Gold loan: நகை கடன் இனி இவ்வளவு தான் கிடைக்கும்.. ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டால் வங்கிகள் எடுத்த அதிரடி முடிவு
சென்னை: தங்கம் விலை நிலையற்ற தன்மையில் உள்ளதால் நகைக் கடன் (Gold loan) விவகாரத்தில் மிக முக்கியமான முடிவு ஒன்றை ரிசர்வ் வங்கி எடுத்துள்ளது. தற்போது, நகைகள் அடகு வைக்கும்போது தங்கத்தின் மதிப்பில் 70 முதல் 72 % வரையிலான அளவுக்கு கடன் வழங்கப்படுகிறது. விலையில் ஏற்பட்டுள்ள நிலையற்ற தன்மை காரணமாக இதனை குறைக்க ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. இதன்படி, நகை கடன் வழங்குவதில் எத்தனை சதவீதம் குறைக்கப்படும் என்பது குறித்த விவரங்களை பார்க்கலாம்.
பொதுமக்கள் தங்கள் அவசர தேவைகளுக்கு நகைகளை அடைமானம் வைத்து அதற்கு ஈடாக பணம் பெறும் வசதி உள்ளது. இதற்காக உரிய வட்டியையும் வங்கிகள் வசூலித்து வருகின்றன.

தங்க நகை கடன்கள்
திடீரென ஏதாவது அவசர செலவு வந்தால் யாரிடம் போய் கேட்பது என தடுமாறும் நேரத்தில் ஏழை எளிய மக்களுக்கு பெரிய அளவில் கைகொடுப்பது நகை கடன்கள்தான். வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் அடகு வைத்து கடன் வாங்கி வருகிறார்கள். வங்கிகளில் நகையை அடகு வைத்து வாங்கப்பட்ட கடன் தொகை கடந்த 2024-ம் ஆண்டு ஏப்ரல் மாத நிலவரப்படி ரூ.1.10 லட்சம் கோடியாக இருந்தது.
கடந்த அக்டோபர் மாதம் ரூ.3.37 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. இதில் 40 முதல் 45 சதவீதம் அளவிலான நகைக்கடனை 31 முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்கள் வாங்கியிருப்பதாக தரவுகள் காட்டுகின்றன. தங்கம் விலை தற்போது தாறுமாறாக அதிகரித்து வருகிறது. அதே நேரத்தில் திடீரென வீழ்ச்சியையும் சந்தித்து வருகிறது.
தொகை அதிகமாக வழங்க கூடாது
இப்படி நிலையற்ற தன்மையில் தங்கம் விலை உள்ள நிலையில், சில நேரங்களில் நகையின் மதிப்பை விட அதிகமாக மாறிவிடுகிறது பெறப்படும் கடன் தொகை. இப்படிப்பட்ட சூழலில், நகை கடனை திருப்பி செலுத்துவதில் பெரும்பாலானோர் ஆர்வம் காட்டுவது இல்லை என்று சொல்லப்படுகிறது. அதுமட்டும் இன்றி நகையை திருப்பாமல், வங்கி மற்றும் நிதி நிறுவனங்களில் அப்படியே இருக்கட்டும் என்று விட்டுவிடுகிறார்களாம்.
ரிசர்வ் வங்கி உத்தரவு
இது வங்கிகளுக்கு கவலையை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு ரிசர்வ் வங்கி புதிய அறிவுறுத்தல் ஒன்றை விடுத்துள்ளது. அதாவது, தங்கம் விலையில் நிலையற்ற தன்மை நிலவுவதால் நகைக்கடன் தொகையை குறைத்து வழங்க வேண்டும் என்று வங்கிகள், நிதி நிறுவனங்களுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
65 சதவீதமாக குறைப்பு
தற்போது, நகைகள் அடகு வைக்கும்போது தங்கத்தின் மதிப்பில் 70 முதல் 72% வரையிலான அளவுக்கு கடன் வழங்கப்படுகிறது. இந்த நிலையில்தான், தங்க நகையின் மதிப்பில் இருந்து 60 முதல் 65 சதவீதம் வரையிலான அளவுக்கு மட்டுமே கடன் வழங்குவதற்கு வங்கிகள், நிதி நிறுவனங்கள் முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. வங்கிகளின் இந்த முடிவால் நகைக் கடன் வாங்க திட்டமிட்டவர்களுக்கு நகையின் மதிப்பில் 60 சதவீத அளவிற்கே கிடைக்க வாய்ப்புள்ளது. இது வாடிக்கையாளர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய தங்கம் ரேட் என்ன?
தங்கம் விலையை பொறுத்தவரை நடப்பு ஆண்டில் மட்டும் சுமார் 43 ஆயிரம் ரூபாய் உயர்ந்துள்ளது. இந்த ஆண்டு துவக்கத்தில் அதாவது ஜனவரி 2025-ல் ஒரு சவரன் ரூ.57 ஆயிரம் இருந்தது. ஒரு வருடம் முழுவதாக கூட இன்னும் முடியவில்லை; அதற்குள் ஒரு சவரன் ரூ.1 லட்சத்தை தாண்டிவிட்டது. தங்கம் விலை வரலாற்றில் ஒரு ஆண்டில் இவ்வளவு அதிகமாக விலை உயர்ந்ததே கிடையாது.
தங்கம் விலையை பொறுத்தவரை நேற்று சென்னையில் காலை, மாலை என இரு வேளைகளிலும் அதிகரித்து ஒரு சவரன் தங்கம் ரூ.1,00,560-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.12,570-க்கு விற்பனை செய்யப்படுகிறது.












Click it and Unblock the Notifications