ஏர்டெல்லை தெருவில் இழுத்து போட்டு அடிக்கும் நெட்டிசன்கள்.. குறுக்கே வந்த கௌசிக், டிராய்க்கும் அடி

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஏர்டெல் நிறுவனத்தின் 'அன்லிமிடெட் 5G டேட்டா' சலுகையின் கீழ், ஹாட்ஸ்பாட் பயன்படுத்துபவர்கள் இனி வேறு யாருக்கும் அதனைப் பகிர்ந்துகொள்ள முடியாது என்றொரு தகவல் சமூக வலைத்தளங்களில் பரவியது. ஏர்டெல் நிறுவனம் ஹாட்ஸ்பாட் வசதியை முற்றிலும் முடக்கிவிட்டதாகப் பரவிய இச்செய்தி, காட்டுத்தீ போலப் லோக்கல் மீடியாக்களில் வைரலானது. இதனால், கோபமடைந்த நெட்டிசன்கள் பலரும் ஏர்டெல் நிறுவனத்தைக் கடுமையாக விமர்சிக்கத் தொடங்கினர். அதே சமயம், 'குறுக்கே வந்த கௌசிக்' கதையாகத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் (TRAI) அமைப்பின் மீதும் மக்கள் தங்களின் அதிருப்தியை வெளிப்படுத்தினர். இதனால் அதிர்ச்சியடைந்த ஏர்டெல் நிறுவனம், "அப்படி எந்தவொரு தடையுமில்லை; அன்லிமிடெட் 5G டேட்டா சலுகையை வணிக ரீதியாகத் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்கவே அந்த விதிமுறை கொண்டு வரப்பட்டது" என்று அதிகாரப்பூர்வமாக விளக்கம் அளித்துள்ளது.

ஏர்டெல் நிறுவனம் தனது அன்லிமிடெட் 5G சலுகையின் கீழ் மொபைல் ஹாட்ஸ்பாட் வசதியைத் தொழில்நுட்ப ரீதியாக முடக்கிவிட்டதாகச் சமூக வலைத்தளங்களிலும், சில இணையதளங்களிலும், யூடியூபர்களும் செய்திகளை வெளியிட்டனர். ஆனால், உண்மை நிலவரம் முற்றிலும் வேறாக இருந்தது. உண்மையை முழுமையாக அறியும் முன்பே, சமீபத்திய ரீசார்ஜ் கட்டண உயர்வால் ஏர்டெல் மீது கடுமையான கோபத்தில் இருந்த வாடிக்கையாளர்கள், தங்களின் பழைய வன்மத்தைத் தீர்த்துக்கொள்ளும் விதமாக விவாதிக்கத் தொடங்கினர். "மாஸ்டர் என்றால் அடிப்போம்" என்பது போல எதற்கெடுத்தாலும் ஏர்டெல்லைக் குற்றம் சாட்ட முற்பட்டனர். உண்மையில், மக்கள் எதற்காகத் தங்களை விமர்சிக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ளவே ஏர்டெல் நிறுவனத்திற்கு ஒரு நாள் தேவைப்பட்டது. இதில், சம்பந்தமே இல்லாமல் இடையில் வந்த டிராய் அமைப்பும் நெட்டிசன்களிடம் சிக்கித் தவித்தது.

What happened due to rumors regarding hotspot usage on the Airtel unlimited 5G offer

நெட்டிசன்கள் பலர், "ஏர்டெல் நிறுவனம் விளம்பரம் செய்யும்போது 'அன்லிமிடெட் 5G டேட்டா' என்று ஆசை காட்டிவிட்டு, விதிமுறைகளில் (Terms & Conditions) சென்று பார்த்தால், 'ஹாட்ஸ்பாட் பகிரக்கூடாது; வணிக ரீதியாகப் பயன்படுத்தக் கூடாது' என்று நிபந்தனை விதித்துள்ளது" எனக் கூறிச் சாடினர். மேலும், கடந்த சில வருடங்களாக ஏர்டெல், ஜியோ ஆகிய நிறுவனங்கள் தங்களது ரீசார்ஜ் கட்டணங்களை 15% முதல் 25% வரை அதிரடியாக உயர்த்தியதும் மக்களின் இந்தக் கோபத்திற்கு முக்கியக் காரணமாக அமைந்தது.

"கட்டணத்தை உயர்த்தினாலும் பல இடங்களில் 5G நெட்வொர்க் சரியாகக் கிடைப்பதில்லை; இன்னும் 4G வேகம் தான் கிடைக்கிறது. சில பகுதிகளில் இணையச் சேவை என்பது இன்றுவரை எட்டாக்கனியாகவே உள்ளது" என்று மக்கள் கவலையில் இருந்தனர். இத்தகைய அதிருப்தியில் இருந்த நேரத்தில், இந்த ஹாட்ஸ்பாட் சர்ச்சையும் சேர்ந்துகொள்ளவே, நெட்டிசன்கள் ஏர்டெல் நிறுவனத்தைச் சமூக வலைத்தளங்களில் வறுத்தெடுத்துவிட்டனர்.

குறுக்கே வந்த கௌசிக்கு பலத்த அடி!

தொலைப்பேசி வாடிக்கையாளர்களின் நலனைக் காக்க வேண்டிய முக்கிய அரசு அமைப்பு டிராய் (TRAI) ஆகும். ஆனால், கட்டண உயர்வு போன்ற முக்கியமான பொதுப் பிரச்சனைகளின் போது டிராய் எப்போதுமே அமைதி காப்பதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். அடுத்தடுத்து கட்டணங்களை உயர்த்தும் போதும், 'அன்லிமிடெட்' என்று சொல்லிவிட்டு மக்களை ஏமாற்றும் போதும், டிராய் அதனைத் தட்டிக் கேட்காமல் வேடிக்கை பார்ப்பதாக மக்கள் கருதுகின்றனர். பொதுவாக ஒரு மாதம் என்பது 30 நாட்களைக் கொண்டது. ஆனால் ஏர்டெல், ஜியோ போன்ற நிறுவனங்கள் தங்களின் மாதாந்திரத் திட்டங்களை 28 நாட்களாகக் குறைத்து, வருடத்திற்கு 13 மாதங்கள் என வாடிக்கையாளர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலித்த போதிலும், டிராய் அதனைக் கண்டுகொள்ளவில்லை என்ற ஆதங்கம் மக்களிடம் உள்ளது.

இதன் காரணமாக, இந்த அமைப்பு கார்ப்பரேட் நிறுவனங்களுக்குச் சாதகமாகச் செயல்படுவதாகக் கூறி, மக்கள் டிராயை நோக்கி, "நீங்கள் வாடிக்கையாளர்களுக்குச் சப்போர்ட்டா? இல்லை நெட்வொர்க் நிறுவனங்களுக்குச் சப்போர்ட்டா?" என்று கடுமையான கேள்விகளை எழுப்பி வருகின்றனர். இதனால், 'குறுக்கே வந்த கௌசிக்' போல டிராய் அமைப்பும் மக்களிடம் தேவையில்லாமல் அடிய வாங்குகிறது.

விதிமுறை நீக்கம் மற்றும் உண்மை நிலவரம்

உண்மை என்னவென்றால், சாதாரண வாடிக்கையாளர்கள் எப்போதும் போலத் தங்களது தனிப்பட்ட சாதனங்களை ஹாட்ஸ்பாட் மூலம் தொடர்ந்து இணைத்துப் பயன்படுத்த முடியும். ஹாட்ஸ்பாட் வசதி ஒருபோதும் முடக்கப்படவில்லை. வணிகப் பயன்பாட்டிற்காக இந்த அன்லிமிடெட் 5G சேவையைத் தவறாகப் பயன்படுத்துபவர்களைக் குறிவைத்துதான் ஏர்டெல் நிறுவனம் முன்பு அதனை அறிவித்திருந்தது. எனினும், தற்போதைய சூழலைக் கருத்தில் கொண்டு, தனது விதிமுறைகளில் இருந்து அந்த குறிப்பிட்ட ஹாட்ஸ்பாட் நிபந்தனையை ஏர்டெல் நிறுவனம் முற்றிலும் நீக்கிவிட்டது.

தவறான புரிதல்

ஏர்டெல் சேவை தொடர்பாக, எழுதப்பட்ட விதிமுறைகளைச் சில இணையதளங்கள் தவறாகப் புரிந்துகொண்டதாலேயே இந்தச் சர்ச்சை முக்கியமாக உருவானது. நடைமுறையில், பயணங்களின் போதும், விமான நிலையங்கள் மற்றும் சாலைகளில் செல்லும்போதும் ஏர்டெல் மொபைல் ஹாட்ஸ்பாட்டை நீண்ட காலத்திற்குச் சோதித்துப் பார்த்தபோது, தனிப்பட்ட சாதனங்களை இணைப்பதற்கான ஹாட்ஸ்பாட் வசதி தடையின்றியே கிடைத்தது.

முன்னதாக, பார்தி ஏர்டெல் நிறுவனம் தனது அன்லிமிடெட் 5G டேட்டா சலுகையை 2023-ஆம் ஆண்டில் சில விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுடன் அறிமுகப்படுத்தியது. அதில் ஒரு விதிமுறைதான் மொபைல் ஹாட்ஸ்பாட் மூலம் அன்லிமிடெட் 5G டேட்டாவைப் பகிர்வது பற்றியதாகும். இந்த நிபந்தனை சாதாரண தனிப்பட்ட பயன்பாட்டைத் தடுப்பதற்காக அல்லாமல், முக்கியமாக வணிக ரீதியாகத் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுப்பதற்காகவே கொண்டுவரப்பட்டிருந்தது. அந்த விதிமுறை இருந்தபோதிலும், ஏர்டெல் தொழில்நுட்ப ரீதியாக மொபைல் ஹாட்ஸ்பாட் வசதியை முடக்கவில்லை. வாடிக்கையாளர்கள் தங்களது ஸ்மார்ட்போன்களில் ஹாட்ஸ்பாட்டை ஆன் செய்து, வழக்கம்போலத் தனிப்பட்ட சாதனங்களை இணைத்துப் பயன்படுத்திதான் வந்தார்கள்.

வாடிக்கையாளர்கள் வதந்தி பரப்பியது ஏன்?

வணிக நிறுவனங்கள் 5G சேவையைத் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்கப் போடப்பட்ட நிபந்தனையைத் தவறாகப் புரிந்துகொண்ட வாடிக்கையாளர்கள், ஏர்டெல் தொடர்பாக வதந்திகளைப் பரப்பிவிட்டனர். இதனால் ஏர்டெல் நிறுவனம் தகுந்த காரணமின்றிப் பொதுவெளியில் விமர்சனங்களைச் சந்திக்க நேர்ந்தது. தற்போது அந்த நிபந்தனையையும் ஏர்டெல் நீக்கிவிட்டதால், இந்தச் சர்ச்சை முழுமையாக முடிவுக்கு வந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+