த.மா.கா. வந்தால் வரவேற்போம் .. கருணாநிதி
சென்னை:
தி.மு.க கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் சேர முன்வந்தால் வரவேற்போம் என்று முதல்வர் கருணாநிதி சென்னையில் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
சென்னையில் முதல்வர் கருணாநிதி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
பாட்டாளி மக்கள் கட்சி, தேதிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து விலகி விட்டதால் எங்களுக்கு எந்தப் பாதிப்பும் கிடையாது. எங்கள் கட்சி இந்தத்தேர்தலில் மக்களின் ஆதரவுடன் அமோக வெற்றி பெறும்.
தி.மு.க கூட்டணிக்கு த.மா.கா.வந்தால் அதை நாங்கள் வரவேற்போம். சபாநாயகர் பழனிவேல்ராஜன் தனிப்பட்ட முறையில் த.மா.கா.கூட்டணிக்குஅழைப்பு விடுத்துள்ளார்.
தமிழக சட்டசபை கூட்டத்தொடர் நடந்த போது கூட கல்வி அமைச்சர் அன்பழகன், நாடு நலம் பெற வேண்டுமானால் தமிழ் மாநில காங்கிரஸ், தி.மு.க வுடன்கூட்டுச் சேர வேண்டும் என்று அழைப்பு விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மூப்பனாரும், நானும் சந்தித்துப் பேச வாய்ப்பு ஏற்பட்டால் சந்தித்துப் பேசுவோம். ராமதாசும், வாழப்பாடியும் ஒருவரையொருவர் தாக்கி அறிக்கைகள்விடுவதைப் போல, எனக்கும், மூப்பனாருக்கும் இடையே எவ்விதப் பிரச்சனையும் கிடையாது. கொள்கை ரீதியாகத்தான் எங்கள் இருவருக்கும்இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
இப்போது நாங்கள் இருப்பது தேசிய ஜனநாயகக் கூட்டணி. இந்தக் கூட்டணியில் எந்த மதத்திற்கும் இடம் கிடையாது. இதைப் பலமுறை எடுத்துக்கூறியிருக்கிறோம். ஆற்காடு வீராசாமி, மூப்பனாரை ரகசியமாக சந்தித்ததாக கூறுகிறார்கள். ரகசியமாகச் சந்திக்கும் பழக்கம் தி.மு.க வுக்குக்கிடையாது.
விடுதலை சிறுத்தைகள், புதிய நீதிக்கட்சி, மக்கள் தமிழ் தேசம் போன்ற கட்சிகள் எல்லாம் தி.மு.க வுடன் வர முயற்சிக்கலாம். அவர்கள் தி.மு.க வுடன்சேர முயற்சித்தால் பொதுக்குழுவில் ஆராய்ச்சி செய்து முடிவெடுப்போம். தி.மு.க கூட்டணியில் பாரதிய ஜனதா கட்சி இரண்டாவது இடத்தில் இருக்கும் என்றுகூறியிருக்கிறது. தொகுதிப் பங்கீடு பற்றி பேசும்போதுதான் அதுபற்றியெல்லாம் பேசப்படும்.
பா.ம.க. தி.மு.க விலிருந்து வெளியேறியது ஜெயலலிதாவின் வெற்றி என்று கூறுகிறார்கள். இதற்கெல்லாம் என்னால் பதில் கூற முடியாது. ஒருபூகம்பம் வந்தது. அந்த பூகம்பத்தில் ஏற்பட்ட பாதகங்களை சரி செய்ய இந்திய நாடே கைகோர்த்து நிற்கிறது.
இந்த நேரத்தில் ஓரிரு அமைச்சர்கள் பதவி விலகுவதால் அங்கு நடைபெற வேண்டிய துயர் துடைப்புப் பணிகளோ, ஆக்கபூர்வமான வேலைகளோபாதிக்கப்படாது. துயர்துடைப்புப் பணிகளைத் தடைபடாமல் பார்த்துக் கொள்வது இந்தியாவில் உள்ள மாநில அரசுகளுக்கும் பங்கு உண்டு.
தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கட்சியின் தலைவர் என்ற முறையில் ராமதாஸ், வாழப்பாடி ராமமூர்த்தி பிரச்சனையைத் தீர்த்து வைத்திருக்கலாம் என்றுகூறுகிறார்கள். விஞ்ஞானத்தால் கூட சில விஷயங்களை நம்மால் முன்கூட்டியே தீர்மானிக்க முடியாது. அதனால் சில விஷயங்கள் நடப்பதை நம்மால்முன்கூட்டியே தீர்க்க முடியாது.
பிப்ரவரி 16 ம் தேதி தி.மு.க பொதுக்குழுக் கூட்டம் கூடுகிறது. அப்போது தமிழக சட்டசபைத் தேர்தலில் எந்தெந்தக் கட்சிகளுடன் கூட்டணி வைத்துக்கொள்ள வேண்டும் என்பது குறித்து விவாதிக்கப்படும் என்றார் கருணாநிதி.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications