பெற்றோரை நல்லா பார்த்துக்காவிட்டால்! எழுதி கொடுத்த சொத்தை திரும்ப கேட்கலாம்!! மும்பை ஹைகோர்ட் அதிரடி
மும்பை: பெற்றோரை பிள்ளைகள் கவனிக்காவிட்டால் அவர்களுக்கு எழுதிக் கொடுத்த சொத்தை திரும்ப பெறலாம் என மும்பை ஹைகோர்ட் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தீர்ப்பை அளித்துள்ளது.
வயதான காலத்தில் தங்களை கவனித்துக் கொள்வார்கள் என்று கருதியே பல பெற்றோர் தாங்கள் சம்பாதித்த சொத்துகளை பிள்ளைகளுக்கு எழுதி வைக்கிறார்கள். ஆனால் பெரும்பாலானோர் சொத்து கிடைத்தபிறகு தங்கள் பெற்றோரை பாதுகாப்பதே இல்லை.

இதற்கு சிறந்த உதாரணம் மும்பையில் நடந்த சம்பவத்தை எடுத்துக் கொள்ளலாம். மும்பை லோயர் பரேல் பகுதியைச் சேர்ந்த 68 வயது நகைக் கடை உரிமையாளர் ஒருவர், கடந்த 2005ஆம் ஆண்டு தான் வாங்கிய அடுக்குமாடி குடியிருப்பில் தனது 60 வயது மனைவி, மகனுடன் வசித்து வந்தார்.
வயதான காலத்தில் தன்னையும் தனது மனைவியையும் மகன் நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும். தங்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து தர வேண்டும் என்ற நிபந்தனையுடன் தான் ஆசையாக பார்த்துப் பார்த்து குருவி சேர்ப்பது போல் சேர்த்து வாங்கிய வீட்டை தனது மகன் பெயருக்கு 2023 ஆம் ஆண்டு மே 8ஆம் தேதி அந்த பெரியவர் தானபத்திரம் எழுதிக் கொடுத்தாராம்.
ஆனால் சொத்து கைக்கு வந்த சில காலத்திலேயே தாய்- தந்தையுடன் மகனுக்கு இருந்த உறவில் விரிசல் ஏற்பட்டது. கடந்த 2025 ஆம் ஆண்டு அந்த முதியவரும், அவரது மனைவியும் தான் வாங்கிய வீட்டை விட்டே செல்ல வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர்.
மகன் தங்களைக் கைவிட்டதால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், "பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் நலச்சட்டம் 2007"-இன் கீழ் செயல்படும் சிறப்புத் தீர்ப்பாயத்தை அணுகினர்.
இந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாயம், அந்த பெரியவரின் மகனும் அவரது குடும்பத்தினரும் அடுத்த 60 நாட்களுக்குள் வீட்டை காலி செய்து பெற்றோரிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற உத்தரவை பிறப்பித்தது.
இந்த உத்தரவை எதிர்த்து அவரது மகன் மும்பை ஹைகோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். அவரது சார்பில் ஆஜரான வழக்கறிஞர், "மனுதாரரின் தந்தை பொருளாதார ரீதியாக நல்ல நிலையில் உள்ளார். அவரிடம் சொந்த தொழில் உள்ளன. மற்ற சொத்துகளும் அவரது பெயரில்தான் உள்ளது. மனுதாரருக்கு அந்த வீட்டை மட்டுமே அவர் தானப்பத்திரம் எழுதி கொடுத்திருந்தார். எனவே தீர்ப்பாயம் கொடுத்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என வாதிட்டார்.
இந்த வாதங்களை கேட்ட நீதிபதிகள், "முதியோர் நலச்சட்டத்தின் 23ஆவது பிரிவின்படி, பெற்றோரின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்ற நிபந்தனைகளுடனேயே சொத்து மாற்றம் செய்யப்பட்டு அந்த நிபந்தனையை மீறினால் அந்த சொத்து மாற்றமே செல்லாததாகிவிடும்.
இதற்கு சட்டத்தில் இடமுண்டு. மேலும் சட்டப்பிரிவின் பயன்பாடு என்பது மூத்த குடிமக்கள் ஏழையா, பணக்காரரா, அவருக்கு சொந்த தொழில் இருக்கிறதா என்பதையெல்லாம் பார்ப்பதற்கு அல்ல. சட்டத்தில் குறிப்பிட்டுள்ள பராமரிப்பு நிபந்தனைகள் மீறப்பட்டால், சொத்து மாற்றத்தை தாராளமாக செல்லாததாக அறிவிக்கலாம். எனவே பிள்ளைகள், பெற்றோர்களை கவனிக்காவிட்டால் எழுதி கொடுத்த சொத்தை திரும்ப பெறலாம். இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.
பிள்ளைகளை சிறு வயது முதலே சொற்ப சம்பளத்தில் அவர்கள் கேட்பதை எல்லாம் வாங்கிக் கொடுத்து அரை வயிறும் கால் வயிறுமாக இருந்து படிக்க வைத்து, நல்ல வேலை கிடைக்கப் பாடுபட்ட பெற்றோரை கடைசி காலத்தில் கூட பார்க்காவிட்டால் என்னவென சொல்வது? பிள்ளைகள் சிறு வயதில் கேட்டது போல் அவர்கள் என்ன அது வேண்டும், இது வேண்டும் என்றா கேட்க போகிறார்கள். மூன்று வேளை ஒரு கைப்பிடி உணவு, உடை, மருந்து மாத்திரைகள், பாசம், அன்பு இவைதான் அவர்கள் எதிர்பார்ப்பதே தவிர, ஆடம்பரத்தை அல்ல!












Click it and Unblock the Notifications