உஷார்! புறா வளர்ப்பு.. குஜராத் பெண்ணுக்கு கொடூர பாதிப்பு! சென்னை மருத்துவமனையில் நுரையீரல் ஆப்ரேஷன்
சென்னை: புறா வளர்ப்பால் ஐஎல்டி- ILD எனப்படும் மிக மோசமான நோயால் பாதிக்கப்பட்ட குஜராத் பெண்ணுக்குச் சென்னையில் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
நம்மில் பலரும் புறாக்களைக் கண்டாலே குஷியாகிவிடுவோம். கூட்டமாகப் பறக்கும் புறாக்களைப் பார்த்துக் கொண்டே இருந்தால் நேரம் போவதே தெரியாது. பலரும் இப்படி கூட்டமாக இருக்கும் புறாக்களுக்கு உணவு தருவதை வாடிக்கையான ஒன்றாகவே வைத்திருக்கிறார்கள்.

பாவம் வாயில்லை ஜீவனுக்கு உதவுவதாகவே இவர்கள் நினைக்கிறார்கள். ஆனால், உண்மையில் புறாக்கள் மற்றும் அதன் எச்சங்கள் மூலமும் மிகவும் ஆபத்தான நோய்களும் ஏற்படுகிறது. இதைப் பெரும்பாலானோர் அறிவதில்லை. அப்படியொரு சம்பவம் தான் இப்போது நடந்துள்ளது.
என்ன நடந்தது: சென்னையில் குரோம்பேட்டை பகுதியில் உறுப்பு மாற்றுச் சிகிச்சைக்குச் சர்வதேச அளவில் புகழ்பெற்ற மருத்துவமனை ஒன்று இருக்கிறது. இங்கே interstitial lung disease எனப்படும் ஐஎல்டி நோயால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் அனுமதிக்கப்பட்டிருந்தார். 42 வயதான இவர் குஜராத்தைச் சேர்ந்த திம்பால் ஷா என்பவர் ஆகும். ஐஎல்டி நோயால் இவரது நுரையீரல் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக அவருக்குக் கடினமான மிகவும் சிக்கலான இரட்டை நுரையீரல் உறுப்பு மாற்றுச் சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டது. தேவையான அனைத்து மருத்துவ சோதனைகளும் செய்யப்பட்ட நிலையில், அதன் பிறகு சமீபத்தில் தான் அந்த பெண்ணுக்கு இந்த ஆப்ரேஷன் செய்யப்பட்டது. பல மணி நேரம் நடைபெற்ற ஆப்ரேஷனை மருத்துவர்கள் வெற்றிகரமாக முடித்துள்ளனர்.
ஆப்ரேஷன்: இந்த பெண்ணுக்கு இந்த பாதிப்பு சமீபத்தில் தான் ஏற்பட்டுள்ளது. அதற்கு முன்பு வரை அவரது உடல்நிலை நல்ல நிலையிலேயே இருந்துள்ளது. இருப்பினும், இவரது வீட்டின் அருகே புறாக்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது. அதன் கழிவுகள் மற்றும் எச்சங்களில் காரணமாகவே இவருக்கு இந்த மோசமான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சரியான நேரத்தில் ஆப்ரேஷன் செய்யப்பட்டதால் அவரது உயிர் இப்போது காப்பாற்றப்பட்டுள்ளது.
இது குறித்து மருத்துவமனையின் சேர்மன் பேராசிரியர் முகமது ரேலா கூறுகையில், "நாம் வாழும் சுற்றுச்சூழல் ரொம்பவே முக்கியம். நம்மைச் சுற்றி இருக்கும் சூழலை நாம் நன்றாகப் பராமரிக்க வேண்டும். பறவை கழிவுகளால் மோசமான ஆபத்துகள் ஏற்படும்.. ஆண்டுக் கணக்கில் பறவைகள் கழிவுகள், எச்சங்கள், தூசி அதிகம் இருக்கும் இடங்களில் வாழும் நபர்களுக்கு நுரையீரலில் பாதிப்பு ஏற்படும்..
மோசமான பாதிப்பு: அதுவும், சரிசெய்யவே முடியாத அளவுக்கு மோசமான பாதிப்பு இதனால் ஏற்படும்.. மிகை உணர்திறன் மூச்சுப்பை அழற்சி, சுவாசப்பாதை செயலிழப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படும் ஆபத்துகள் ரொம்பவே அதிகம். இதனால் இதுபோல பறவைகள் எச்சங்கள் அதிகம் இருக்கும் பகுதியில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்" என்று அவர் தெரிவித்தார்.
ஒரே ஒரு புறாவால் ஆண்டுக்கு சுமார் 12 கிலோ கழிவுகளை உற்பத்தி செய்யும் முடியும்.. புறாக்களின் கழிவுகள் இயல்பாகவே ஆசிட் கொண்டவையாகும். இவை கட்டிடங்கள் மற்றும் நினைவுச் சின்னங்களைக் கூட சேதப்படுத்தும் ஆபத்து இருக்கிறது. இது சால்மோனெல்லா கிருமிகளையும் பரப்புகிறது. இவை தான் ஐஎல்டி பாதிப்பையும் ஏற்படுத்துகிறது. இந்தியாவில் புறாக்கள் மற்றும் அதன் எச்சங்களில் இருந்தே இந்த பாதிப்பு ஏற்படுகிறது.
அறிகுறிகள்:மூச்சுத் திணறல், சளியே இல்லாத உலர் இருமல், மிகுந்த சோர்வு மற்றும் பலவீனம், பசியின்மை, எடை இழப்பு, நெஞ்சு வலி, நுரையீரலில் ரத்தப்போக்கு ஆகியவை இதன் முக்கிய அறிகுறிகளாகும்.












Click it and Unblock the Notifications