குரூப் 4 தேர்வு வரலாற்றில் இதுவே முதல்முறை.. டிஎன்பிஎஸ்சி செய்த 2 சூப்பர் சம்பவம்.. கவனித்தீர்களா?
சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.), அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை குரூப்-1, குரூப்-2, குரூப்-4 உள்ளிட்ட தேர்வுகள் மூலம் நிரப்பி வருகிறது. இதில் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், நேர்முக உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளை உள்ளடக்கி பணியிடங்களுக்கான ரிசல்ட் நேற்று வெளியானது. இதில் இரண்டு முக்கியமான விஷயம் நடந்துள்ளது. அதனை பார்ப்போம்.
தமிழ்நாட்டில் அரசு பணியில் சேர விரும்புவோர் அரசு பணியாளர் தேர்வாணையமான டிஎன்பிஎஸ்சி நடத்தும் குரூப்-1, குரூப்-2, குரூப்-4 உள்ளிட்ட தேர்வுகளை எழுத வேண்டும். அதில் வெற்றி பெறுபவர்களே அரசு ஊழியர்கள் ஆக முடியும். அந்த வகையில், கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், நேர்முக உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளை உள்ளடக்கி மொத்தம் 6,244 காலியிடங்களுக்கான போட்டித் தேர்வு அறிவிப்பினை டிஎன்பிஎஸ்சி கடந்த கடந்த ஜனவரி மாதம் 30-ந்தேதி வெளியிட்டது.

இந்த குரூப்-4 தேர்வுக்கு 20 லட்சத்து 36 ஆயிரத்து 777 பேர் விண்ணப்பித்து இருந்தார்கள். இவர்களுக்கான எழுத்துத்தேர்வு கடந்த ஜூன் மாதம் 9-ந்தேதி நடந்து முடிந்தது. இந்த குரூப் 4 தேர்வை 15 லட்சத்து 88 ஆயிரத்து 684 பேர் எழுதியிருந்தனர். 6 ஆயிரத்து 244 பணியிடங்களுக்கு 15 லட்சத்து 88 ஆயிரத்து 684 பேர் போட்டியிட்ட சூழலில், காலி இடங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க அரசு முடிவு செய்தது. இதன்படி கடந்த செப்டம்பர் மாதம் கூடுதலாக 480 இடங்களை அதிகரித்து டிஎன்பிஎஸ்சி உத்தரவிட்டது. அதன்பின்னர் மேலும் 2 ஆயிரத்து 208 இடங்கள் அதிகரிக்கப்பட்டது. இதன் மூலம் குரூப்-4 பணிகளுக்கான காலி இடங்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்து 932 ஆக உயர்ந்து இருந்தது. இந்த நிலையில், குரூப்-4 தேர்வு முடிவுகள் நேற்று காலை வெளியிடப்பட்டது,
இதுதொடர்பாக, அரசு பணியாளர் தேர்வாணையம் நேற்று வெளியிட்ட அறிவிப்பில், டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வர்கள் தங்களின் தரவரிசை மற்றும் மதிப்பெண்களை தேர்வாணையத்தின் https://tnpscresults.tn.gov.in மற்றும் www.tnpscexams.in என்ற இணையதளத்தில் பதிவெண், பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து அறிந்து கொள்ளலாம். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் செயல்பாடுகளில் வெளிப்படை தன்மையினை உறுதி செய்யும் வகையில் தேர்வர்கள் இந்த தேர்வில் பெற்ற மதிப்பெண்கள், அவர்களின் ஒட்டு மொத்த தரவரிசை, இன சுழற்சிக்கான தரவரிசை மற்றும் சிறப்பு ஒதுக்கீட்டிற்கான தரவரிசை ஆகியவை வௌியிடப்பட்டிருக்கிறது.
தற்போது, வெளியிடப்பட்டு உள்ள தரவரிசை, இணையவழி விண்ணப்பத்தில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்கள், உரிமைக்கோரல்கள், நியமன ஒதுக்கீட்டு விதிகளின் அடிப்படையில் தேர்வாணையத்தால் நிர்ணயிக்கப்படும் விகிதத்தில் தேர்வர்கள் சான்றிதழ்கள் சரிபார்க்கும் நிலைக்கு தேர்வு செய்யப்படுவார்கள். சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வு செய்யப்படுபவர்களின் பட்டியல், விரைவில் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளது. அந்த தேர்வர்களின் செல்போனுக்கு குறுஞ்செய்தி அனுப்பி வைக்கப்படும். அத்துடன் மின்னஞ்சல் வழியாகவும் விவரங்கள் தெரிவிக்கப்படும். மின்னஞ்சல், குறுஞ் செய்தி மூலம் மட்டுமே விவரம் தெரிவிக்கப்படும். தபால், கடிதம் வழியாக தகவல்கள் ஏதும் அனுப்பப்பட மாட்டாது. எனவே, தேர்வர்கள் தேர்வாணைய இணையதளத்தை தொடர்ந்து பார்வையிடுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்"
இவ்வாறு டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
இதில் கவனிக்க வேண்டிய இரண்டு விஷயங்கள் பற்றி பார்ப்போம். குரூப்-4 தேர்வு ஜூன் மாதம் 9-ந்தேதி நடத்தப்பட்டது. தற்போது, 2022-ம் ஆண்டை காட்டிலும், டிஎன்பிஎஸ்சி குரூப்-4 முடிவுகள் தற்போது 92 வேலை நாட்களுக்குள் வெளியிடப்பட்டுள்ளது. குரூப்-4 தேர்வு முடிவுகள் 92 நாட்களில் வெளியிடுவது இதுவே முதல்முறை யாகும். அதுமட்டுமல்ல, அறிவிக்கையில் வெளியானதைவிட காலிப்பணியிடங்கள் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டு உள்ளது.
குரூப்-4 தேர்வு அறிவிக்கை வெளியிடப்படும்போது காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 6,244 என்று மட்டுமே அறிவிக்கப்பட்டது. அதன்பிறகு, தேர்வர்களுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில், அடுத்தடுத்து 2 முறை காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு, 8 ஆயிரத்து 932 ஆக உயர்த்தப்பட்டது. இந்த சூழலில் தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடும்போதே, குரூப்-4 தேர்வர்களுக்கு இன்ப அதிர்சசியாக அமைந்தது, ஏனெனில் 3வது முறையாக காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை உயர்த்தப்பட்டது. அதாவது 559 கூடுதலாக சேர்த்து, 9 ஆயிரத்து 491 ஆக உயர்த்தப்பட்டது. அதன்படி இந்த முறை 9491 பேர் குரூப் 4 ஊழியர்களாக தேர்வு செய்யப்படுகிறார்கள். சான்றிதழ் சரிபார்ப்புக்கு தயாராகலாம்.












Click it and Unblock the Notifications