மலம் கருப்பா வருதா? 6 மணி நேரமா சிறுநீர் போகலையா? ஆபத்தாகும் முன் சுதாரிங்க.. டாக்டர் பரூக் விளக்கம்
சென்னை: கேரளாவில் டெங்கு காய்ச்சல் நோய் அதிகமாக பரவி வருவதாகவும் இந்த நோயை சரியாக கவனிக்காவிட்டால் பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் என்றும் டாக்டர் பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து டாக்டர் பரூக் அப்துல்லா தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: கேரளாவில் கொரோனா ஆதிக்கம் செலுத்திய கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவு தற்போது பருவ கால டெங்கு ஜுரம் அதிகமாகியுள்ளது. திருவனந்தபுரம், எர்ணாகுளம், திருச்சூர், மலப்புரம் , கோழிக்கோடு, கொல்லம் ஆகிய மாவட்டங்களில் டெங்கு ஜுரம் அதிகமாகக் கண்டறியப்பட்டு வருகிறது.

டெங்கு ஜுரம் பாதித்தவர்கள் எண்ணிக்கை கடந்த ஆண்டை ஒப்பிடும் போது தற்போது 132% அதிகமாகியுள்ளது. தற்போது கேரளாவில் டெங்கு பாதிப்பு மிக அதிகமாக உள்ளதாலும் ஏடிஸ் எனும் கொசு கடிப்பதால் இந்த நோய் பரவுவதாலும் கேரளாவிற்கு பயணம் செல்பவர்கள்/ அங்கு இருப்பவர்கள் கொசுக்கடியில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ளவும்.
தற்சமயம் கேராளாவிற்கு அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்த்துக் கொள்வது நல்லது. கேரள மாநிலத்திற்கு அண்டை மாநிலமான நாமும் இது குறித்த விழிப்புணர்வுடன் இருப்பது மிக முக்கியம். எல்லையோர மாவட்டங்களில் வசிப்பவர்கள் காய்ச்சலை கவனத்துடன் அணுக வேண்டியது முக்கியம். டெங்கு ஒரு வைரஸ் காய்ச்சலாகும். நான்கு வகையான டெங்கு வைரஸ்கள் இந்தியாவில் இனங்காணப்பட்டுள்ளன.
இதில் ஒரு வைரஸ் மூலம் ஒருவர் டெங்கு தொற்று ஏற்கனவே பெற்றிருந்தாலும் ஏனைய மூன்று வகை மூலம் மீண்டும் தொற்றுக்கு உள்ளாகலாம் என்பதால் ஏற்கனவே டெங்கு ஜுரம் ஏற்பட்டவர்கள் இன்னும் மேலதிக கவனத்துடன் இருக்க வேண்டும். தற்போது கேரளாவில் இரண்டாம் வகை டெங்கு வைரஸ் தொற்றுகளை அதிகமாக ஏற்படுத்தி வருகிறது.
டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஒருவரை ஏடிஸ் கொசு கடிக்கும் போது அந்த கொசுவிடம் வைரஸ் தொற்றிக் கொள்ளும்.
அந்த கொசு ஆரோக்கியமான நபரை கடிக்கும் போது கொசுவிடம் இருந்து ஆரோக்கியமான நபருக்கு வைரஸ் பரவும். கர்ப்பிணித் தாயிடம் இருந்து பிரசவிக்கும் சிசுவுக்கு நஞ்சுக்கொடி வழி டெங்கு பரவும். வேறு எந்த வழிகளிலும் டெங்கு பரவாது. இந்த நோயைப் பரப்பும் கொசு சுத்தமான நீரில் மட்டுமே முட்டையிடும். எனவே நமது வீடுகளில் வீட்டை சுற்றியுள்ள இடங்களில் காலியான பேப்பர் கப்கள், பாட்டில்கள், சிரட்டைகள், டயர்கள் , மரப்பொந்துகள் என மழை நீர் சிறிது தேங்கினாலும் முட்டை இட்டு விடும்.
ஏனைய கொசுக்கள் இரவில் கடிக்கும் ஆனால் ஏடிஸ் கொசு பகல் நேரத்தில் கடிக்கும் தன்மை கொண்டது.
பெரும்பாலும் சாதாரண வைரஸ் காய்ச்சலாக வந்து செல்லும். எனினும் சிலருக்கு உதிரப்போக்கை ஏற்படுத்தும் அபாயகரமான டெங்கு ஜுரமாகவும் நூறில் ஓரிருவருக்கு டெங்குவினால் ஏற்படும் ஷாக் நிலை எனும் உயிருக்கு பாதிப்பு ஏற்படுத்தும் நிலையாகவும் வாய்ப்புண்டு.
இந்த நோயின் அறிகுறிகள்
- மிக அதிகமான உடல் உஷ்ணம்
(>102° ஃபேரன்ஹீட்) முதல் மூன்று நாட்கள் தீவிரமாக இருக்கும் காய்ச்சல் திடீரென இல்லாமல் போகும்.
நான்காவது நாளில் இருந்து பாதம், உள்ளங்கை போன்றவை குளிரும். இது ஆபத்தான அறிகுறியாகும்.
- வயிற்று வலி
- குறைவாக சிறுநீர் கழித்தல்
- அதீத உடல் வலி / மூட்டுகளில் தீவிர வலி / அதீத குறுக்கு வலி
- அதீத உடல் சோர்வு / அசதி
- குமட்டல் /வாந்தி
- வயிற்றுப் போக்கு
- உடல் முழுவதும் செந்நிற படை தோன்றுவது
- கண்களுக்குள் வலி
- ஈறுகளில் ரத்தக்கசிவு
- மலம் கருப்பாக வெளியேறுவது
இத்தகைய அறிகுறி இருப்பவர்கள் சுயமருத்துவம் செய்து நாட்களைக் கடத்தாமல் மருத்துவரை நாடி உடனடியாக வந்திருப்பது எந்த வகையான காய்ச்சல் என்பதை உறுதி செய்து முறையான சிகிச்சை பார்ப்பது நல்லது.
டெங்கு ஜுரம் இருக்கும் போது வலி நிவாரணங்களை மாத்திரையாகவோ ஊசியாகவோ போடுவது உயிருக்கு ஆபத்து விளைவிக்கக்கூடும்.
- நீர்ச்சத்தை சரியாக பராமரிக்க நீர் சார்ந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும்.
- ஓ.ஆர்.எஸ் திரவம் பருகி வர வேண்டும்.
- காய்ச்சலுக்குரிய மாத்திரையை மருத்துவர் பரிந்துரையின் பேரில் வழங்கி வர வேண்டும்.
அபாய அறிகுறிகள்
- அதீத வயிற்று வலி
- அதீத உடல் சோர்வு / உடல் அசதி
- ஆறு மணிநேரத்திற்கு மேல் சிறுநீர் கழிக்காமல் இருப்பது
- மலம் கருப்பாக வெளியேறுவது
- ஈறுகளில் ரத்தக்கசிவு
போன்றவை இருப்பின் உடனடியாக மருத்துவமனையில் சேர்ந்து உள்நோயாளியாக சிகிச்சை பெற வேண்டும். பலரும் நினைப்பது போல டெங்கு ஜுரம் என்பது ரத்த தட்டணுக்களின் குறைபாடு உண்டாக்கும் நோய் அன்று. மாறாக டெங்கு வைரஸுக்கு எதிராக உடல் நடத்தும் யுத்தத்தின் விளைவாக நமது உடலில் ஏற்படும் கொலேட்டரல் டேமேஜ் ( நமது பக்க பாதிப்பு) தான் டெங்கு நோய் நிலையின் முக்கியமான அம்சம்.
ரத்த நாளங்களுக்குள் இருக்க வேண்டிய நீர்ச்சத்து அதை விட்டும் வெளியே கசிவது. நுண் ரத்தநாளங்கள் வழி ரத்தக்கசிவு ஏற்படுவது, தட்டணுக்கள் எனப்படும் ப்லேட்லெட்ஸின் செயல்திறனில் ( Dengue is not the disease of platelet deficiency but disease of platelet dysfunction) பிரச்சனை. அதனால் ஏற்படும் உதிரப்போக்கு இவை தான் டெங்குவில் பிரச்சனை. முறையான மருத்துவ சிகிச்சை என்பது நீர்ச்சத்து இழப்பை ஈடுசெய்வதே ஆகும். விரைவில் அறிகுறிகளை கண்டுகொண்டு சிகிச்சை அளிப்பதே சாலச்சிறந்தது. இவ்வாறு டாக்டர் பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications