திருமாவளவன் மீதான நம்பிக்கையை சிதைக்கும் முயற்சி நடக்கிறதா? தடுமாறுவதன் பின்னணி
சென்னை: அண்மை காலத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நிறைய தடுமாறுவதாக அரசியல் நிபுணர்கள் கூறுகிறார்கள். அதற்கு காரணம் இல்லாமலும் இல்லை.. ஆர்எஸ்எஸ் பிள்ளை விஜய் என்று கூறிவிட்டு அவருடன் கூட்டணி வைத்தது, தவெக அமைச்சரவையில் இடம் பெற்றுவிட்டு, திமுக உடன் நட்பு தொடர்கிறது என்கிற பேச்சு ஆகியவற்றை தடுமாற்றமாகவே அரசியல் நிபுணர்கள் பார்க்கிறார்கள். அதேநேரம் இதே கேள்வியை ஏன் முதல்வர் விஜய்யிடம் நீங்கள் கேட்கவில்லை என்று திருமாவளவன் எழுப்பிய கேள்விகளில் நியாயம் இல்லாமல் இல்லை.. எனினும் திருமாவளவன் மீதான நம்பிக்கையை சிதைக்கும் முயற்சி நடப்பதாக விசிகவினர் ஆதங்கம் தெரிவிக்கிறார்கள்.
2026 சட்டசபை தேர்தல் பல அரசியல் கட்சிகளின் தூக்கத்தை கெடுத்துவிட்டது. திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ் என மொத்த கட்சிகளுமே நினைத்துப் பார்க்காத முடிவினை மக்கள் தந்தார்கள். விஜய் தலைமையிலான தவெக 108 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே ஆட்சியை பிடித்ததை திமுக, அதிமுகவினரால் இன்னுமே நம்ப முடியவில்லை.. எங்கேயே தப்பு நடந்துவிட்டதாக ஆய்வு செய்து கொண்டிருக்கிறார்கள்.

ஆட்சியமைக்க ஆதரவு
மறுபுறம் திமுக, அதிமுகவின் கூட்டணியில் இருந்த கட்சிகளுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு பெற பெரிய வாய்ப்பு இருந்தது. ஏனெனில் விஜய்க்கு 108 இடங்கள் தான் கிடைத்தது. அதிலும் அவர் இரண்டு இடங்களில் போட்டியிட்டு வென்றால் ஒரு இடத்தில் ராஜினாமா செய்தார். மொத்தமாக 107 இடங்கள்தான் உள்ளது. ஆட்சியமைக்க தேவையான 118 இடங்களை பெற வேண்டும் என்றால், திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் உதவினால் முடியும் என்கிற நிலை இருந்தது. காங்கிரஸ் தேர்தல் முடிவு வந்த அன்றே, தவெக பக்கம் தாவியது. இதனால் வெறும் 5 பேரின் ஆதரவு இருந்தாலே ஆட்சியமைக்க முடியும் என்கிற நிலை வந்தது. இடதுசாரிகளும் அடுத்தடுத்த நாளில் ஆதரவு தெரிவித்ததால் 116 இடங்கள் ஆதரவு தவெகவிற்கு கிடைத்தது.
விசிக ஆதரவு இருந்தால் தவெக ஆட்சி
விசிக, ஐயுஎம்எல் ஆகியவற்றின் ஆதரவு இருந்தால் தான் தவெக ஆட்சியமைக்க முடியும் என்கிற நிலை உருவானது. விசிகவினரின் பல வருட கனவு தான் ஆட்சி அதிகாரத்தில் பங்கு பெற வேண்டும் என்பது.. அதற்கான வாய்ப்பு வந்ததால், தவறவிடக்கூடாது என்று விசிகவினர் கடுமையான குரல் எழுப்பினார்கள். இதனால் திமுக கூட்டணியில் இருந்தாலும், தவெகவை ஆதரிக்க வேண்டிய நிலைக்கு திருமாவளவன் தள்ளப்பட்டார்.
அமைச்சரவையில் விசிக இடம்
அதன்பிறகு அமைச்சரவையில் இடம் பெற வேண்டும் என்று கட்சியினர் வற்புறுத்திய காரணத்தால், அதற்கும் உடன்பட்டு, அமைச்சரவையில் வன்னியரசு இடம் பெற்றார். திருமாவளவனுக்கும் அமைச்சரவையில் இடம் கொடுக்க விஜய் தயாராகவே இருக்கிறார். இடைத்தேர்தலில் நின்று ஜெயித்தால், அவரை விஜய் அமைச்சராக்குவார் என்றே சொல்கிறார்கள். இதனால் விசிகவினர், திருமாவளவன் இடைத்தேர்தலில் போட்டியிட்டு அமைச்சராக வேண்டும் என்று தீர்மானங்களை நிறைவேற்றி வருகிறார்கள்.
திமுக, பாஜக விமர்சனம்
கட்சியினரின் விருப்பத்திற்காக அடுத்தடுத்து அதன்படியே செயல்பட்டு வரும் திருமாவளவனை, திமுகவினர் சும்மாவிடவில்லை. கடுமையாக விமர்சிக்கிறார்கள். பாஜகவும் திருமாவளவனை கடுமையாக விமர்சிக்கிறது. ஆர்எஸ்எஸ் பெற்றெடுத்த பிள்ளை என்று கூறிவிட்டு ஆட்சியில் பங்கெடுத்தது ஏன் என்று சரமாரியாக திமுகவும், பாஜகவும் இன்று வரை விமர்சிக்கின்றன. ஒரு பக்கம் பாஜகவிற்கு, தவெக கூட்டணியில் விசிக இருப்பதையே விரும்பவில்லை. மறுபக்கம் திமுக கூட்டணியில் இருந்து தவெக கூட்டணிக்கு திருமாவளவன் போனதை திமுகவினரும் விரும்பவில்லை.. இருபக்கமும் அவருக்கு கடுமையான எதிர்வினைகள் வந்த வண்ணம் உள்ளது.
நோபல் பரிசு விமர்சனம்
இதனால் திருமாவளவன் எந்த பக்கம் பேசினாலும் சிக்கல் என்கிற அளவுக்கு நெருக்கடிகளை உருவாக்கி வருகிறார்கள். மறுபக்கம் திருமாவளவன் மீதான நம்பிக்கையை சிதைக்கும் முயற்சி நடப்பதாக விசிகவினர் குற்றம்சாட்டுகிறார்கள். திருமாவளவனின் விருப்பம் என்பது காங்கிரஸ், இடதுசாரிகள் பாணியில் இணைந்து, பாஜகவை தேசிய அளவில் எதிர்க்க வேண்டும் என்பது தான். ஆனால் தவெக, திமுக ஒரே அணியில் எப்படி சாத்தியம் என்று விமர்சனங்கள் எழுந்தது. வைகோ ஒரு படி மேலே போய், திருமாவளவனுக்கு நோபல் பரிசு கொடுக்கலாம் என்று கிண்டல் செய்தார். மறுபக்கம் திமுகவினர், கடுமையான விமர்சனங்கள் செய்வது ஒருபுறம் எனில், அவர் என்ன பேசினாலும் திரும்ப திரும்ப விமர்சிக்கிறார்கள்.
திருமாவளவன் பதில்
இதற்கு எல்லாம் பதில் அளிக்கும் வகையில் நேற்று திருமாவளவன் பதில் அளித்துள்ளார். சென்னை அசோக்நகரில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைமை அலுவலகத்தில், அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் முன்னிலையில் 50-க்கும் மேற்பட்ட மாற்று கட்சியினர் நேற்று தங்களை விடுதலை சிறுத்தைகள் கட்சியுடன் இணைத்துக் கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் திருமாவளவன் பேசுகையில், "தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. 59 இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது என்றால் அதில் விடுதலை சிறுத்தைகளின் பங்களிப்பு மகத்தானது.
வயிற்றெரிச்சலில் பேசுகிறார்கள்
திருமாவளவன் முதல்வர், துணை முதல்வர் பதவி கேட்பதாக சொல்கின்றனர் எங்களிடம் இருப்பது 2 சீட்டு. அதைவைத்து இதையெல்லாம் கேட்கமுடியுமா? இப்போது நோபல் பரிசுக்கும் பரிந்துரைக்கின்றனர். இதற்கு நான் என்ன செய்ய முடியும்?. சிலர் வயிற்றெரிச்சல் தாங்க முடியாமல் என்னென்னவோ பேசுகிறார்கள். நான் சொல்லித்தான் டி.ஜி.பி., லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளை நியமித்ததாக கூறுகிறார்கள். எல்லாம் தவறான தகவல்.
விஜய்யிடம் கேட்க முடியுமா
நீங்கள் ஆர்.எஸ்.எஸ். பெற்ற பிள்ளை என விஜய்யை கூறினீர்களே, தற்போது அவருடன் எப்படி கூட்டணிக்கு சென்றீர்கள் என சிலர் என்னை பார்த்து கேள்வி கேட்கிறார்கள். இதே கேள்வியை, உங்களை விமர்சித்தவரிடம் நீங்கள் ஏன் ஆதரவு கேட்கிறீர்கள் என முதலமைச்சர் விஜய்யிடம் யாரும் கேட்கவில்லை. தி.மு.க.வை தீய சக்தி என கூறிவிட்டு, எப்படி முன்னாள் முதலமைச்சர் வீட்டிற்கு சென்று வாழ்த்து பெற்றீர்கள் என விஜய்யிடமோ அல்லது தி.மு.க.வை தீய சக்தி என்றவரை நீங்கள் ஏன் வரவேற்றீர்கள் என மு.க.ஸ்டாலினிடமோ யாராவது கேட்டார்களா?
நம்பிக்கையை சிதைக்க முயற்சி
இப்படி சொல்வதால், முதல்வர் விஜய், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு எதிராக திருமாவளவன் கருத்து சொல்லிவிட்டார் என மக்களை குழப்பிவிடுவார்கள். சமூக ஊடகங்களில் நம்மை விமர்சிக்கும் தி.மு.க., ம.தி.மு.க.வினரை நீங்கள் யாரும் விமர்சனம் செய்யாதீர்கள். என்மீதான நம்பிக்கையை சிதைக்க முயற்சி நடக்கிறது" இவ்வாறு கூறினார்.














Click it and Unblock the Notifications