"ஓவர் வேலை உடம்புக்கு ஆகாது.." இத்தனை மணி நேரத்திற்கு மேல் வேலை செய்தால் மரணம் கூட ஏற்படும்! அலர்ட்
ஹைதராபாத்: பொதுவாகவே பல்வேறு நிறுவனங்களின் சிஇஓக்களும் தங்கள் ஊழியர்கள் அதிக நேரம் வேலை செய்ய வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள். ஆனால், ஒரு வாரத்திற்கு அதிக நேரம் வேலை செய்வது உடலில் பல வகையான பாதிப்புகளை ஏற்படுத்தும் எனப் பிரபல நரம்பியல் வல்லுநர் எச்சரித்துள்ளார். மேலும், எவ்வளவு நேரம் வேலை செய்வது பாதுகாப்பானது என்பதையும் அவர் விளக்கியுள்ளார்.
ஒரு வாரத்திற்கு 70 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்று இன்போஸிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி சொன்னது சர்ச்சையானது. அவரது கருத்தை இணையத்தில் நெட்டிசன்கள் பலரும் விமர்சித்தனர்.

இருப்பினும், அவர் தனது கருத்தில் உறுதியாக இருந்தார். நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த இளைஞர்கள் ஒரு வாரத்திற்கு 70 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்பதே நாராயணமூர்த்தியின் கருத்தாக இருந்தது.
சர்ச்சை: அதேபோல பிரபல ஒலா நிறுவனத்தின் தலைவர் பவிஷ் அகர்வாலும் நாரயணமூர்த்தியின் கருத்துகளை ஆமோதித்தார். நீண்ட நேரம் வேலை செய்வதை ஊக்குவிக்கும் வகையில் அவர் பேசியிருந்தார். இருப்பினும் இதுபோல நீண்ட நேரம் வேலை செய்வது உடலுக்கு மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் சில நேரங்களில் அவை மரணத்தை ஏற்படுத்தும் ஆபத்தும் உள்ளதாக ஹைதராபாத்தைச் சேர்ந்த நரம்பியல் வல்லுநர் சுதிர் குமார் எச்சரித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "நீண்ட நேரம் வேலை செய்வது பல தீவிர நோய்கள் மட்டுமின்றி அகால மரணத்தைக் கூட அதிகரிக்கும் அபாயம் இருக்கிறது. பல்வேறு ஆய்வு முடிவுகள் அதையே தான் காட்டுகிறது. வாரத்தில் 35-40 மணி நேரம் வேலை செய்வோருடன் ஒப்பிடுகையில் வாரத்திற்கு 55 மணி நேரம் அல்லது அதற்கு மேல் வேலை செய்வோருக்குப் பக்கவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்பை 35 சதவிகிதம் வரை அதிகரிக்கிறது.
பாதிப்பு: இதனால் இஸ்கிமிக் என்ற இதய நோயால் இறக்கும் ஆபத்தும் 17 சதவிகிதம் வரை அதிகரிக்கிறது. ஒரு வாரத்திற்கு 55 மணி நேரத்திற்கு மேல் வேலை செய்வதால் ஆண்டுக்கு 8 லட்சம் வரை உயிரிழப்புகள் ஏற்படுகிறது. இதுபோல நீண்ட நேரம் வேலை செய்வது உடல் பருமன், ப்ரீடியாபயாட்டீஸ் மற்றும் டைப் 2 நீரிழிவு நோய்க்கான வாய்ப்பை அதிகரிக்கிறது. இதனால் பல்வேறு நோய்களும் ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கிறது. மரணங்கள் முன்கூட்டியே ஏற்படுவதும் அதிகரிக்கிறது.
என்ன காரணம்: அதிலும் வாரத்திற்கு 69 மணி நேரம் அல்லது அதற்கு மேல் வேலை செய்வோருக்கு மனச்சோர்வு அதிகரிக்கும். ஒரு நிறுவனத்தின் சிஇஓவாக இருப்போர் தங்கள் நிறுவனத்தின் லாபத்தை அதிகரிக்கவும் மற்றும் செல்வத்தைக் குவிக்கவும் தான் இதுபோல அதிக நேரம் வேலை செய்ய வேண்டும் என ஊழியர்களிடையே பரிந்துரைக்கிறார்கள். ஆனால், அது ஊழியர்களுக்கு நல்லது இல்லை. மேலும், ஊழியர்கள் நோய்வாய்ப்பட்டால், அவர்களை எளிதாக மாற்றிவிட முடியும்.
ஒர்க் லைஃப் பேலன்ஸ்: ஊழியர்கள் மீது அக்கறையுள்ள மற்றும் நியாயமான வேலை நேரத்தைக் கொண்ட ஒரு நிறுவனத்தைத் தேர்ந்தெடுப்பது உங்கள் உடல் நலனைக் காக்க உதவும். மேலும், இது ஒர்க் லைஃப் பேலன்ஸையும் நமக்குத் தரும்" என்று பதிவிட்டுள்ளார். அதாவது ஒரு வாரத்திற்கு 35-40 மணி நேரம் வேலை செய்வது உடலுக்கு நல்லது. அதேநேரம் 55 மணி நேரத்தைத் தாண்டினால் அது மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தலாம் என்பதே அவரது கருத்தாகும்.












Click it and Unblock the Notifications