பெண் அதிகாரியை மிரட்டியதாகப் புகார்.. திமுக எம்எல்ஏ வசந்தம் கார்த்திகேயன் மீது வழக்குப்பதிவு! பரபர!
சென்னை: அரசு மூத்த பெண் அதிகாரி கொடுத்த புகாரின் அடிப்படையில் ரிஷிவந்தியம் திமுக எம்எல்ஏ வசந்தம் கார்த்திகேயன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தைச் சேர்ந்த மூத்த பெண் அதிகாரி ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில், பெண்கள் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கள்ளக்குறிச்சி காவல்துறையினர் வசந்தம் கார்த்திகேயன் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
பெண் ஐஏஎஸ் அதிகாரிக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக தமிழக வெற்றிக் கழக கள்ளக்குறிச்சி தொகுதி எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். பெண் துன்புறுத்தல் தடைச் சட்டம் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கும் நிலையில் இது வழக்கில் விசாரணை அதிகாரியாக திருச்சி எஸ்பி சிருஷ்டி நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும் உயர் நீதிமன்றமே இந்த வழக்கை கண்காணிக்கும் என கூறப்பட்டுள்ள நிலையில் அருள் விக்னேஷ் விரைவில் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் மற்றொரு பரபரப்பாக ரிஷிவந்தியம் தொகுதி திமுக எம்எல்ஏ வசந்தம் கார்த்திகேயன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருக்கிறது
2016, 2021 சட்டமன்றத் தேர்தல்களில் வெற்றி பெற்ற வசந்தம் கார்த்திகேயன் 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில்ரிஷிவந்தியம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தொடர்ந்து மூன்று முறை அவர் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. 2020ஆம் ஆண்டு முதல் கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட செயலாளராகவும் வசந்தம் கார்த்திகேயன் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் தான் அவர் மீது பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மகளிர் திட்ட இயக்குனராக லலிதா என்ற பெண் அதிகாரி பணியாற்றி வருகிறார். இவர் சமீபத்தில் கள்ளக்குறிச்சி மாவட்ட தமிழ்நாடு வாழ்வாதார இயக்க மேலாண்மை இயக்குனர் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம், எம்எல்ஏ வசந்தன் கார்த்திகேயன் குறித்து புகார் அளித்திருந்தார்.
தான் சாதி பார்த்து வேலை செய்தவதாக இழிவாக பேசியதோடு, பணியில் நீடிப்பது குறித்து மிரட்டல் விடுக்கும் வகையில் வசந்தம் கார்த்திகேயன் மிரட்டல் விடுத்ததாக புகாரில் தெரிவித்திருந்தார். அதுமட்டுமில்லாமல் சமூக வலைதளங்களில் அநாகரிகமாக மெசேஜ் செய்தது மட்டுமின்றி தன்னைக் குறித்து அவதூறு பரப்பியதாகவும் புகார் தெரிவித்திருந்தார்.
இதன் அடிப்படையில் தியாகதுருவம் காவல்துறையினர் வசந்தம் கார்த்திகேயன் மீது வழக்குப்பதிவு செய்து இருக்கின்றனர். பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம், பெண்கள் துன்புறுத்தல் தடைச் சட்டம், பெண்ணை அவமதிக்கும் நோக்கில் பேசுதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த கள்ளக்குறிச்சி எம்எல்ஏ மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருக்கும் நிலையில் தற்போது அதே மாவட்டத்தில் திமுக எம்எல்ஏ மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.



Click it and Unblock the Notifications
