Fact check கேரளாவின் லுலு மாலில் மூவர்ணக் கொடியை விட பாகிஸ்தான் கொடி பெரியதாக இருந்ததா? உண்மை என்ன?
திருவனந்தபுரம்: கேரளா மாநிலம் கொச்சியில் உள்ள லுலு மாலில் இந்திய நாட்டின் மூவர்ணக் கொடியை விட பாகிஸ்தான் நாட்டு கொடி பெரியதாக வைக்கப்பட்டதாக ஒரு வதந்தி பரவி வருகிறது. அது முற்றிலும் பொய் என்பது ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது.
கேரளாவின் கொச்சியில் வணிக வளாகமான லுலு மால் திறக்கப்பட்டுள்ளது. இதன் உரிமையாளர் யூசுப் அலி, துபாயில் மிகப் பெரிய தொழிலதிபராவார். இவர் அங்கும் ஷாப்பிங் மால்களை நடத்தி வருகிறார். தமிழகத்திலும் கோவையில் இந்த மால் திறக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் வேலைவாய்ப்பின்மை சற்று குறையும் என கருதப்படுகிறது. இந்த நிலையில் கொச்சியில் உள்ள லுலு மாலில் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் பல்வேறு நாடுகளின் கொடிகள் வைக்கப்பட்டுள்ளன.
இதுதான் தற்போது வதந்தி பரவ காரணமாகிவிட்டது. அதாவது கேரளாவில் உள்ள லுலு மாலில் இந்தியாவின் மூவர்ணக்கொடியை விட பாகிஸ்தான் நாட்டு கொடி பெரியதாக வைக்கப்பட்டுள்ளது என தகவல்கள் பரவின. இந்தியக் கொடி மட்டுமல்லாமல் மற்ற நாடுகளின் கொடிகளை காட்டிலும் பாகிஸ்தான் கொடி உயரத்தில் வைக்கப்பட்டுள்ளதாக சில விஷமிகள் தகவலை பரப்பினர்.
இந்த புகைப்படத்தையும் சமூகவலைதளங்களில் பரப்பினர். மேலும் லுலு மால் கொடிகளை வைக்கும் விதிகளை மாறிவிட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. இந்தியக் கொடியை சிறியதாகவும் தாழ்வாகவும் வைத்துவிட்டு பாகிஸ்தான் கொடியை ஏன் பெரியதாகவும் உயரத்திலும் வைக்க வேண்டும் என சமூகவலைதளங்களில் பலர் கேள்வி எழுப்பி வந்தனர்.
இதுகுறித்து இந்த ட்வீட்டில் நெட்டிசன் ஒருவர் இது லாகூரோ பெஷாவரோ, இஸ்லாமாபாத்தோ அல்ல. இது கேரளா! இந்த புகைப்படம் கொச்சியில் உள்ள லுலு மாலில்தான் எடுக்கப்பட்டது. உலக கோப்பையை கொண்டாட பல்வேறு நாடுகளின் கொடிகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அதில் பாகிஸ்தான் கொடி உயரத்திலும் இந்திய கொடி அதைவிட சற்று உயரம் குறைவாகவும் ஏற்றப்பட்டுள்ளது. இது ஏன் என ஓனர் யூசுப் அலியை டேக் செய்து இந்த நெட்டிசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆனால் இது தவறான தகவல் என ஆய்வில் தெரியவந்துள்ளது. எப்போதுமே எது சரி, எது தவறு என்பது பார்ப்போரின் கோணத்தில் உள்ளது. புகைப்படம் எப்படி எடுக்கப்பட்டது, எந்த ஆங்கிளில் அந்த சர்ச்சைக்குரிய புகைப்படம் எடுக்கப்பட்டது, எந்த தளத்தில் இருந்து கொண்டு அந்த புகைப்படம் எடுக்கப்பட்டது என்பதை எல்லாம் கருத்தில் கொள்ள வேண்டும் என்கிறார்கள்.
ஆய்வில் எல்லா கொடிகளும் ஒரே அளவில் ஒரே லிவரில் ஏற்றப்பட்டிருந்தது. வெவ்வேறு ஆங்கிளில் இருந்து பார்க்கும் போது ஒரு கொடி பெரியதாகவும் மற்றொன்று சிறியதாகவும் தெரிந்தது. எனவே அங்கு கொடி ஏற்றப்பட்டதில் எந்த தவறும் இல்லை. பார்க்கும் பார்வைகளில்தான் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Fact Check
வெளியான செய்தி
கேரளாவில் லுலு மாலில் பாகிஸ்தான் கொடி, இந்திய கொடியை விட உயரத்தில் ஏற்றப்பட்டிருந்தது என சமூகவலைதளங்களில் புகைப்படம் பரவல்.
முடிவு
லுலு மாலில் எல்லா நாட்டு கொடிகளும் ஒரே அளவில் ஒரே உயரத்தில் ஒரே லிவரில்தான் ஏற்பட்டிருந்தது.


Click it and Unblock the Notifications
