உங்க நெஞ்சில் கைவைத்து சொல்லுங்க பார்க்கலாம்.. எடப்பாடிக்கு பகிரங்க சவால்விட்ட செங்கோட்டையன்
ஈரோடு: சட்டமன்ற தேர்தலில் திமுக, அதிமுக கூட்டணிகளை தோற்கடித்து தவெக ஆட்சியமைத்துள்ளது. தவெக தலைமையில் புதிய கூட்டணி உருவாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எதிரும், புதிருமாக இருந்த திமுக, அதிமுக இரண்டு கட்சிகளும் தவெகவை விமர்சித்து வருகின்றன. இந்நிலையில் எடப்பாடி பழனிசாமியின் செயல்களால் தான் அதிமுகவினர் கட்சியில் இருந்து வெளியேறுவதாகவும், நெஞ்சில் கை வைத்து அவரை பதில் சொல்ல சொல்லுங்கள் என்று அவருக்கு செங்கோட்டையன் ஓப்பனாக சவால்விட்டுள்ளார்.
அமைச்சர் செங்கோட்டையன் ஈரோட்டில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "தவெகவின் நோக்கு பூரண மதுவிலக்கு என்பதுதான். இரண்டாவதாக மக்கள் எங்கெங்கே மது கடைகளை அகற்ற வேண்டும் என்று சொல்கிறார்களா அதை செய்வோம். பேருந்து நிலையங்கள், பள்ளிகள், கோயில்கள் அருகில் இருந்த மதுக்கடைகள் அகற்றப்பட்டுள்ளது. இது ஒரு வரலாறு என்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள். கோயில் அருகே உள்ள மதுக்கடையை மூடுங்கள், பள்ளிக்கூடம் அருகில் உள்ள மதுக்கடையை மூடுங்கள் என்று மக்கள் எல்லாவற்றுக்கும் போராடுவார்கள்.

எடப்பாடிக்கு சவால்
போராட்டமே இல்லாமல் முதல்முறையாக மதுக்கடை மூடிய வரலாறு இதுதான். அதற்கு பிறகு படிப்படியாக என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்பதற்கான பதிலை அந்தத் துறை அமைச்சர் அளிப்பார். குதிரை பேரம் என்று எல்லாம் குறிப்பிட கூடாது. அவர் செய்யாத காரியம் ஒன்றுமில்லை. 47 எம்எல்ஏக்களை வைத்து கொண்டு ஒருவர் முதலமைச்சராக முடியுமா. அவர்களை நெஞ்சில் கை வைத்து சொல்ல சொல்லுங்கள். பாண்டிச்சேரியில் எம்எல்ஏக்கள் முன்பு அப்படி பேசினாரா இல்லையா.
இதை நாங்கள் சொல்லவில்லை. இந்திய யுனியன் முஸ்லிம் லீக் தலைவர் இதைப்பற்றி தெளிவாக சொல்லியுள்ளார். தற்போதுவரை அதற்கு பதிலும் சொல்லவில்லை. இப்போது அதை பொய் என்கிறார். இதனால் தான் அதிமுகவில் இருந்து வெளியே வருகிறோம், இது எங்களுக்கு பிடிக்கவில்லை என்று எல்லா எம்எல்ஏக்களும் கூறுகிறார்கள். தெற்கும், வடக்கும் இணைய போவதில்லை. வடதுருவம், தென்துருவம் என்பதை போல, எம்ஜிஆர், ஜெயலலிதா மறைவுக்கு பிறகு நாம் ஒன்றாக இணைப்பது வரலாற்றில் இல்லை.
தவறான சிந்தனை
அந்த சிந்தனையே தவறானது. அதை தெளிவுபடுத்திவிட்டு தான் அங்கிருந்து தவெகவில் இணைந்து வருகிறார்கள். தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான அறிவிப்பு வெளியானவுடன் அதைப்பற்றிய நிலைப்பாட்டை முதலமைச்சர் வெளியிடுவார். ஒவ்வொரு அரசியல் கட்சி தலைவர்கள் அவரவர் கருத்துகளை வெளியிட்டு வருகிறார்கள். அதற்கு மாற்று கருத்து சொல்வது சரியாக இருக்காது. அந்தந்த கால சூழ்நிலை தான் கூட்டணியை முடிவு செய்யும்.
மகளிர் உரிமை தொகைக்கான விண்ணப்பம் வாங்கப்பட்டு வருகிறது. ஆன்லைன் மூலமாக விண்ணப்பங்கள் வாங்கப்படுகின்றன. பெருந்துறையில் கூட என்னிடம் மகளிர் உரிமைத்தொகை வேண்டும் என மனுக்கள் வழங்கியுள்ளனர். யார் வேண்டுமானாலும் விண்ணப்பம் வழங்கலாம். அதை தேர்வு செய்து அரசு அவர்களுக்கு மகளிர் உரிமை தொகை வழங்கும்" என்றார்.












Click it and Unblock the Notifications