Gold rate Today: வரலாறு காணாத உச்சம் தொட்டாச்சு.. ஷாக் கொடுக்கும் தங்கம் விலை! இன்றைய ரேட் என்ன?
சென்னை: நடப்பு ஆண்டு தொடங்கியதில் இருந்தே தினம் தினம் தங்கம் விலை புதிய உச்சம் தொட்டு வந்தது. நேற்றும் சவரனுக்கு ரூ.200 உயர்ந்து வரலாற்றில் இதுவரை இல்லாத அளவாக ஒரு சவரன் தங்கம் ரூ.70,000 தாண்டியுள்ளது. இந்து ஆண்டுக்குள் ஒரு சவரன் தங்கம் விலை ஒரு லட்சத்தை தாண்டக் கூட வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
தங்கம் விலை இந்த ஆண்டு துவக்கத்தில் இருந்தே விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து வருகிறது. இடையிடையே விலை குறைந்தாலும் அதிக நாட்கள் விலை உயர்ந்தே வந்தது. இதனால், தங்கம் விலை இதுவரை இல்லாத அளவுக்கு உச்சம் தொட்டு நகைபிரியர்களை அதிர வைத்து வருகிறது.

இன்றைய தங்கம் விலை
அதிலும் அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்ற பிறகு அவர் விதித்த வரி விதிப்பு உள்ளிட்ட காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதாரத்தில் தாக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் தங்கத்தை பாதுகாப்பான முதலீடாக கருதி வாங்கி குவிப்பதால் தங்கத்தின் மீதான ஆர்வம் அதிகரித்துள்ளது. வரலாறு காணாத விலை உயர்வுக்கு இதுவும் ஒரு காரணம் என்று சந்தை வல்லுனர்கள் கூறுகிறார்கள்.
தங்கம் விலை கடந்த 9 ஆம் தேதியில் இருந்து ஜெட் வேகத்தில் மீண்டும் பயணிக்க தொடங்கி இருக்கிறது. நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.8 ஆயிரத்து 745-க்கும், ஒரு சவரன் ரூ.69 ஆயிரத்து 960-க்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.25-ம், சவரனுக்கு ரூ.200-ம் அதிகரித்து, ஒரு கிராம் ரூ.8 ஆயிரத்து 770-க்கும், ஒரு சவரன் ரூ.70 ஆயிரத்து 160-க்கும் விற்பனை ஆனது.
இது தங்கம் விலையின் புதிய உச்சம் ஆகும். வரலாற்றில் இல்லாத அளவுக்கு தங்கம் விலை உயர்ந்துள்ளது. இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் தங்கம் விலையில் எந்த மாற்றமும் இருக்காது. நேற்று விற்பனை செய்யப்பட்ட விலைக்கே தொடர்ந்து விற்பனையாகி வருகிறது.
கடந்த சில நாட்களில் தங்கம் விலை நிலவரம்
07.04.2025 ஒரு சவரன்: ரூ.66,280
08.04.2025 ஒரு சவரன்: ரூ.65,800
09.04.2025 ஒரு சவரன்: ரூ.67,280
10.04.2025 ஒரு சவரன்: ரூ.68,480
11.04.2025 ஒரு சவரன்: ரூ.69,960
12.04.2025 ஒரு சவரன்: ரூ.70,160
உயர்வுக்கு என்ன காரணம்?
தங்கம் விலை அதிரடியாக உயருவதும், சற்று இறங்குவதுமாகவே தொடர்ந்து இருந்து வருகிறது. அமெரிக்க அதிபர் டிரம்ப் பரஸ்பர வரி விதிப்பு தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்ற தகவல் வந்த நேரத்தில் தங்கம் விலை கடந்த 4 ஆம் தேதியில் இருந்து 8 ஆம் தேதி வரை குறைந்து வந்தது.
பரஸ்பர வரி விதிப்பு காரணமாக அமெரிக்காவுக்கும் - சீனாவுக்கும் இடையே மோதல் அதிகரித்துள்ளது. இரு நாடுகளும் மாறி மாறி வரியை விதித்து இருக்கின்றன. அமெரிக்கா சீனாவின் இறக்குமதி பொருட்கள் மீது 145 சதவீதம் வரியை விதித்து இருக்கிறது. பதிலுக்கு சீனாவும் விடாமல் வரியை விதித்து வருகிறது. இந்த வரியுத்தம் காரணமாக பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சியை சந்தித்தன. இதனைத்தொடர்ந்து முதலீட்டாளர்களின் கவனம் தங்கத்தின் பக்கம் திரும்பியது. இதனால் அதன் விலை ராக்கெட் வேகத்தில் கிடுகிடுவென உயரத் தொடங்கி இருக்கிறது.
பவுன் ரூ.1 லட்சத்தை தாண்டுமா?
தங்கம் விலை இந்த ஆண்டு இறுதிக்குள் தங்கம் ரூ.1 லட்சத்தை எட்டுவதற்கான அதிக வாய்ப்புகள் உள்ளது என்று காமா ஜூவல்லரியின் நிர்வாக இயக்குநர் கொலின் ஷா தெரிவித்தார். அமெரிக்காவின் பெடரல் ரிசர்வ் இரண்டு வட்டி விகிதக் குறைப்புகளை மேற்கொள்ள உள்ளது. இதனால் விலை கிடுகிடுவென உயரும் என்று சொல்லப்படுகிறது.
மோதிலால் ஓஸ்வால் ஃபைனான்சியல் சர்வீசஸ் நிறுவனத்தின் கமாடிட்டிஸ் மற்றும் தலைவரான கிஷோர் நார்னே கூறுகையில், "தங்கத்தின் விலை உயர்விற்கு உச்ச வரம்பு என எதுவும் இல்லை. தங்கம் அவுன்ஸ் ஒன்றுக்கு $4,000 - 4,500 வரை எளிதாக உயரும். 1 லட்சத்தை இந்த வருடம் எட்டாவிட்டாலும் கூட அடுத்த வருடம் எட்டும் என்றார். அதே நேரத்தில் விலை குறைய வாய்ப்புள்ளதாகவும் சில நிபுணர்கள் கணித்துள்ளார்கள்.












Click it and Unblock the Notifications