பொதுப் பணித்துறைக்கு உலகவங்கி ரூ 200 கோடி நிதியுதவி
கோவை:
பொதுப்பணித் துறைக்கு உலக வங்கி ரூ. 200 கோடி நிதியுதவி அளிக்க ஒப்புதல் அளித்துள்ளது என மாநில பொதுப்பணித் துறை அமைச்சர் துறைமுருகன்தெரிவித்துள்ளார்.
பொள்ளாச்சியில் பரம்பிக்குளம் ஆழியாறு விவசாயிகளின் இணை இயக்க துவக்க விழா நடந்தது. இந்த விழாவில் உழவர் உழைப்பாளர் கட்சித் தலைவரும்தென்னை வளர்ச்சி வாரிய உறுப்பினருமான செல்லத்துரை, மற்றும் மாநிலப் பொதுப் பணித் துறை அமைச்சர் துறைமுருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
விழாவில் அமைச்சர் துறை முருகன் பேசியதாவது:
தமிழகத்தில் பொதுப் பணித் துறையின் செயல்பாடுகள் திருப்திகரமாக அமைந்துள்ளன. இதனைப் பார்வையிட்ட உலக வங்கியின் நிதிக்குழுவும் திருப்திதெரிவித்துள்ளது.
இடைமலையாறு அணை கட்டி முடிக்கப்பட்ட பிறகு தான், நல்லாறு அணை கட்ட வேண்டும் என ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளதாக கேரளா கூறுகிறது.இடைமலையாறு கட்டி முடிக்கப்படவில்லை என்றும் கேரளா கூறி வருகிறது. ஆனால், இடைமலையாறு கட்டி முடிக்கப்பட்டு விட்டது.
மேல்நீராறு அணையிலிருந்து வரு நீரை திருப்பி நல்லாறு அணை கட்டலாம் என கேரளாவிடம் ஒப்புதல் கேட்டால் பதிலே இல்லை. பேச்சுவார்த்தை மூலம்பிரச்னையைத் தீர்க்கலாம் என்ற அணுகுமுறையில் தான் நாங்கள் செயல்பட்டு வருகிறோம். சட்டத்தின் மூலம் தான் தீர்க்க வேண்டும் என்றால்,நீதிமன்றத்திற்குச் செல்லவும் தமிழக அரசு தயாராக உள்ளது.
பரம்பிக்குளம் ஆழியாறு கால்வாய் சீரமைப்பிற்கு அரசு 140 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. இதில் 110 கோடி ரூபாய் செலவிடப்பட்டுவிட்டது.சுமார் 200 கிலோமீட்டர் தூரம் உள்ள வாய்க்கால் தூர் வாரப்பட்டுள்ளது.
பொதுப் பணித் துறைக்கு உலகவங்கி அளித்த 90 கோடி ரூபாய் நிதியுதவியைத் தமிழக அரசு தான் பயனுள்ள முறையில் செலவிட்டுள்ளது. எனவே, இதில்திருப்தியடைந்த உலக வங்கி மேலும் 200 கோடி ரூபாய் நிதியுதவி அளிக்க ஒப்புதல் அளித்துள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications