Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வேலையைக் காட்டும் கொரோனா.. வேலைக்கு ஆகுமா இந்திய தடுப்பூசிகள்? அதென்ன ஜேஎன்-1? ’வூ’ என்ன சொல்கிறது?

Subscribe to Oneindia Tamil

சென்னை: கடந்த சில மாதங்களாக கொரோனா தொடர்பான செய்திகள் வெளியாகாத நிலையில் தற்போது சிங்கப்பூர், ஹாங்காங், தாய்லாந்து உள்ளிட்ட ஆசியாவின் சில பகுதிகளில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருகிறது. குறிப்பாக ஜேஎன்-1 எனப்படும், ஓமிக்ரான் BA.2.86 என்ற துணை வேரியண்ட் மிக வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில் புதிய வகை கொரோனா வைரஸுக்கு எதிராக ஏற்கனவே மக்கள் செலுத்திக்கொண்ட தடுப்பூசிகள் பயன் தருமா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

2019 ஆம் ஆண்டு சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் சுகாதார ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பலத்த சேதத்தை ஏற்படுத்தியது. லட்சக்கணக்கான மக்கள் கொரோனா காரணமாக தங்கள் உயிர்களை இழந்தனர்.

தொடர்ந்து உயர்தர மருத்துவம், தடுப்பூசி ஆகியவற்றின் காரணமாக கொரோனா வைரஸ் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இடையில் கொரோனா வைரஸ் மாறுபாடு அடைந்து புதிய வேரியண்டுகளாக மக்களிடையே பரவியது. இருந்தும், சில மாதங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பாக எந்தவித தகவலும் உலகளாவிய அளவில் வரவில்லை.

corona virus COVID 19 Vaccine

கொரோனா பரவல்:

இந்த நிலையில் திடீர் சிக்கலாக ஆசியாவின் சில பகுதிகளில் மீண்டும் கொரோனா பரவல் உருவாகியுள்ளது. சிங்கப்பூர், ஹாங்காங், சீனா, தாய்லாந்து ஆகிய நாடுகளில் புதிய கொரோனா வைரஸ் மாறுபாடு பரவி வருவதால் தொற்று பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. JN.1 எனப்படும் ஒமைக்ரான் BA.2.86 என்ற துணை வேரியண்ட் மிக வேகமாக பரவுவதால் மருத்துவ உலகம் அதிர்ச்சியில் உள்ளது.

சிங்கப்பூர் கொரோனா:

சிங்கப்பூரில் மட்டும் மே மாத தொடக்கத்தில் 14,000க்கும் மேற்பட்ட புதிய தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாத இறுதியில் இது 11,100ஆக இருந்தது. மருத்துவமனைகளில் சேரும் நோயாளிகள் அதிகரித்துள்ள நிலையில், ஆறுதல் அளிக்கும் விதமாக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மட்டும் சற்று குறைந்துள்ளது. தற்போதைய கொரோனா மாறுபாடுகள் முந்தையதை விட அதிகமாக பரவும் திறன் கொண்டதா என்பது குறித்து இன்னும் உறுதிப்படுத்தவில்லை என்றாலும், நோய் எதிர்ப்பு சக்தி குறைவு காரணமாகவே புதிய கொரோனா அலையை சந்திக்க நேர்ந்துள்ளதாக மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

ஜேஎன் -1 கொரோனா:

இந்த நிலையில், பல்வேறு நாட்டு மருத்துவ நிபுணர்களும் புதிய ஜேஎன் -1 கொரோனா வேரியண்ட் குறித்து ஆய்வு செய்து வருகிறார்கள். இது பிஏ.2.86 வைரஸின் தொடர்ச்சி எனவே கூறுகின்றனர். கடந்த சில வாரங்களுக்கு முன்னதாகவே உலக சுகாதார நிறுவனம் இந்த வைரஸை கவனத்திற்கு உரிய மாறுபாடு (Variant of Interest) என அறிவித்தது கவனிக்கத்தக்கது. ஜேஎன் 1 வைரஸ் பிஏ.2.86 வைரஸில் இருந்து கூடுதலாக 30 மாற்றங்களை பெற்றதாகவும், இது மனித நோய் எதிர்ப்பு சக்தியை தாண்டி வேகமாக பரவுகிறது என்கின்றனர்.

இந்தியாவில் கொரோனா:

இந்தியாவில் தற்போது கொரோனா தொற்றின் பரவல் பெரிய அளவில் இல்லை என கூறப்படுகிறது இந்திய சுகாதாரத்துறை கொடுத்துள்ள தகவலின் படி, மே 19, 2025 நிலவரப்படி இந்தியாவில் 93 கொரோனா நோயாளிகள் மட்டுமே உள்ளனர். மும்பையில் சிறிய அளவில் தொற்றுகள் அதிகரித்து வரும் நிலையில், இளம் வயதினருக்கு மட்டுமே எளிதாக பாதிப்பு ஏற்படுகிறது. ஆனால் பெரிய அளவிலான கொரோனா அலைக்கு அறிகுறிகள் இல்லை என சொல்லப்படுகிறது.

கொரோனா அறிகுறிகள்:

ஜேஎன் 1 வைரஸின் பாதிப்பு காரணமாக, பொதுவாக முந்தைய கொரோனா தொற்றுகளை போல் காய்ச்சல், தொண்டை வலி, மூக்கடைப்பு, தலைவலி, உடல் வலி, திடீர் களைப்பு, வாந்தி, வயிற்றுப்போக்கு போன்ற அறிகுறிகள் ஏற்படுத்தும். சிலருக்கு இது தீவிர களைப்பை ஏற்படுத்தக் கூடும். மூச்சுத்திணறல் என்பது மிகவும் கவனிக்க வேண்டிய அறிகுறியாகும். இது ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் என அறிவுறுத்துகின்றனர் சுகாதாரத்துறை வல்லுநர்கள்

தடுப்பூசிகள்:

உலகம் முழுவதும் தற்போது எக்ஸ்பிபி.1.5 எனப்படும் ஓமிக்ரான் துணை வேரியண்ட் வைரஸை எதிர்க்க XBB.1.5 Monovalent Booster எனப்படும் தடுப்பூசி பயன்படுத்தப்படுகிறது. இந்த தடுப்பூசி JN.1 மாறுபாட்டிற்கு எதிராக 19% முதல் 49% வரை பாதுகாப்பு அளிக்கக் கூடியது. இந்தியாவில் தற்போது XBB.1.5 Monovalent Covovax Booster மட்டுமே கிடைக்கிறது.

எச்சரிக்கை அவசியம்:

மற்ற நாடுகளில் Pfizer-BioNTech, Moderna, Novavax, Zapomeran போன்ற நிறுவனங்கள் ஜேஎன் - 1 உட்பட பல கொரோனா வைரஸ் மாறுபாடுகளுக்கு எதிராக தடுப்பூசிகளை வழங்கும் நிலையில், இந்த தடுப்பூசிகள் சிறப்பாக செயல்படும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. JN.1 மாறுபாடு முற்றிலும் புதியதாக இருக்கும் நிலையில், தடுப்பூசிகள் அளிக்கும் பாதுகாப்பு தொடர்பாக தொடர்ந்து ஆராய்ச்சியாளர்கள் கண்காணித்து வருகின்றனர். அண்டை நாடுகளில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் இந்தியாவில் பொதுமக்கள் தொடர்ந்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். கைகளை அடிக்கடி கழுவுதல், முகக்கவசம் அணிதல், தடுப்பூசி செலுத்திக் கொள்வது போன்ற அடிப்படை பாதுகாப்பு முறைகளை பின்பற்றுவது அவசியம் என்கின்றனர் சுகாதாரத்துறையினர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+