Fact Check: நீட் வினாத்தாளை கசிய விட்டவர் காங்கிரஸ் ஆபீசில் வைத்து கைது செய்ததாக பரவும் போலி தகவல்
டெல்லி: நீட் வினாத்தாளை கசியவிட்ட விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்கள் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் இருந்ததாக சமூக வலைத்தளங்களில் ஒரு தகவல் வேகமாக பரவி வருகிறது. ஆனால், இந்த தகவலில் உண்மையில்லை என்பது தெரியவந்துள்ளது. கைதான நபர்கள் தியோகரில் உள்ள ஒரு வீட்டில் வைத்துதான் கைது செய்யப்பட்டதும் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் வைத்து கைது செய்யப்படவில்லை என்பதும் உண்மை சரிபார்ப்பு மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
மருத்துவ படிப்புகளுக்காக நீட் நுழைவுத்தேர்வு நடைபெற்று வருகிறது. நீட் நுழைவுத்தேர்வில் இதுவரை இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு சர்ச்சைகள் கிளம்பியுள்ளன. ஹரியானா மாநிலத்தில் ஒரே மையத்தில் தேர்வு எழுதிய 6 பேர் 720 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்ததால் சர்ச்சை எழுந்துள்ளது.

இதுமட்டுமல்லாமல் வினாத் தாள் விற்பனை, தேர்வை பார்த்து எழுத லஞ்சம் உள்ளிட்ட புகார்களும் எழுந்துள்ளது. இந்த விவகாரத்தை எதிர்க் கட்சிகள் கையில் எடுத்துள்ள நிலையில், இந்த விவகாரம் நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது. இதுதொடர்பாக விவாதிக்க வேண்டுமென எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதால் பிற்பகல் வரை கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.
நீட் தொடர்பாக விவாதிக்கும் வரை தாங்கள் ஓயப் போவதில்லை என எதிர்க்கட்சிகள் கூறியுள்ளன. நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட பல்வேறு முறைகேட்டுப் புகார்கள் எழுந்து, அனைத்து வழக்குகளையும் சிபிஐ விசாரணை நடத்தியுள்ளது. நீட் முறைகேடு தொடர்பாக இஸ்ரோ முன்னாள் தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமையிலான உயர்நிலைக் குழுவிடம் புகார் அளிக்கலாம்.
வரும் ஜூலை 7 ஆம் தேதி வரை நீட் தேர்வர்கள், மாணவர்கள், பெற்றோர் புகார் அளிக்கலாம் என்றும் மத்திய அரசு கூறியுள்ளது. இதற்கிடையே, நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில், 6 பேரை ஜார்க்கண்டின் தியோகர் மாவட்டத்தில் பீகார் காவல்துறை கைது செய்தது. இதற்கிடையே, தியோகரில் கைது செய்யப்பட்டவர்கள் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் இருந்தவர்கள் என்றும் நீட் தேர்வர்களை சந்தித்து காங்கிரஸ் தூண்டிவிடுவதாகவும் எக்ஸ் தளத்தில் நெட்டிசன் ஒருவர் பதிவிட்டு இருந்தார்.
அவரது இந்த பதிவு சமூக வலைத்தளத்தில் காட்டுத்தீ போல பரவியது. ஆனால் இது உண்மை சரிபார்ப்பு குழு விசாரணை நடத்தியதில், இந்த தகவல் போலியானது என்று தெரியவந்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் அலுவலகம் என்று நெட்டிசன் வெளியிட்டு இருந்த வீடியோ பாட்னா அருகே உள்ள எல்.என்.ஜே.பி மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்காக குற்றம் சாட்டப்பட்ட நபர்களை கொண்டு சென்றபோது எடுத்த வீடியோவாகும்.
தியோகரில் உள்ள ஒரு வீட்டில் இருந்துதான் 6 பேரும் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இந்த வீட்டிற்கும் காங்கிரஸ் கட்சி அலுவலகத்திற்கும் நீண்ட தூரம் உள்ளது. கிட்டதட்ட 12.5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

Fact Check
வெளியான செய்தி
நீட் வினாத்தாளை கசிய விட்டவர்களை காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் வைத்து கைது செய்வதுபோல் வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் பரவியது.
முடிவு
கைதான நபர்கள் தியோகரில் உள்ள ஒரு வீட்டில் வைத்துதான் கைது செய்யப்பட்டனர். காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் வைத்து கைது செய்யப்படவில்லை.












Click it and Unblock the Notifications