அண்ணாமலை பாத யாத்திரை ரத்து? அதுக்கு காரணம் இதுதான்! புயலை கிளப்பிய படம்! உண்மை என்ன
சென்னை: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இப்போது மாநிலம் முழுக்க பாத யாத்திரை சென்றுள்ள நிலையில், இது ரத்து செய்யப்பட்டுள்ளதாக இணையத்தில் தகவல் பரவி வருகிறது. இந்த விவகாரத்தில் உண்மை என்ன என்பது குறித்துப் பார்க்கலாம்.
இப்போது தமிழ்நாடு பாஜக மாநில தலைவராக அண்ணாமலை இருக்கிறார்.. தமிழ்நாட்டில் பாஜகவை வளர்க்க அவர் தொடர்ச்சியாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதேநேரம் கூட்டணிக் கட்சிகளுடன் இவருக்கு நல்ல போக்கு இல்லை.

குறிப்பாக அதிமுக தலைவர்களை இவர் பல நேரங்களில் விமர்சித்துள்ளார். அதேபோல அதிமுக தலைவர்களும் இவரது பேச்சுகளுக்குப் பதிலடி கொடுத்துள்ளனர். இதனால் இரு தரப்பிற்கும் இடையே அவ்வப்போது வார்த்தை மோதல் இருந்து கொண்டே தான் இருக்கும்.
அண்ணாமலை பாத யாத்திரை: இதற்கிடையே இப்போது இவர் மாநிலம் முழுக்க பாஜகவை வளர்த்தெடுக்க நடைப்பயணம் சென்று கொண்டிருக்கிறார். "என் மண், என் மக்கள்" என்ற தலைப்பில் நடக்கும் இந்த பாத யாத்திரையை அமைச்சர் அமித் ஷா நேரில் வந்து தொடங்கிவைத்தார். ராமேஸ்வரத்தில் தொடங்கிய இந்த பாத யாத்திரையில் அவர் பல ஊர்களுக்குச் சென்று வருகிறார். இதில் அவர் பல தரப்பு மக்களையும் சந்தித்து வருகிறார். இதற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக பாஜகவினர் கூறுகின்றனர்.
"என் மண், என் மக்கள்" என்ற தலைப்பில் இந்த பாதயாத்திரை அடுத்த ஆறு மாதங்களுக்கு நடைபெறும். அடுத்தாண்டு மக்களவை தேர்தல் நடைபெறும் நிலையில், அதைக் குறிவைத்து இந்த பாத யாத்திரையை அண்ணாமலையை நடத்துகிறார். இந்த பாத யாத்திரையில் அவருக்குக் குரான், பைபிள் ஆகியவற்றை பொதுமக்கள் கிஃப்ட்டாக தரும் படங்களும் இணையத்தில் டிரெண்டாகிறது. இது தமிழக பாஜகவுக்கு ரொம்பவே முக்கியமான பாத யாத்திரையாக இருக்கிறது.
இணையத்தில் பரவும் தகவல்: இந்தச் சூழலில் சில தவிர்க்க முடியாத காரணங்களால் அண்ணாமலையில் பாத யாத்திரை ரத்து செய்யப்பட்டதாக இணையத்தில் தகவல் பரவின. தமிழ் செய்தி டிவி சேனல் பெயரிலும் இது குறித்த செய்தியை வெளியிட்டனர். சமூக வலைத்தளங்களில் பலரும் இந்த கார்டையும் இது சார்ந்த தகவல்களையும் பகிர்ந்து வந்தனர். இது உண்மை தானா என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
கடந்த 2,3 நாட்களாகவே இது குறித்த தகவல்கள் இணையத்தில் பரவி வருகிறது. இருப்பினும், முதலில் எந்தவொரு நியூஸ் சேனல் பெயரிலும் இல்லாமல்.. பொதுவான தகவல்களாகவே இது இருந்தது. அப்போது தான் திடீரென அந்த செய்தி நிறுவனத்தின் பெயரிலும் கார்டை சிலர் பரப்பியுள்ளனர். அதேநேரம் அந்த குறிப்பிட்ட செய்தி நிறுவனத்தின் சமூக வலைத்தள பக்கத்தை ஆராய்ந்த போது, அவர்கள் அதிகாரப்பூர்வமாக அப்படி எந்தவொரு கார்டையும் பகிரவில்லை என்பது உறுதியானது.
போலி செய்தி: இதன் மூலம் அந்த செய்தி சேனல் இதுபோன்ற கார்டை வெளியிடவில்லை என்பது உறுதியாகிறது. அதேபோல அண்ணாமலையும் கூட தொடர்ச்சியாக, இன்று கூட பாத யாத்திரை தொடர்பான படங்களைத் தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து வருகிறார். இதன் மூலம் சமூக வலைத்தளங்களில் அண்ணாமலை பாத யாத்திரை ரத்து எனப் பரவும் தகவல் பொய் என்பது தெளிவாகத் தெரிகிறது.

Fact Check
வெளியான செய்தி
சில தவிர்க்க முடியாத காரணங்களால் அண்ணாமலையின் பாத யாத்திரை ரத்து
முடிவு
இது இணையத்தில் பரவும் போலி செய்தி. அண்ணாமலை தொடர்ச்சியாகப் பாத யாத்திரையில் இருக்கிறார்.












Click it and Unblock the Notifications