தங்கத்தின் இனிதான் ஆட்டமே இருக்கு.. ரூ.1 லட்சத்தை அடைய போகும் தங்கம்.. கணித்த வல்லுனர் குழு!
சென்னை: இந்தியாவில் தங்கம் விலை 2025 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ICICI வங்கியின் உலகளாவிய சந்தைகள் அறிக்கையின்படி, 10 கிராம் தங்கத்தின் விலை ₹1,00,000 என்ற இலக்கை நோக்கி நகர வாய்ப்புள்ளது. தற்போது, தங்கத்தின் விலை ₹96,500 - ₹98,500 என்ற அளவில் உள்ளது.
ICICI வங்கியின் உலகளாவிய சந்தைகள் அறிக்கையின்படி, உள்ளூர் தங்கம் விலைகள் தொடர்ந்து அதிகரித்து, குறுகிய காலத்தில் 10 கிராமுக்கு ₹96,500 முதல் ₹98,500 வரை வர்த்தகமாகி, 2025 இரண்டாம் பாதியில் ₹98,500 முதல் ₹1,00,000 வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, என்று கூறப்பட்டுள்ளது.

சமீபத்தில் உலகளாவிய விலைகள் குறைந்தாலும், உள்நாட்டுத் தங்கம் விலைகள் ஜூன் மாதத்தில் 0.6% உயர்ந்தன. இதற்கு ரூபாய் மதிப்பு 0.2% பலவீனமடைந்தது காரணமாக. ஆனால் மே மாதத்தில் இறக்குமதி $2.5 பில்லியனாகக் குறைந்துள்ளது, இது ஏப்ரல் மாதத்தில் $3.1 பில்லியனாக இருந்தது. நகைக்கான தேவை பலவீனமாகவே உள்ளது, அதே நேரத்தில் முதலீடு தொடர்பான கொள்முதல் வலுவாக இருந்தது. அதாவது மக்கள் இதை அணிகலனாக வாங்குவது குறைவாக உள்ளது. ஆனால் முதலீடாக அதாவது பார்களாக வாங்குவது அதிகரித்துள்ளது.
இந்திய மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சங்கத்தின் (AMFI) தரவுகளின்படி, மே மாதத்தில் தங்க ETF-களில் நிகர உள்வரவு ₹2.92 பில்லியனாக இருந்தத. உலக அளவிலும், தங்கத்தின் மீதான முதலீட்டாளர்களின் ஆர்வம் வலுவாக உள்ளது. SPDR தங்க ETF கையிருப்பு ஜூன் 1 ஆம் தேதி 930 டன்களில் இருந்து ஜூலை 1 ஆம் தேதி 948 டன்களாக உயர்ந்தது. இதனால் இந்தியாவில் தங்கம் விலை 2025 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2024-25 நிதியாண்டில் ரிசர்வ் வங்கி (RBI), வெளிநாட்டுக் கருவூலங்களிலிருந்து 100.32 மெட்ரிக் டன் தங்கத்தை இந்தியாவிற்கு திரும்பக் கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் இந்தியாவில் உள்ள தங்கத்தின் இருப்பு 200.06 மெட்ரிக் டன்னாக உயர்ந்துள்ளது. இதுவும் இந்தியாவில் தங்கம் விலை உயர காரணமாக இருக்கும் என்கிறார்கள்.
தங்க இருப்பை அதிகரித்த ரிசர்வ் வங்கி
உலகப் பொருளாதாரத்தில் நிலவும் நிச்சயமற்ற தன்மை காரணமாக, ரிசர்வ் வங்கி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. குறிப்பாக, உலகின் மிகப்பெரிய பொருளாதாரமான அமெரிக்காவில் அரசியல் மாற்றங்கள், வர்த்தக வரிகள், பொருளாதார மந்தநிலை அபாயங்கள் போன்ற காரணங்களால் நிச்சயமற்ற சூழ்நிலை நிலவுகிறது. இதுபோன்ற சூழலில், தங்கத்தின் இருப்பு ஒரு பாதுகாப்பான முதலீடாகக் கருதப்படுகிறது.
இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) அறிக்கையின்படி, மார்ச் 31, 2025 அன்று வெளிநாடுகளில் இருந்த இந்திய தங்கத்தின் அளவு 367.60 மெட்ரிக் டன்னாக குறைந்துள்ளது. இது மார்ச் 31, 2024 அன்று 413.79 மெட்ரிக் டன்னாக இருந்தது குறிப்பிடத்தக்கது. பொதுவாக, பொருளாதாரத்தில் நிச்சயமற்ற சூழ்நிலைகள் அதிகரிக்கும்போது, மத்திய வங்கிகள் தங்கம் போன்ற பாதுகாப்பான சொத்துக்களில் முதலீடு செய்வதை அதிகரிக்கின்றன. இந்தியாவில் தங்கத்தை வைத்திருப்பது, தேவைப்படும்போது அதனைப் பயன்படுத்தி உள்ளூர் தங்கத்தின் விலையை கட்டுப்படுத்தவும் ரிசர்வ் வங்கிக்கு உதவுகிறது.
தங்கத்தை வெளிநாட்டுக் கருவூலங்களில் வைத்திருப்பதன் மூலம், இந்தியா வர்த்தகம், பரிமாற்றம் மற்றும் வருமானம் ஈட்டுதல் போன்ற நடவடிக்கைகளில் எளிதாக ஈடுபட முடியும். அதே நேரத்தில், புவிசார் அரசியல் பதட்டங்கள் மற்றும் போர் போன்ற சூழ்நிலைகளில் சில அபாயங்களும் உள்ளன. இந்தியாவின் தங்க இருப்பு முக்கியமாக இங்கிலாந்து வங்கியில் வைக்கப்பட்டுள்ளது, அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் மிகவும் பலமாக உள்ளன. இது தவிர, சுவிட்சர்லாந்தில் உள்ள பேங்க் ஃபார் இன்டர்நேஷனல் செட்டில்மென்ட்ஸ் (BIS) மற்றும் அமெரிக்காவில் உள்ள ஃபெடரல் ரிசர்வ் வங்கி ஆகியவற்றிலும் தங்க இருப்பு வைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications