முதல்வர் விஜய்யை இப்படி பேசலாமா? வன்னி அரசுக்கு வந்ததே கோபம்.. திருமாவின் கருத்துக்கும் ரியாக்ஷன்
சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முதல்வர் விஜய்யை ஒருமையில் பேசியது விமர்சனத்திற்கு உள்ளாகி வரும் நிலையில் அமைச்சர் வன்னி அரசு இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். முதல்வரை பார்த்து ஒருமையில் பேசுவது எப்படி சரியாக இருக்கும். தனிநபர் விமர்சனம் செய்யக்கூடாது என பேசியுள்ளார். மேலும் சமூக நீதித்துறை பெயர் மாற்றம் குறித்த கேள்விக்கும் வன்னி அரசு பதில் அளித்தார்.
அமைச்சர் வன்னி அரசு இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது சமூக நீதித்துறை பெயர் மாற்றம் குறித்து உங்களது கருத்திற்கும், தலைவர் திருமாவளவன் கருத்தும் வேறுபடுகின்றதே என கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த வன்னி அரசு கூறியதாவது:-

தலைவர் கருத்தே எங்களுடையது
எல்லாமே தலைவர் அவர்களோட கருத்து தான். அவரது கருத்தே எல்லாருக்கும். தலைவர் கருத்தே அவர்களுக்கு அடுத்து உள்ள தலைவர்கள், தொண்டர்களுடைய கருத்தும். இன்று அரசியலின் மையக் கருத்தாக விசிக மாறுவதை விரும்பாதவர்கள், இதுமாதிரி அவதூறு பரப்புகிறார்கள். இதனை நாங்கள் முறியடித்துக்கொண்டு இருக்கிறோம்" என்றார். தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி விஜய்யை ஒருமையில் விமர்சித்தது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்து கூறியதாவது:-
"நாகரிகமான அரசியலை முன்னெடுக்க வேண்டும் என்று விசிக தொடர்ந்து சொல்கிறது. தனிநபர் விமர்சனம் செய்யக் கூடாது. முதல்வர் பதவியில் இருக்கும் ஒருவரை மரியாதைக் குறைவாக பேசுவது எப்படி சரியாக இருக்கும். அப்படி பேசலாமா.. அவங்க கட்சியில் இருப்பவர்கள், இப்படி சொல்வதை எடப்பாடி பழனிசாமி ஏற்றுக்கொள்வாரா.. எனவே எடப்பாடி இது போன்ற சொல்லாடலை தவிர்க்க வேண்டும்.." என்று கூறினார்.
விஜய் மீது ஒருமையில் பேச்சு
தமிழக முதல்வர் விஜய் குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்னன் உள்ளிட்டோர் ஒருமையில் விமர்சிப்பது அரசியல் களத்தில் விவாதத்திற்கு உள்ளாகி வருகிறது. முதல்வர் என்ற பதவிக்குரிய மரியாதை கொடுக்காமல் முன்னாள் அமைச்சர்களே இப்படி பேசுவதா? என்று அரசியல் ஆர்வலர்கள் கேள்வி எழுப்பக்கூடிய நிலையில், தவெகவினரும் மாஜி அமைச்சர்களின் பேச்சுக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் காட்டமாக பதிலடி கொடுத்து வருகிறார்கள்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் விஜய்யை ஒருமையில் பேசியிருந்தார். முதல்வர் குறித்த விமர்சனம் குறித்து விசிக நிர்வாகியும் அமைசச்சர் வன்னி அரசுவிடம் செய்தியாளர்கள் கேட்ட போதுதான் மேற்கண்ட பதிலை அளித்துள்ளார். அதேநேரத்தில் கூட்டணியில் இருந்து கொண்டே விஷ ஏவுகணைகளை வீசுவதாக வைகோ முன்வைத்த குற்றச்சாட்டு குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்க மறுத்த வன்னி அரசு, அதை அவரிடம்தான் கேட்க வேண்டும்' என்று பதிலளிக்க மறுத்துவிட்டார்.
சமூக நீதித்துறை பெயர் மாற்ற விவகாரம்
தமிழத்தில் தவெக அரசு ஆட்சிக்கு வந்த பிறகு ஆதிதிராவிடர் நலத்துறையை சமூக நீதித்துறை என பெயர் மாற்றம் செய்தது. இந்த துறையின் அமைச்சராக விசிக எம்.எல்.ஏ வன்னி அரசு நியமனம் செய்யப்பட்டார். சமூக நீதித்துறை என பெயர்மாற்றம் செய்ததற்கு விசிக எம்பி ரவிக்குமார் அண்மையில் எதிராக பேசியிருந்தார். ஆனால், முதல்வர் விஜய்யின் முடிவை பாராட்டியிருந்த வன்னி அரசு, சமூக நீதித்துறை என்பது சமூக நீதிக்கான விடுதலை. அவர்களுக்கான நீதியை பெற்றுத்தருவதுதான்.
எங்களுடைய கட்சியின் பொதுச்செயலாளர் அதுபோன்ற கருத்தை தெரிவித்துள்ளார். கட்சியின் நிலைப்பாடு என்ன என்பதை கட்சியின் தலைவர் திருமாவளவன் அறிவிப்பார். இந்த பெயர் பொருத்தமாக இருக்கிறது என்பதே எனது கருத்து" என்று கூறியிருந்தார். வன்னி அரசு இவ்வாறு பேசிய நிலையில் அடுத்த சில நாட்களில் திருமாவளவனும் சமூக நீதித்துறை என பெயர் மாற்றம் செய்யப்பட்டதற்கு எதிராக பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
