டாட்டூ அரக்கன்..வாழ்வை சீரழிக்கும் போதை ஊசி! தமிழகத்தில் திடீரென அதிகரித்த ஹெச்ஐவி!
சென்னை: தமிழ்நாடு சட்டசபையில் நேற்று பேசிய சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தமிழகத்தில் ஆறு மாதத்தில் 25 ஆயிரம் பேருக்கு எச்ஐவி பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தரும் தகவலை கூறி இருக்கிறார். இந்த நிலையில் திடீரென நோய்த் தொற்று பரவுவதற்கு போதை ஊசி பழக்கமும், டாட்டூ போடும் பழக்கமும் காரணமாக இருக்கலாம் என எச்சரிக்கிறார் மருத்துவர் சீனிவாசன்.
தமிழக சட்டசபையில் நேற்று பேசிய மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தமிழகத்தில் ஒரு லட்சத்து 54 ஆயிரத்து 908 நபர்கள் ஹச்ஐவி தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற தகவலை கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர் கடந்த ஆறு மாதங்களில் மற்றும் சுமார் 25 ஆயிரம் பேருக்கு எச்ஐவி பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக கூறியது பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. அதில் இளைஞர்கள் அதிகம் இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக ஒன் இந்தியா தமிழ், என்ஜிஓக்கள், தன்னார்வலர்கள், மருத்துவர்கள் ஆகியோரிடம் தொடர்ந்து பேசி வருகிறது. இந்த நிலையில் திடீரென இளைஞர்களிடையே எச்ஐவி பாதிப்பு அதிகரிக்க டாட்டூ போடும் பழக்கமும், போதை ஊசி பழக்கமும் கூட காரணமாக இருக்கலாம் என்கிறார் மருத்துவர் சீனிவாசன். இது தொடர்பாக ஒன் இந்தியா தமிழிடம் பேசிய அவர்,"திடீரென இளைஞர்களிடையே எச்ஐவி பாதிப்பு அதிகரித்து வருவதற்கு போதைப் பழக்கமும் ஒரு காரணமாக இருக்கலாம்.
முன்பெல்லாம், பாலியல் திரவங்கள் ரத்தம் உள்ளிட்டவை மூலம் மட்டுமே எச்ஐவி பாதிப்பு பரவுவதும் தற்போது உடல் சார்ந்த எச்ஐவி பாதிப்பு பரவுவதும் விழிப்புணர்வால் குறைந்திருக்கிறது. அதே நேரத்தில் இளைஞர்களுடைய அதிகரித்திருக்கும் போதை பழக்கமும், டாட்டூ போடும் பழக்கமும் எச்ஐவி பாதிப்பு அதிகரிக்க காரணம். நிறைய இளைஞர்களுக்கு தங்களுக்கு எப்படி எச்ஐவி பாதிப்பு வந்தது என்பதை தெரியாத அளவுக்கு பாதிப்பு இருக்கிறது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நாங்கள் ஒரு கல்லூரியில் ரத்ததான முகாம் நடத்திய போது. அங்கு குறிப்பிட்ட சில இளைஞர்களுக்கு எச்ஐவி பாதிப்பு இருந்தது தெரியவந்தது. அவர்களை அழைத்து கவுன்சிலிங் கொடுத்த போது தங்களுக்கு போதைப் பொருள் பழக்கமோ அல்லது உடல் சார்ந்த பாலியல் செயல்பாடுகளோ இல்லை என தெரிவித்தனர். ஆனால் ஒரே ஒரு நாள் தாங்கள் போதை ஊசி பயன்படுத்தியதை ஒப்புக்கொண்ட அவர்களுக்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது மாதிரி தங்களுக்கு பாதிப்பு இருக்கிறது என்று தெரியாமலேயே பல இளைஞர்கள் தங்கள் உடல்நிலையை கெடுத்து வருகின்றனர்.
மேற்கு கேரளாவில் இந்த ஆண்டு ஒரே பகுதியைச் சேர்ந்த 25 இளைஞர்களுக்கு போதை ஊசி போடும் பழக்கம் இருந்ததும் அவர்களில் பலருக்கு எச்ஐவி பாதிப்பு இருப்பதும் தெரிய வந்தது. மேலும் அவர்கள் மூலம் உடல்ரீதியாக பலருக்கும் எச்ஐவி பாதிப்பு ஏற்பட்டு இருக்கலாம். தற்போது ஒரே போதை ஊசியை பலர் பகிர்ந்து கொள்வதால் இந்த பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை எச்ஐவி பாதிப்பு முற்றிலுமாக குறைந்துவிட்டது என்று எண்ணுவதை விட மீண்டும் அது தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம்.
அதே நேரத்தில் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் டாட்டூ போடுவது ஒரு பெரிய விஷயமாக காட்டப்படுகிறது. இதனால் கவரப்படும் இளைஞர்கள் குறைந்த விலையில் டாட்டூ போடும் கடைகளுக்கு சென்று வருகின்றனர். அவை முறையாக சுத்திகரிக்கப்பட்ட ஊசிகளா ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்படுகிறதா என்பதை கவனிக்க வேண்டும். இல்லையென்றால் காலத்துக்கும் சிரமம் தான்" என்கிறார்.
( எச்ஐவி பாதிப்பு தொடர்பாக தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்கள், மருத்துவர்கள், நோய் பாதிக்கப்பட்டவர்களிடம் ஒன் இந்தியா தமிழ் பேசியது. அந்த கட்டுரைகள் அடுத்தடுத்து வெளியாகும் )












Click it and Unblock the Notifications