அரசு பணி.. தமிழ் படித்தவர்களுக்கு ஜாக்பாட்.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
சென்னை: டிஎன்பிஎஸ்சி நடத்தும் தேர்வுகளில் தமிழ் மொழித்தாள் தேர்வில் 40 சதவீத மதிப்பெண்கள் பெற்றால் மட்டுமே, பொது அறிவு மற்றும் திறனறிவு தேர்வுத்தாள் மதிப்பீடு செய்யப்படும் என்ற தமிழக அரசின் அரசாணை சரியானது தான் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டிஎன்பிஎஸ்சி என்று சுருக்கமாக அழைக்கப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கடந்த 2021 முதல் அரசு தேர்வு எழுத தமிழ் கண்டிப்பாக தெரிய வேண்டும் என்று நிபந்தனை விதித்தது. இது தொடர்பாக தமிழக அரசு அசாரணை பிறப்பித்தது. அதாவது தமிழ்நாடு அரசுப் பணியாளர் பணி நிபந்தனைச் சட்டத்தில், 2021-ம் ஆண்டு திருத்தம் கொண்டு வரப்பட்டிருந்தது. இதன்படி, அரசுப் பணிக்கு நடக்கும் தேர்வில், தமிழ் மொழித் தாளில் 40 சதவீத மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

இந்த சட்டத் திருத்தத்தின் அடிப்படையில், அரசுப் பணிக்கான தேர்வுகளில் தமிழ் மொழித்தாள் தேர்வில் 40 சதவீத மதிப்பெண்கள் பெற்றால் மட்டுமே பொது அறிவு மற்றும் திறனறிவு தேர்வுத்தாள் மதிப்பீடு செய்யப்படும் என முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு, கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் அரசாணை பிறப்பித்தது.
தமிழக அரசின் இந்த அரசாணையின் அடிப்படையில், தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 6 ஆயிரத்து 244 குரூப்-4 பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், கடந்த ஜனவரி மாதம் அறிவிப்பு வெளியிட்டது.
இந்நிலையில் தமிழக அரசின் இந்த அறிவிப்பாணையை எதிர்த்தும், தமிழ் மொழித் தாள் தேர்வில் 40 சதவீத மதிப்பெண்கள் பெற்றால் மட்டுமே பொது அறிவு, திறனறிவு தேர்வுத்தாள் மதிப்பீடு செய்யப்படும் என்ற அரசாணையை எதிர்த்தும் நிதேஷ் என்பவர் உள்பட 10 பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் வாதிடும் போது, 'தமிழ் மொழித்தாள், பொது அறிவு, திறனறிவு தேர்வுத் தாள்கள் என இரு பகுதிகளாக, தலா 150 மதிப்பெண்களுக்கு தேர்வுகள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஆங்கில வழியில் படித்த விண்ணப்பதாரர்கள் பாதிக்கப்படுவார்கள். தமிழ் வழியில் படித்தவர்களுக்கு ஏற்கனவே 20 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இப்படியான சூழலில் புதிய அரசாணையின் மூலம் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு மேலும் சலுகை வழங்குவது போன்றதாகி விடும் என்று வாதிட்டனர்.
தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை அரசு வக்கீல், 'தமிழ்நாடு அரசுப் பணியாளர் பணி நிபந்தனை சட்டத்தில் கொண்டு வரப்பட்ட திருத்தத்தின் அடிப்படையில் ஏற்கனவே சில தேர்வுகள் நடத்தப்பட்டு விட்டது. மேலும் இது அரசின் கொள்கை முடிவு. இதில் நீதிமன்றம் தலையிட முடியாது. எனவே, இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்' என வாதிட்டார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: விண்ணப்பதாரர்களுக்கான கல்வித் தகுதியை நிர்ணயிக்க தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது. குரூப்-4 பதவிகளை வகிப்பவர்கள், மக்களுடன் நேரடியாக தொடர்பு கொள்ள தமிழ் மொழியில் புலமை பெற்றிருப்பது அவசியம் என்ற தலைமை அரசு வழக்கறிஞரின் வாதம் சரியானதுதான்.
தமிழ் மொழித்தாள் தேர்வில் 40 சதவீத மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று மட்டுமே அரசு கூறுகிறதே தவிர, 100 சதவீத மதிப்பெண்கள் பெற வேண்டும் என வற்புறுத்தவில்லை. அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது" இவ்வாறு நீதிபதி தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications