தொகுதி மறுசீரமைப்பு மசோதா.. தொகுதி எண்ணிக்கை 50% உயர்வு.. நாளை ஒப்புதல் அளிக்கும் மத்திய அமைச்சரவை?
டெல்லி: தொகுதி மறுசீரமைப்பு மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை நாளை ஒப்புதல் அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதில் நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களுக்கும் தொகுதிகளின் எண்ணிக்கையை ஒரே சீராக 50% உயர்த்தவும், அடுத்த 25 ஆண்டுகளுக்கு தொகுதிகளின் எண்ணிக்கையில் மாற்றம் செய்யாமல் நிறுத்தி வைக்க முன் மொழியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சட்டசபைத் தேர்தலுக்கு முன் மார்ச் மாதத்தில் பாஜக சார்பாக நாடாளுமன்றத்தில் தொகுதி மறுசீரமைப்பு மசோதா கொண்டு வரப்பட்டது. அதனை இந்தியா கூட்டணியில் இருந்த கட்சிகள் ஒன்றாக இருந்து எதிர்த்து வாக்களித்து முறியடித்தன. தொகுதி மறுசீரமைப்பு மசோதா நிறைவேறாமல் போனதற்கு திமுகவின் எதிர்ப்பு மிக முக்கியமான காரணமாக அமைந்தது.

இந்த நிலையில் 7 மாதங்களுக்கு பின் மீண்டும் தொகுதி மறுசீரமைப்பு மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற மத்திய அரசு தயாராகி வருகிறது. நாடாளுமன்றத்தின் சிறப்பு அமர்வு நவம்பர் 30ஆம் தேதி கூடுகிறது. நவம்பர் 30ஆம் தேதி லோக்சபா அமர்வும், டிசம்பர் 2ஆம் தேதி ராஜ்ய சபா அமர்வும் கூட உள்ளது. டிசம்பர் 3ஆம் தேதி இரு அவைகளும் நிறைவடைகிறது.
இந்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் தொகுதி மறுசீரமைப்பு மசோதா மற்றும் பெண்கள் இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில் தொகுதி மறுசீரமைப்பு மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை நாளை ஒப்புதல் அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
அதில் நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களுக்கும் தொகுதிகளின் எண்ணிக்கையை ஒரே சீராக 50% உயர்த்தவும், அடுத்த 25 ஆண்டுகளுக்கு தொகுதிகளின் எண்ணிக்கையில் மாற்றம் செய்யாமல் நிறுத்தி வைக்க முன் மொழியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் திமுக, தேசியவாத காங்கிரஸ் கட்சி ஆதரவு அளிக்குமா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
திமுக இதுவரை தொகுதி மறுவரையறை மசோதா கொண்டு வரப்பட்டால், அதன் விவரங்களை ஆராய்ந்து முடிவை அறிவிப்போம் என்று கூறி வருகிறது. அதேபோல் நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவமான 7.18% குறையக் கூடாது என்பதில் உறுதியாக உள்ளது. இதனால் தொகுதி மறுவரையறை மசோதாவின் விவரங்கள் வெளியான பின்னரே அடுத்த 3 நாட்களுக்குள் திமுக முடிவு எடுக்கும் என்று பார்க்கப்படுகிறது.



Click it and Unblock the Notifications
