அடிக்கிற வெயிலை ஒரு கை பார்த்துடலாம்.. சம்மரில் சாப்பிட வேண்டிய உணவு எது? தொடக்கூடாத உணவு எது?
சென்னை: கோடை காலத்தில் நமது உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள நாம் சாப்பிடும் உணவுகளுக்கும் முக்கிய பங்கு உண்டு. வெப்பம் மிக்க இந்த காலத்தில் உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள எந்த உணவுகளை எல்லாம் சாப்பிடலாம்.. எதையெல்லாம் சாப்பிடாமல் தவிர்க்கலாம் என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.
கோடைக்காலம் இந்த ஆண்டு வாட்டி வதைக்கிறது. பிப்ரவரி மாத இறுதியில் ஆரம்பித்த கடுமையான வெயில் தற்போது அனலை கக்கி வருகிறது. இதனால், பகல் நேரங்களில் மக்கள் வெளியில் செல்லவே அச்சப்பட வேண்டியிருக்கிறது. காலை 11 மணியில் இருந்து மாலை 4 மணி வரை வெளியில் சென்றவர்கள் வெயிலால் படும் அவஸ்தையை சொல்லி மாளாது. அந்த அளவுக்கு வெயிலின் உக்கிரம் அதிகமாக உள்ளது.

பகல் நேரத்தில் எதாவது முக்கிய வேலையாக வெளியில் சென்றாலும் கூட இளநீர் கடைகள், ஜூஸ் கடைகளை கண்கள் தேடிக்கொண்டு இருக்கின்றன. பகல் நேரம் தான் இப்படி என்றால் வெயில் நேரத்தில் கடும் உஷ்ணமாக உள்ளது. அதுவும் சென்னை போன்ற நகரங்களில் கான்கிரிட் அடுக்கு மாடிகளில் வசிக்கும் மக்களின் பாடு படு திண்டாட்டம்தான்.
ஃபேன் இல்லாமல் ஒரு நிமிடம் கூட வீட்டில் இருக்க முடியாத அளவுக்கு வெயிலின் தாக்கம் உள்ளது. வெயில் காலத்தில் தாங்க முடியாத அளவுக்கு வெப்பம் நிலவுவதால் நாம் உண்ணும் உணவிலும் மிக கவனமாக இருக்க வேண்டும். வெயில் நேரத்தில் உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள வேண்டிய சில உணவு வகைகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அவற்றை இங்கே பார்க்கலாம்.
சாப்பிட வேண்டிய உணவுகள்
* புதினா, தயிர்: புதினாவில் மெந்தோல் என்ற தாது உள்ளது. இது இயற்கையாகவே நமது உடலை கூலிங் ஆக வைத்திருக்க கூடியது. நாம் சாப்பிடும் உணவு எளிதில் செரிமானம் ஆக இது உதவும். உடலில் எரிச்சலை குறைக்கும் ஆற்றல் மிக்கது. சாலட்கள் மற்றும் தண்ணீருடன் சேர்த்து புதினாவை சாப்பிடலாம்.
அதேபோல், வெயில் காலத்தில் தயிர் சாப்பிடுவது மிகவும் ஆரோக்கியமானது. குடலுக்கு புரோபயாடிக்குகளை வழங்கும் குளிர்ச்சியான உணவாக தயிர் உள்ளது. தயிரை சாப்பிடுவதன் மூலம் உடல் சூடு தணியும். வயிறு சார்ந்த பிரச்சினைகள் ஏற்படாது.
* தர்பூசணி: வெயில் காலத்தில் மக்கள் விரும்பி உண்ணும் பழ வகைகளில் தர்ப்பூசணியும் அடங்கும். நீர்ச்சத்து அதிகம் உள்ள தர்ப்பூசணி உடலுக்கு குளிர்ச்சியை தரக்கூடியது. நம் உடலில் நீரேற்றத்துடன் வைத்துக்கொள்ளும். மலிவான விலையும் கொண்ட இந்த தர்பூசணியை மக்கள் வெயில் காலத்தில் அதிகம் சாப்பிடலாம். இதனால், நீர்ச்சத்து குறைபாடு பிரச்சினையை தவிர்க்க முடியும். தர்ப்பூசணி பழத்தில் வைட்டமின் சி, ஏ மற்றும் பொட்டாசியம் ஆகியவை உள்ளது. இது நமது உடலின் ஆற்றலை அதிகரிக்கும்.
* வெள்ளரிக்காய்: நீர்சத்துமிக்க மற்றொரு உணவு பொருள் எது என்றால் அது வெள்ளரிக்காய் தான். வெள்ளரிக்காயில் அதிக நீர்சத்து உள்ளது. கலோரியின் அளவு குறைவாகவே உள்ளது. நமது உடல் வெப்ப நிலையை சீராக பராமரிக்க வெள்ளரிக்காய் உதவுகிறது. வெள்ளரிக்காயை சாலட் போன்று அல்லது பிற உணவுக்கு சைட் டிஷ் ஆகவோ எடுத்துக்கொள்ளலாம்.
* இளநீர், நுங்கு: வெயில் காலத்தில் தவறாமல் இளநீர் சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நல்லது. இளநீரில் பொட்டாசியம், சோடியம் மற்றும் மேக்னீசியம் போன்ற எலக்ட்ரோலைட்ஸ்கள் உள்ளன. வெயில் காலத்தில் நமது உடலில் நீர்ச்சத்து வேகமாக குறையும். இளநீர் குடிப்பதன் மூலம் நமது உடலை நீரேற்றத்துடனும் புத்துணர்ச்சியுடனும் வைத்துக்கொள்ள முடியும்.
இளநீரில் ஆண்டி ஆகிச்டண்ட்ஸ்களும் உள்ளன. அதேபோல், இந்த கோடை வெயிலில் பனை நுங்கு சாப்பிடுவது நமது உடலுக்கு மிகவும் நல்லது. கோடை காலத்தில் சென்னையில் பல இடங்களில் சாலையோரத்தில் பனை நுங்கு, பதனீர் விற்கப்பட்டு வருகின்றன. பதனீர், நுங்கு குடிப்பதனால் நமது உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள முடியும்.
சம்மருக்கு தொடக்கூடாத 5 உணவுகள்:
* காரம் மற்றும் வறுத்த உணவுகள்: காரமான மற்றும் எண்ணெயில் பொறித்த உணவுகளை வெப்ப காலத்தில் தவிர்ப்பது உடலுக்கு நல்லது. ஏனெனில், இந்த உணவுகள் நமது உடலின் வெப்பத்தை அதிகரிக்கும். இதனால் நீர்ச்சத்து குறையும். இந்த வகை உணவுகளை சாப்பிடுவது அஜீரணம் மற்றும் நெஞ்சு எரிச்சலையும் ஏற்படுத்தும்.
* மதுபானம்: வெயில் காலத்தில் முற்றிலும் தொடக்கூடாதது மதுபானம் தான். ஏனெனில், இது உடலில் நீர்ச்சத்தை குறைத்து உடல் வெப்பத்தை அதிகரிக்கும். மது அருந்துவது வெப்ப தாக்கத்தை ஏற்படுத்தலாம்.
* காஃபி: வெயில் காலத்தில் காஃபி குடிப்பதை குறைப்பது நல்லது. காஃபியில் உள்ள டியுரெடிக் நீர்ச்சத்தை குறைக்கும். காஃபி குடிப்பது உடல் வெப்பத்தை அதிகரிப்பதோடு, வியர்வையையும் ஏற்படுத்தும். பலரும் அலுவலகத்திற்கு சென்றால் காஃபி இல்லாமல் தலைவலிக்கிறது என்று வெயிலையும் பாராமல் குடிப்பார்கள். வெயில் காலத்தில் இந்த பழக்கத்திற்கு கொஞ்சம் ரெஸ்ட் கொடுக்கலாம் என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள்.
* குளிர்பானங்கள்: வெயில் காலத்தில் ஜில்லென்ற உணர்வை ஏற்படுத்துவதால் நமது உடலும் குளிர்ந்து விடும் என நினைத்து குளிர்பானங்களை விரும்பி சாப்பிடுகிறார்கள். கார்பனேற்றம் செய்யப்பட்ட குளிர்பானங்களை வெயில் காலத்தில் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
அதாவது, சோடா, எனர்ஜி டிரின்க்ஸ், ஸ்போர்ட்ஸ் டிரின்க்ஸ் போன்ற இனிப்பு சத்து நிறைந்த பானங்களை தவிர்க்க வேண்டும். ஏனெனில் அதில் உள்ள அதிகப்படியான சர்க்கரை உடலில் நீர்ச்சத்தை குறைக்கும். ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கும்.












Click it and Unblock the Notifications