முத்துக்குமாரை கைது செய்வதற்காக போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். அவர் உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரியிருந்தார். ஆனால் உயர்நீதிமன்றம் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்துள்ளது.
தனியார் பள்ளிகளுக்கு தமிழ்நாடு அரசின் நிரந்தர அங்கீகாரம் உள்ளிட்ட அனுமதியை பெற்று தருவதாக கூறி கடந்த தி.மு.க., ஆட்சிக்காலத்தில் பல கோடி ரூபாய் வசூலித்ததாக புகார் எழுந்தது. சென்னை தி.நகரில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் செயலாளர் இளங்கோவன், சென்னை காவல் ஆணையரிடம் கடந்த மாதம் புகார் அளித்தார்.

அந்த புகாரில், "சென்னை சாலிகிராமத்தில் 'தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம்' என்ற பெயரில் பதிவு செய்யப்படாத சங்கத்தை நடத்தி வரும் பி.டி.அரசகுமார், தனக்குள்ள அரசியல் மற்றும் அதிகார தொடர்புகளைப் பயன்படுத்தி தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், பள்ளித் தரம் உயர்வு, டிடிசிபி, சிம்டிஏ அனுமதிகள் மற்றும் பிற சட்டப்பூர்வ அனுமதிகளைப் பெற்றுத்தருவதாகக் கூறினார்.
அத்துடன் தமிழ்நாடு முழுவதும் பல தனியார் பள்ளி நிர்வாகிகளிட மிருந்து பணம் பெற்றுக் கொண்டு, உறுதியளித்தபடி அனுமதிகள் பெற்றுத் தராமலும், பணத்தை திரும்ப தராமலும் சுமார் ரூ.100 கோடிக்கும் அதிகமான தொகையை வசூலித்து ஏமாற்றியுள்ளார். எனவே அரசகுமார் மற்றும் சங்க நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" இவ்வாறு புகார் மனுவில் கூறியிருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த மத்திய குற்றப்பிரிவு போலீசார், தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி.அரசகுமாரை (59) கைது செய்தனர். மேலும் பலரை தேடி வருகின்றனர்.
இந்நிலையில், இந்த வழக்கில் தனக்கு முன்ஜாமீன் வழங்கவேண்டும் என்று தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கத்தின் பொருளாளர் முத்துக்குமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது.
போலீஸ் தரப்பில் ஆஜரான வக்கீல், "முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தனக்கு நெருக்கமானவர் எனக் கூறி, மனுதாரர் இந்த மோசடி செய்துள்ளார். இந்த மோசடி சம்பந்தமாக இதுவரை 47 பள்ளிகளின் நிர்வாகிகள் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளனர். பல பள்ளிகளிடம் இருந்து சுமார் ரூ.100 கோடி வசூலித்துள்ளனர். வழக்கு விசாரணை ஆரம்ப கட்ட நிலையில் உள்ளதால், மனுதாரருக்கு முன்ஜாமீன் வழங்கக்கூடாது" என்று வாதிடப்பட்டது.
இதை ஏற்றுக்கொண்ட உயர்நீதிமன்ற நீதிபதி இளந்திரையன், முன்ஜாமீன் வழங்க மறுத்து, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.














Click it and Unblock the Notifications