சென்னையில்.. வாய்ப்புண்ணுக்கு அட்மிட்டான சிறுவனுக்கு "சுன்னத்" செய்த டாக்டர்.. நடந்தது என்ன?
சென்னை: சென்னையில் வாய் புண்ணுக்காக அனுமதிக்கப்பட்ட சிறுவனுக்கு பிறப்புறுப்பில் இருக்கும் தோலை நீக்கும் அறுவை சிகிச்சை மருத்துவர் செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் என்ன நடந்தது என்பதை தெரிந்து கொள்ளலாம்.
மயிலாப்பூரை சேர்ந்தவர் விஜய் ஆனந்த். இவரது மனைவி விஜயலட்சுமி. இவர்களுக்கு 9 வயதில் சிறுவன் உள்ளான். இந்த சிறுவனுக்கு வாயில் புண் ஏற்பட்டதாக தெரிகிறது.

இதற்கு சிகிச்சை எடுக்க ராயப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றாராம். அங்கு சில நாட்களுக்கு முன்புக்கு சிறுவனுக்கு ரத்த பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் வாயில் இருக்கும் புண் கட்டியை அறுவை சிகிச்சை மூலம் அகற்ற வேண்டும் என மருத்துவர் கூறினாராம்.
இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மருத்துவர் சொன்னது போல் அறுவை சிகிச்சைக்காக சிறுவனை அந்த மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிறுவனுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து சில நாட்கள் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்த சிறுவன் வீட்டிற்கு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
இந்த நிலையில் வீட்டிற்கு சிறுவனை அழைத்து செல்லப்பட்ட நிலையில் பெற்றோருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. வாய் புண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்வதற்கு பதிலாக சிறுவனின் பிறப்புறுப்பின் மேல் தோலை மருத்துவர்கள் நீக்கியுள்ளனர். இதை சுன்னத் என்றும் அழைப்பார்கள். ஆங்கிலத்தில் circumcision என அழைப்பதுண்டு.
அதாவது பிறப்புறுப்பின் மேல் உள்ள தோல், சிறுநீர் கழிக்கும் வழியை மூடிக் கொள்ளும். சில நேரங்களில் அந்த முன் தோலில் வெடிப்பு ஏற்பட்டு லேசான புண் ஏற்படுவதும் உண்டு. இதனால் மருத்துவர்கள் சுன்னத் எனும் அறுவைச் சிகிச்சையை பரிந்துரைக்கிறார்கள்.
மாற்றி அறுவை சிகிச்சை செய்தது தொடர்பாக மருத்துவர் முகமது ஓவைசியிடம் சிறுவனின் பெற்றோர்கள் கேள்வி எழுப்பி வாக்குவாதம் செய்தனர். அதற்கு மருத்துவர் மற்றும் தனியார் மருத்துவமனை நிர்வாகமும் உரிய விளக்கத்தை அளிக்கவில்லை என குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
மேலும் தனியார் மருத்துவமனை நிர்வாகத்திற்கு ஆதரவாக ஜமாத்தை சேர்ந்த 10 -க்கும் மேற்பட்ட நபர்கள் சிறுவனின் பெற்றோரை மிரட்டும் தொனியில் பேசியதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து சென்னை ஐஸ் ஹவுஸ் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அது போல் அறுவை சிகிச்சையின் போது உடனிருந்த செவிலியர்களிடமும் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தி அறுவை சிகிச்சை கூடத்திற்கு சீல் வைத்தனர். இநத நிலையில் வாய் புண்ணுக்கு சுன்னத் அறுவை சிகிச்சை செய்த மருத்துவரை கைது செய்ய சிறுவனின் பெற்றோரும் உறவினர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications